கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில், கடந்த 2020 ஆம் ஆண்டு சிறப்பு எஸ்.ஐ வில்சன் என்பவர் பணியில் இருந்த போது, அவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த வழக்கில் தொடர்புடைய இரண்டு பேர் சேலம் மத்திய சிறையில் கைதிகளாக உள்ளனர். பின்னர் கைது செய்யப்பட்ட அப்துல் சமீம், தவ்பிக் ஆகிய இருவரும் தீவிரவாத கும்பலுடன் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கை என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான இவர்கள் மீது உபா சட்டமும் பாய்ந்தது. இவர்கள் இருவரும் சேலம் மத்திய சிறையில் உயர் பாதுகாப்பு தொகுதியில் தனித்தனியாக எதிர் எதிர் அறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, வாக்கி-டாக்கி சத்தம் அதிகமாக கேட்டுள்ளது. தனக்கு தூக்கம் கெடுவதாக கூறி சிறையின் கதவு கம்பியை அவர்களில் ஒருவர் தட்டியுள்ளார். அங்கு வந்த வார்டனிடம் சத்தத்தை குறைவாக வையுங்கள் எனக் கூறியுள்ளார்.

எதிர் அறையில் இருந்த மற்றொருவர் கம்பியை தட்டுவதால் எனக்கு தூக்கம் கெடுகிறது எனக் கூறியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. நேற்று காலையில் அறை திறக்கப்பட்டவுடன் இருவரும் வெளியே வந்துள்ளனர். அப்போது மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் முடியை பிடித்துக் கொண்டு சண்டையிட்டுக் கொண்டனர். அங்கு ஓடி வந்த வார்டன்கள் இருவரையும் விலக்கி சமாதானம் செய்தனர். இது குறித்து சிறை கண்காணிப்பாளர் தமிழ்செல்வனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் இருவரையும் அழைத்து கடும் எச்சரிக்கை செய்தார். மேலும் சிறைக்குள் நடத்தை விதிகளை மீறியதாக அவர்கள் உறவினர்களைச் சந்திக்க 3 மாதங்கள் தடை விதித்தும் உத்தரவிடப்பட்டதாக சொல்லப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறையில் கைதிகள் இருவருக்குள் நடந்த மோதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க சேலம் சிறை: காவலர் கொலை வழக்கில் கைதான கைதிகள் இடையே திடீர் மோதல் - அதிகாரிகள் தீவிர விசாரணை