திண்டுக்கல் அருகே சிலுவத்தூரைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் மனைவி லெட்சுமி (35). நேற்றிரவு 7:30 மணிக்கு சக்திவேல், லட்சுமி இருவரும் ரோட்டோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக டூவீலரில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் சிவக்குமார் இவர்கள் மீது இடித்துவிட்டு சென்றுள்ளார்.

அப்போது சக்திவேலும், லெட்சுமியும் சிவக்குமாரை திட்டியுள்ளனர். இதில் இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடி தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முடிந்து அவரவர் வீடுகளுக்குச் சென்றனர். இருப்பினும் ஆத்திரம் தீராத சிவக்குமார், அதே பகுதியிலுள்ள சக்திவேலின் வீட்டிற்குச் சென்று மீண்டும் தகராறில் ஈடுபட்டார். அப்போது கையில் வைத்திருந்த சாக்கு தைக்கும் கோணி ஊசியால் லெட்சுமியின் கழுத்தில் ஓங்கி குத்தினார்.
இதில் பலத்த காயமடைந்த லெட்சுமி, அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு கீழே விழுந்தார். சக்திவேல் மற்றும் அருகே இருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் லெட்சுமி உயிரிழந்தார். தகவலறிந்த சாணார்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி தலைமறைவாகியுள்ள லாரி டிரைவர் சிவக்குமாரை தேடி வருகின்றனர்.

இது குறித்து சாணார்பட்டி போலீஸாரிடம் விசாரித்தோம். ``குடிபோதையில் டூவிலரில் வந்த சிவக்குமார், நடந்து சென்ற தம்பதி மீது மோதியுள்ளார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. போதையில் இருந்த சிவக்குமாரை, தம்பதி திட்டியுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த சிவக்குமார் தனது வீட்டிற்குச் சென்று சாக்கு தைக்கும் ஊசியை மறைத்து எடுத்து வந்து லெட்சுமியின் கழுத்தில் குத்திவிட்டு தப்பியுள்ளார். தலைமறைவாகிவிட்ட அவரை தேடி வருகிறோம். இதில் இருவருக்குள்ளும் வேறு பிரச்னைகள் அல்லது முன்விரோதம் ஏதும் இருக்கிறதா எனவும் விசாரித்து வருகிறோம் என்றனர்.
அடிதடி தகராறில் இளம்பெண் சாக்கு தைக்கும் ஊசியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் சிலுவலத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க திண்டுக்கல்: சாக்கு தைக்கும் ஊசியால் இளம்பெண் குத்திக் கொலை -தலைமறைவான டிரைவருக்கு போலீஸ் வலைவீச்சு!