விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டியை சேர்ந்தவர் மகேஸ்வரன். கூலி வேலை செய்து வருகிறார். இவரின் மகன் கவி தேவநாதன் (வயது 6). சிறுவன் கவி தேவநாதனுக்கு கடந்த இரண்டு தினங்களாக காய்ச்சல் இருந்துள்ளது. இதனால் சிறுவனை, ராஜபாளையம் சம்மந்தபுரம் பகுதியில் கிளினிக் நடத்திவரும் அரசு மருத்துவர் பாஸ்கரனிடம் சிகிச்சைக்காக மகேஸ்வரன் அழைத்து சென்றுள்ளார். அங்கு, சிறுவன் கவி தேவநாதனுக்கு காய்ச்சல் குணமடைய ஊசிப்போடப்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவர்கள் வீடு திரும்பியுள்ளனர். வீட்டிற்கு சென்றதும் சிறுவன் கவி தேவநாதனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அதிக வியர்வை வெளியேறியுள்ளது. இதனால் பதறிப்போன மகேஸ்வரன் மற்றும் குடும்பத்தினர் சிறுவனை மீண்டும் மருத்துவர் பாஸ்கரனிடம் காண்பிப்பதற்காக அழைத்து சென்றுள்ளனர். அப்போது சிறுவனை பரிசோதித்த மருத்துவர், உடனே அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கவி தேவநாதனை, ராஜபாளையம் - தென்காசி சாலையில் உள்ள அரசுப் பொது மருத்துவமனைக்கு அவரின் தந்தை மகேஸ்வரன் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் கதறி அழுத மகேஸ்வரன், ``தனது மகன் இறப்புக்கு மருத்துவர் அளித்த தவறான சிகிச்சைத்தான் காரணம். எனவே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்” என ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில் சிறுவன் கவி தேவநாதனின் உடல் பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விவகாரம் விருதுநகர் மாவட்ட சுகாதாரத்துறையிலும் பெரும் புயலை கிளப்பியது. எனவே, சிறுவன் இறந்த சம்பவம் தொடர்பாக விருதுநகர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இணை இயக்குநர் டாக்டர்.முருகவேல், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் கலு சிவலிங்கம், நகராட்சி நகர் நலஅலுவலர் சரோஜா உள்ளிட்ட அதிகாரிகள் மகேஸ்வரன் வீட்டில் ஆய்வு நடத்தினர். மேலும் சிறுவனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்தும் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். அதிகாரிகளின் இந்த விசாரணையில் அரசு மருத்துவர் பாஸ்கரனிடம், சிறுவனுக்கு சிகிச்சை பெறுவதற்கு முன்னர், வீட்டருகே உள்ள பெண் மருந்தாளுநர் ஆக்னெஸ்ட் கேத்ரின் என்பவரிடம் கவி தேவநாதனுக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, பெண் மருந்தாளுநர் ஆக்னெஸ்ட் கேத்ரின் வீட்டுக்கு சென்ற அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் மருந்தாளுநர் ஆக்னெஸ்ட் கேத்ரின் என்பவர் முறையான மருத்துவப்படிப்பு, அங்கீகாரம், சான்றிதழ் என எதுவும் இன்றி பல வருடங்களாக அப்பகுதி மக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. இதுகுறித்து, இணை இயக்குநர் முருகவேல் அளித்த புகாரின்பேரில் போலி பெண் மருத்துவர் ஆக்னெஸ்ட் கேத்ரின் கைது செய்யப்பட்டார். மேலும், அவரின் வீட்டிலிருந்து ஏராளமான ஆங்கில மருந்து மாத்திரைகள், சத்து டானிக்குகள், வலி நிவாரணிகள், இருமல் மற்றும் காய்ச்சலுக்கான மருந்துகள், இன்சுலின் மற்றும் ஸ்ட்ரீராய்டு மருந்துகள், பயன்படுத்தப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படாத ஊசிகள் என நூற்றுக்கும் மேற்பட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மருந்துகளின் தரம், காலாவதியாகும் தேதி உள்ளிட்டவை குறித்து மருந்துகள் ஆய்வாளர் பால்ராஜா ஆய்வு நடத்தினார்.

இந்தநிலையில், உடற்கூராய்வு வந்த பின்னரே சிறுவனின் இறப்புக்கான உண்மையான காரணம் குறித்து தெரியவரும் என மருத்துவக் குழுவினர் கூறினர். மேலும், காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட நோய்களுக்கு தனக்குத்தானே மருந்துகள் எடுக்கவேண்டாம். அதேசமயம், போலி மருத்துவர்களை அணுகாமல், அருகே உள்ள அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் எனக்கேட்டுகொண்டனர்.
மேலும் படிக்க ராஜபாளையம்: தவறான சிகிச்சைக்கு சிறுவன் பலி - போலி பெண் மருத்துவர் கைது