மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரை சேர்ந்தவர் ஷில்பா(25). இவரின் தோழன் அபிஜித் படிதார். அபிஜித், ஷில்பாவை ஜபல்பூரின் புறநகர் பகுதியில் இருக்கும் ரிசார்ட் ஒன்றுக்கு அழைத்து சென்றார். அங்கு இருவரும் அறை எடுத்து தங்கினர். அறையில் தங்கி இருந்த போது அபிஜித், ஷில்பாவை கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளார். கொலை செய்த பிறகு அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். முதலில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் அபிஜித், `துரோகம் செய்யாதே’ என்று பேசுகிறார். பின்னர் அருகில் கிடந்த போர்வை ஒன்றை விலக்குகிறார். உள்ளே ஷில்பா கழுத்து அறுபட்டு கொலை செய்யப்பட்டுக்கிடந்தார்.
இரண்டாவது வீடியோவில் தான் பாட்னாவை சேர்ந்த வியாபாரி அபிஜித் என்றும், கொலை செய்யப்பட்டுக்கிடக்கும் ஷில்பா எனது தொழில் பார்ட்னர் ஜிதேந்திர குமாருடன் தொடர்பு வைத்திருந்தார். ஷில்பா ஜிதேந்திர குமாரிடம் ரூ.12 லட்சம் வாங்கிக்கொண்டு ஜபல்பூருக்கு ஓடிவிட்டார். ஜிதேந்திர குமார் கேட்டுக்கொண்டதால் நான் ஷில்பாவை கொலை செய்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாவது வீடியோவில், `அன்பே, நாம் மீண்டும் சொர்க்கத்தில் சந்திப்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஜிதேந்திராவின் உதவியாளர் சுமித் பட்டேல் பெயரையும் குறிப்பிட்டுள்ளார். போலீஸார் ஷில்பாவின் உடலை ரிசார்ட் அறையில் இருந்து பறிமுதல் செய்துள்ளனர். அதோடு ஜிதேந்திராவும், சுமித் பட்டேலும் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அபிஜித் தலைமறைவாகிவிட்டார். அவரை கைது செய்ய மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத்திற்கு தனிப்படைகள் அனுப்பப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி பிரியங்கா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ``ரிசார்ட்டில் அபிஜித்தான் அறை எடுத்து தங்கி இருக்கிறான். இரவில் கூட தனியாகவே இருந்தான். காலையில் ஷில்பா வந்து அபிஜித்தை பார்த்தார். இருவரும் சாப்பாடு ஆர்டர் செய்து சாப்பிட்டனர். ஒரு மணி நேரம் கழித்து அபிஜித் மட்டும் தனியாக சென்றுவிட்டார். நீண்ட நேரம் கதவு திறக்கப்படாததால் ஊழியர்கள் கதவை திறந்து பார்த்த போது பெண் கொலை செய்யப்பட்டுக்கிடந்தார்” என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க `அன்பே, சொர்க்கத்தில் சந்திப்போம்' - தோழியை கொன்று, அதனை வீடியோவாக வெளியிட்ட வாலிபர்