Doctor Vikatan: நான் கடந்த 2 வருடங்களாக வொர்க் ஃப்ரம் ஹோமில்தான் இருக்கிறேன். வீட்டைவிட்டு வெளியே போவதில்லை. ஆனாலும் என் சருமம் கருத்துப்போவதை உணர்கிறேன். வீட்டிலிருக்கும்போதும் சன் ஸ்கிரீன் உபயோகிக்க வேண்டுமா? சரியான சன் ஸ்கிரீனை தேர்வு செய்வது எப்படி?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்

சன் ஸ்கிரீன் வாங்கும்போது அதில் எஸ்.பி.எஃப் (சன் புரொடெக்ஷன் ஃபேக்டர்) அளவைப் பார்த்து வாங்க வேண்டியது முக்கியம். சூரிய ஒளியில் அல்ட்ரா வயலட் ஏ, அல்ட்ரா வயலட் பி கதிர்கள், இன்ஃப்ரா ரெட் கதிர்கள் போன்றவை இருக்கும். அவை நம் சருமத்தில் படும்போது சருமம் பாதிப்புக்குள்ளாகும்.
இவற்றில் அல்ட்ரா வயலட் பி கதிர்களால் நம் சருமத்தில் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் வருகின்றன. சருமப் புற்றுநோய்க்கும் இவைதான் காரணம். ஆனால் இந்தியர்களைப் பொறுத்தவரை சருமப் புற்றுநோயால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் மிகக் குறைவு என்பதால் அது குறித்து பயப்பட வேண்டாம். ஆனாலும் நம் சருமத்தின்மீது வெயில் பட்டதும் சீக்கிரம் கருத்துப்போகவும் மங்கு எனப்படும் பிக்மென்ட்டேஷன் பாதிப்புக்கு உள்ளாகவும் இதனால் வாய்ப்புகள் அதிகம்.
இதன் தாக்கத்திலிருந்து பாதுகாக்கத்தான் எஸ்.பி.எஃப் அளவு முக்கியமாகிறது. நம்முடைய வானிலைக்கு எஸ்.பி.எஃப் அளவானது 30-க்கு மேல் இருக்கும்படி பார்த்துத் தேர்வுசெய்து உபயோகிப்பது சிறந்தது. அதற்காக அதிக அளவு எஸ்.பி.எஃப் இருக்கும் சன் ஸ்கிரீன் உபயோகித்தால் இன்னும் அதிக பாதுகாப்பு கிடைக்கும் என்று சொல்ல முடியாது.
அல்ட்ரா வயலட் ஏ கதிர்களின் தாக்கத்திலிருந்தும் நம் சருமத்தைக் காப்பாற்ற வேண்டும். இந்த வகை கதிர்களால் சருமத்தில் சுருக்கங்கள் அதிகம் வரவும், வெயில் பட்டதும் சருமம் கருத்துப்போகவும் வாய்ப்புகள் அதிகம். அதிலிருந்து நம் சருமத்தைக் காப்பாற்றுவதற்கும் சன் ஸ்கிரீனை தேர்வு செய்ய வேண்டும். அதற்கு சன் ஸ்கிரீனில் PA+++ என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.

நீச்சல் குளத்தில் இருக்கும்போதும், வியர்வை அதிகமிருக்கும்போதும் வாட்டர் ரெசிஸ்டன்ட் சன் ஸ்கிரீன் அல்லது ஸ்வெட் ப்ரூஃப் சன் ஸ்கிரீன் உபயோகிக்கலாம்.
இன்று பெரும்பாலானவர்கள் கம்ப்யூட்டர் முன் வேலை செய்கிறார்கள். எந்நேரமும் மொபைல் உபயோகிக்கிறார்கள். இவற்றிலிருந்தும் நீலநிற கதிர்கள் (ப்ளூ ரேஸ்) வெளியேறி சருமத்தைத் தாக்கும். இதன் தாக்கத்திலிருந்து தப்பிக்கவும் சன் ஸ்கிரீன் உபயோகிக்க வேண்டும். கதவு, ஜன்னல், கார் கதவுகள் வழியேகூட சூரிய வெளிச்சம் சருமத்தைத் தாக்கும் என்பதால் எப்போதும் சருமத்துக்குப் பாதுகாப்பு அவசியம். எனவே வொர்க் ஃப்ரம் ஹோமில் இருந்தாலும் சன் ஸ்கிரீன் உபயோகிக்க வேண்டியது அவசியம்.
சன் ஸ்கிரீனை ஒருமுறை உபயோகித்துவிட்டு அப்படியே விடக்கூடாது. ஒவ்வொரு மூன்று மணி நேரத்துக்கொரு முறையும் சன் ஸ்கிரீன் உபயோகிக்க வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சன் ஸ்கிரீன் உபயோகிக்கலாம். குழந்தைகளுக்கென மைல்டான பிரத்யேக சன் ஸ்கிரீன் கிடைக்கிறது.

இப்போது டின்ட்டடு சன் ஸ்கிரீன் என கிடைக்கின்றன. மேக்கப் போட்ட மாதிரியும் இருக்கும். கம்ப்யூட்டர், மொபைல் திரைகளைப் பார்த்தபடி வேலை செய்யும்போது அவற்றிலிருந்து வெளியேறும் கதிர்களில் இருந்து சருமத்தைக் காப்பாற்றக்கூடியவை இவை.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
மேலும் படிக்க Doctor Vikatan: வொர்க் ஃப்ரம் ஹோமில் இருப்பவர்களுக்கும் சன் ஸ்கிரீன் அவசியமா?