தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம், குமாரசாமி நகரைச் சேர்ந்தவர் ஜோன்ஸ். அவரின் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும், அதை சரிசெய்ய ’KYC Update’ செய்ய வேண்டும் எனக் கூறி அவரது கைபேசிக்கு லிங்குடன் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அந்த லிங்க்கினை க்ளிக் செய்து தன்னுடைய இண்டர்நெட் பேங்கிங் பயனாளர் பெயர், கடவுச்சொல் மற்றும் OTP ஆகியவற்றைப் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து அவருடைய வங்கிக்கணக்கில் இருந்து ரூ.1,24,500 பணம் எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜோன்ஸ், National Cybercrime Portal என்ற சைபர் கிரைம் இணையதள முகவரியில் புகாரினைப் பதிவு செய்துள்ளார்.

அதே போல, தூத்துக்குடியைச் சேர்ந்த மற்றொருவருக்கு அமேசானில் பரிசுப் பொருள் விழுந்துள்ளதாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரின் கைபேசிக்குத் தொடர்புகொண்டு, அந்தப் பரிசினைப் பெறுவதற்கு ரூ.25,000 பணம் செலுத்த வேண்டும் எனக் கூறி, கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்திட அவருக்கு ஒரு லிங்கினை அனுப்பியுள்ளார்.
அந்த லிங்கினை கிளிக் செய்து அவர், தனது கிரெடிட் கார்டு எண்ணையும், OTP எண்ணையும் கொடுத்துள்ளார். இதனை அடுத்து அவரது கிரெடிட் கார்டில் இருந்து ரூ.4,38,238 பணம், மோசடியாக எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவரும் National Cybercrime Portal என்ற சைபர் கிரைம் இணையதள முகவரியில் புகாரினைப் பதிவு செய்துள்ளார்.
இருவர் அளித்த புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் லயோலா இக்னேஷியஸின் மேற்பார்வையில் சைபர் குற்றப்பரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினரின் விசாரணையில், ஜோன்ஸ் என்பவர் இழந்த பணம் அவருடைய வங்கிக்கணக்கு மூலம் ஃப்ளிப்கார்ட் இணையதளத்தில் சில பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டிருந்தந்து கண்டுபிடிக்கப்பட்டது. தூத்துக்குடி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இருந்து ஃப்ளிப்கார்ட் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டதன் மூலம் ஆர்டர் செய்யப்பட்ட பொருள்கள் ரத்து செய்யப்பட்டு ரூ.99,500 திரும்பப் பெறப்பட்டது.
அதே போல, மற்றொருவர் இழந்த பணம் அவருடைய கிரெடிட் கார்டு அமேசான் இணையதளத்தில் பொருள்கள் கொள்முதல் செய்திருப்பது கண்டறியப்பட்டது. அமேசான் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் மூலம் ஆர்டர் செய்யப்பட்ட பொருள்கள் ரத்து செய்யப்பட்டு, ரூ.2,20,295 பணம் திரும்பப் பெறப்பட்டது. இருவருக்கும் மீட்கப்பட்ட பணத்தினை மாவட்ட எஸ்.பி முனைவர். பாலாஜி சரவணன் ஒப்படைத்தார்.

இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வங்கியில் இருந்து பேசுகிறோம், உங்களது கணக்கு விவரம், ஏ.டி.எம் கார்டு, கிரெடிட் கார்டு விவரங்களைச் சொல்லுங்கள் என போனில் யாராவது பேசினாலோ, பரிசு விழுந்திருக்கிறது என தங்களின் செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தாலோ அதற்கு பதில் அளிக்க வேண்டாம். முகம் தெரியாத நபர்கள் அனுப்பும் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம். வங்கி அதிகாரி போல் பேசி யாரும் ஓ.டி.பி கேட்டாலும் அதை பகிர வேண்டாம். சைபர் குற்ற மோசடியாளர்களிடமிருந்து பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்” என்றார்.
பரிசு விழுந்திருக்கிறது என்று ஆசை காட்டினால், உஷாராகுங்கள் மக்களே!
மேலும் படிக்க அமேசானில் பரிசு என எஸ்.எம்.எஸ் அனுப்பி மோசடி... அதிரடியாக மீட்ட தூத்துக்குடி சைபர்கிரைம் போலீஸ்!