மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகேயுள்ள வைத்தீஸ்வரன் கோயிலில் மணிப்பூர் மாநில ஆளுநரும், மேற்கு வங்க மாநில பொறுப்பு ஆளுநருமான இல.கணேசன், தன் சகோதரர் கோபாலன் குடும்பத்துடன் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தார். வைத்தீஸ்வரன் கோயிலில் வைத்தியநாதசுவாமி தையல்நாயகி அம்மன், செல்வமுத்துக்குமாரசாமி, அங்காரகன், தன்வந்திரி ஆகிய சுவாமி சந்நதிகளில் அர்ச்சனை செய்து வழிபாடு மேற்கொண்டார்

முன்னதாக கோயிலுக்கு வருகை புரிந்த ஆளுநர் இல.கணேசனை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, மாவட்ட எஸ்.பி.நிஷா ஆகியோர் புத்தகம் கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் ஆளுநர் இல.கணேசனுக்கு கோயில் கட்டளை விசாரணை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் பூர்ண கும்ப மரியாதை மற்றும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் இல.கணேசனிடம், ``தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்து வருகிறதே?" என்று எழுப்பிய கேள்விக்கு, ``என்னை யாரும் திரும்பப் பெற வேண்டுமெனக் கூறவில்லை, தமிழக அரசியல் பற்றி இனிதான் படிக்க வேண்டும்" என்றார்.

தஞ்சாவூரைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான இல.கணேசன், தனக்கு தமிழக அரசியல் பற்றி தெரியாது எனக் கூறியது அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.
ஆளுநர் வருகையையொட்டி வைத்தீஸ்வரன் கோயிலில் சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் லாமெக் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மேலும் படிக்க ``என்னை யாரும் திரும்பப் பெற வேண்டுமெனக் கூறவில்லை; தமிழக அரசியல் பற்றி இனிதான்..!" - இல.கணேசன்