Doctor Vikatan: என் மாமனாருக்கு வயது 65. மழை மற்றும் பனிக்காலம் வந்தாலே அவருக்கு வீஸிங் பிரச்னை வந்துவிடும். வீட்டிலேயே நெபுலைஸர் வாங்கிப் பயன்படுத்துவது சரியா? எத்தனை நிமிடங்கள் வரை பயன்படுத்தலாம்?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, பொது மருத்துவர் அருணாசலம்.

சம்பந்தப்பட்ட நபரால் மருந்தை சுவாசிக்க முடியாத நிலையில், வெளிப்புற வழியே மருந்தை உள்ளே அனுப்புகிற மெஷின்தான் நெபுலைஸர். அதாவது சம்பந்தப்பட்ட நபர் சுவாசிக்க வேண்டியதில்லை. இந்த மெஷினே அந்த மருந்தைப் புகையாக்கி, அவரது சுவாசத்தில் எளிதில் சேர்த்துவிடும். பெரும்பாலும் வயதான நிலையில் உள்ள, சுவாசிக்க சிரமப்படுகிற நபர்களுக்கு இது நல்ல விஷயம்.
நெபுலைஸரில் கொடுக்கப்படும் மருந்துகளில் ஒன்று பிராங்கோடைலேட்டர் (Bronchodilator). இவை சுவாசத்தை எளிதாக்கும். மற்றொன்று மைல்டான ஸ்டீராய்டு. 65 வயதில் உங்கள் மாமனாரால் சுவாசிக்க முடியும் என்ற நிலையில் ரெவலைஸர் (Revolizer) என்ற கருவியைப் பயன்படுத்தலாம். இதுவும் கையடக்க கருவிதான். அதில் அந்தந்த நேரத்துக்கான டோஸேஜில் கேப்ஸ்யூலை போட்டு மூட வேண்டும். அப்போது அந்தக் கருவியே கேப்ஸ்யூலுக்குள் ஓட்டை போட்டுவிடும். இதை வாயில் வைத்து உறிஞ்ச வேண்டும். அதன் மூலம் மருந்து உள்ளே போகும்
எனவே நீங்கள் உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசித்து, உங்கள் மாமனாருக்கு ரெவலைஸர் பயன்படுத்துவது சரியாக இருக்குமா என்று கேட்கலாம். ஒருவேளை அதை அவரால் பயன்படுத்த முடியாத பட்சத்திலும், நீண்டகாலமாக வீஸிங் பிரச்னை இருக்கும் பட்சத்திலும், அவரால் சுவாசிக்க முடியாத பட்சத்திலும் நெபுலைஸர் பயன்படுத்தலாம்.

நெபுலைஸர் பயன்படுத்த நிமிடக் கணக்கு கிடையாது. அதில் விடப்படும் நீரானது ஆவியாகி, அதை சுவாசிக்க வைக்கும். மருத்துவர் பரிந்துரையின் பேரில் அதில் மருந்துகளைச் சேர்த்து அது ஆவியாகி, வெள்ளைநிற புகை வரும்வரை அதை அவர் சுவாசிக்க வேண்டியிருக்கும். வெறும் காற்று மட்டும் வரும் நிலையில் நெபுலைஸரை நிறுத்திவிட வேண்டும்.
இது எதையுமே நீங்களாக பரீட்சார்த்த முறையில் முயற்சி செய்து பார்க்காமல், மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, அவர் கற்றுத்தருவதை பின்பற்றுவதுதான் பாதுகாப்பானது. நெபுலைஸர் உபயோகிப்பதாகச் சொல்கிறவர்களின் பேச்சைக் கேட்டோ, இணையதளம் மற்றும் வாட்ஸ்அப் செய்திகளை நம்பியோ நீங்களாக முயற்சி செய்ய வேண்டாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
மேலும் படிக்க Doctor Vikatan: வீஸிங்கால் அவதிப்படும் மாமனார்... வீட்டிலேயே நெபுலைஸர் பயன்படுத்துவது சரியா?