முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்துப் பேசியவர், ``தொண்டர்களுடைய நலனுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம் தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். தொண்டர்களுடைய நலனுக்காகத் தான் அதனுடைய 50 ஆண்டுகால பரிணாம வளர்ச்சி இருந்திருக்கிறது. சில சில பிரச்னைகள் இடையே வரும் போகும். பொறுத்திருந்து பாருங்கள். இன்றைக்கு அனைத்து தொண்டர்களும் ஒருங்கிணைந்து ஒற்றுமையாக இருக்கின்றார்கள். கட்சித் தலைமையில் பிரச்னை இருப்பது போன்ற ஒரு மாயத்தோற்றம் உருவாகியிருக்கிறது. அது போகப் போக சரியாகிவிடும். பாரதப் பிரதமர் அவர்கள் தமிழகத்திற்கு வரவிருக்கிறார்கள். உரிய வாய்ப்பு கிடைத்தால் அவரை சந்திப்போம்.

அ.தி.மு.க., கூட்டணி அமைத்தால் அதில் நானும் இணையத் தயார் என டி.டி.வி.தினகரன் கூறியிருப்பது நல்ல கருத்து தான். வரவேற்கத்தக்கது. தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் அண்ணன் தம்பி இயக்கம் தான். ஆனால், நாங்கள் மாறுபட்ட பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். அ.தி.மு.க.,வை பிரிக்க வேண்டுமென பா.ஜ.க., நினைக்கிறது என்று சொல்வதில் எனக்கு நம்பிக்கையில்லை. எங்களை யாரும் மிரட்ட முடியாது. நாடாளுமன்றத் தேர்தல் அ.தி.மு.க.,விற்கு மாபெரும் வெற்றியை பெற்றுத் தரும். ஜனநாயக ரீதியிலும், வெளிப்படைத் தன்மையுடனும் அ.தி.மு.க., செயல்பட வேண்டும் என்பதைத் தான் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு வருகிறோம். எந்த நோக்கத்திற்காக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் கழக சட்டவிதிகளை உருவாக்கினாரோ, அந்த சட்டவிதிகளுக்கு ஒரு சின்ன மாசு, பங்கம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத் தான் இப்போது இந்த தர்மயுத்தம் நடைபெற்று வருகிறது" என்றார்.
மேலும் படிக்க ``தர்மயுத்தம் நடப்பதற்கான காரணம் இதுதான்..!' - திருச்சியில் ஓ.பி.எஸ் பேட்டி