நெல்லை மாவட்டத்தில் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியொன்று செயல்பட்டு வருகிறது. சுற்றுப் புறப்பகுதிகளின் கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் அந்தப் பள்ளியில் படித்து வருகிறார்கள். அங்கு பயிலும் மாணவர்களிடையே பேருந்தில் இடம் பிடிப்பது உள்ளிட்டவற்றில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.

சில மாணவர்கள் சாதிய மனநிலையுடன் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வந்ததாகச் சொல்கிறார்கள். அது பற்றிய தகவல் கிடைத்ததும், அத்தகைய மாணவர்களை ஆசிரியர்கள் கட்டுப்படுத்தியதுடன், ஆலோசனைகளைக் கொடுத்து நல்வழிப்படுத்தியிருக்கின்றனர். ஆனாலும் அதே நிலை தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அண்மையில் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் விளையாட்டு நேரத்தில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது அங்கு வந்த 12-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவர் மீது மணல் பட்டிருக்கிறது. உடனடியாக மணல் படுவதுக்கு காரணமாக இருந்த நவீன் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) என்ற மாணவர் மன்னிப்பு கோரியிருக்கிறார். ஆனாலும் இருவருக்குள்ளும் மோதல் ஏற்பட்டிருக்கிறது. அதுவே கைகலப்பாகவும் மாறியிருக்கிறது.

இரு மாணவர்களும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த விவகாரம் பள்ளி மாணவர்களில் சிலருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார்கள். இந்த நிலையில், 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர் தன் நண்பர்கள் 15 பேருடன் சென்று 10-ம் வகுப்பறையில் இருந்த நவீனை அழைத்துச் சென்று தகராறு செய்திருக்கிறார்கள். பின்னர் அவர்கள் அனைவரும் சேர்ந்து அந்த மாணவனை சரமாரியாகத் தாக்கியிருக்கின்றனர். அதில் மாணவர் நவீனுக்கு தலை, கழுத்து, மார்பு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் அவர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
இதனிடையே, மாணவர்களுக்கு இடையே நடந்த தகராறு மற்றும் மோதலை ஆசிரியர்கள் தடுக்கத் தவறிவிட்டதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.
மேலும் படிக்க நெல்லை: 10-ம் வகுப்பு மாணவனை கும்பலாக தாக்கிய 12-ம் வகுப்பு மாணவர்கள்! - சாதிய மோதலா?