சிவகாசி மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேற்று முந்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய மாமன்ற உறுப்பினர் இந்திரா தேவி, ``பொதுமக்களுக்கு தீர்வைமாற்ற கோரிக்கையை நிறைவேற்றி தருவதற்கு அதிகாரிகள் மனு ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர். பொதுமக்களுக்கு சேவை செய்வதற்கு எதற்காக லஞ்சம் தர வேண்டும். ஒருவேளை லஞ்சம் கொடுத்தால் தான் மாநகராட்சியில் பணி நடக்கும் என்றால், எனது வார்டை சேர்ந்த 11 பேர் தீர்வை மாற்றத்திற்காக கோரிக்கை கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கான மொத்த லஞ்சம் பணம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தையும் நானே கொடுத்து விடுகிறேன்" என 500 ரூபாய் கட்டு ஒன்றை எடுத்து மேசை மீது வைத்தார். அதோடு மட்டுமில்லாமல், ``லஞ்சப்பணம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாயையும் யாரிடம் கொடுக்க வேண்டும் சொன்னால் கொடுத்துவிடுகிறேன்" எனக் அங்கிருந்த மாநகராட்சி வருவாய் ஆய்வாளர் கருப்பசாமியிடம் கேள்வியை முன் வைத்தார்.

இதற்கு பதில் அளித்த வருவாய் ஆய்வாளர் கருப்பசாமி, ``எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட ஆறு பேரின் மனுக்கள் சரிபார்க்கப்பட்டு ஒப்புதலுக்காக அதிகாரிகளின் மேசைக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டது. அதேசமயம், எனது கவனத்திற்கு வராத மனுக்களின் நிலைபற்றி எனக்குத் தெரியாது" என கூறினார்.
இதுத்தொடர்பாக விசாரணை நடத்தி, கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து, உறுப்பினர் இந்திரா தேவி வாதத்தை கைவிட்டு அமர்ந்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் செய்தி தொலைக்காட்சிகளிலும், தினசரி நாளிதழ்களிலும் செய்தியாக வெளியானது.

இந்தநிலையில், திருத்தங்கலில் உள்ள மாநகராட்சிக்குட்பட்ட வணிக வளாகத்தில் வருவாய் ஆய்வாளர் கருப்பசாமி மற்றும் அதிகாரிகள் குழுவினர் நேற்று பிற்பகலில் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது, மாநகராட்சி வணிகக்கட்டடத்தில் அலுவலகம் நடத்திவந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வைத்தியலிங்கம் மீது தாக்குதல் நடத்தி அவருடைய லேப்டாப் மற்றும் உடமைகளை அதிகாரிகள் தூக்கிவீசியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த செய்தியாளர் வைத்தியலிங்கம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதற்கிடையே, மாநகராட்சி அதிகாரி கருப்பசாமி மற்றும் குழுவினரின் அத்துமீறல்கள் தொடர்பான வீடியோவும் சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. அதிகாரிகளின் இந்த செயலுக்கு அரசியல் கட்சி தரப்பினரும், பத்திரிகையாளர்கள் சங்கங்களும் கடும்கண்டனங்கள் தெரிவித்துள்ளது. பத்திரிகையாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து பா.ம.க. சார்பில் மாநகராட்சி முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச்சம்பவம் தொடர்பாக செய்தியாளர் வைத்தியலிங்கம் தரப்பில், 'தீர்வை மாற்றத்திற்காக மாநகராட்சி அதிகாரிகள் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டது தொடர்பாக மாமன்ற கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதை நான் செய்தியாக வெளியிட்டேன். இதனால் ஆத்திரமடைந்த மாநகராட்சி வருவாய் ஆய்வாளர் கருப்பசாமி மற்றும் அதிகாரிகள் என் மீது தாக்குதல் நடத்தியதுடன், அலுவலகத்திற்குள் அத்துமீறி புகுந்து லேப்டாப் உள்ளிட்ட உடைமைகளை தூக்கி வீசி சேதப்படுத்தி உள்ளனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல வருவாய் ஆய்வாளர் கருப்பசாமி தரப்பிலும் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதில், 'மாநகராட்சிக்குக்குட்பட்ட வணிக கட்டடத்தில் பல ஆண்டுகளாக வரி செலுத்தாமல் இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக அதிகாரிகள் குழுவுடன் சென்றோம். அப்போது மாநகராட்சிக்கு கட்டடத்தில் செய்தியாளர் வைத்தியலிங்கம் முறைகேடாக அலுவலகம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து விசாரணை நடத்துகையில் எங்களை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கினார். எனவே செய்தியாளர் வைத்தியலிங்கம் இது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என புகாரளிக்கப்பட்டுள்ளது. இவ்விரு புகார்களின் மீதும் தனித்தனியே போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க சிவகாசி: செய்தியாளர் Vs வருவாய் ஆய்வாளர்... மாறி மாறி தாக்குதல் புகார் - நடந்தது என்ன?!