ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்றுவரும் பாரத் ஜோடோ யாத்திரை கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. கேரளா, கர்நாடகா, தெலங்கானா உள்பட பல மாநிலங்கள் வழியாக மேற்கொள்ளப்பட்ட இந்த யாத்திரை தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்றுவருகிறது.

கன்னியாகுமரியில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர். இந்த யாத்திரைக்கு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கிடைத்துவரும் வரவேற்பு, காங்கிரஸாரை உற்சாகப்படுத்தியிருக்கிறது. கட்சிக்கு அப்பால் ஏராளமான பொதுமக்கள் யாத்திரையில் ஆர்வத்துடன் கலந்துகொள்வதாக காங்கிரஸ் கட்சியினர் கூறுகிறார்கள்.
இந்த யாத்திரை நடைபெற்றுவரும் நேரத்தில்தான் குஜராத்திலும் இமாச்சலப்பிரதேசத்திலும் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றன. அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், யாத்திரையில் மட்டுமே தீவிர கவனம் செலுத்தினார், ராகுல் காந்தி. தேர்தல் பிரசாரத்தில்கூட பெரிதாக அவர் ஈடுபடவில்லை. அதேபோல, தற்போது நடைபெற்றுவரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரிலும் அவர் பங்கேற்கவில்லை. யாத்திரை மேற்கொண்டுவருவதால், நாடாளுமன்ற கூட்டத்தில் ராகுல் பங்கேற்கமாட்டார் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் முன்கூட்டியே தெரிவித்துவிட்டனர்.

பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தி இவ்வளவு ஆர்வம் காட்டிவரும் நிலையில், கடந்த 100 நாள்களில் இந்த யாத்திரை மூலம் ராகுல் காந்தி என்ன சாதித்திருக்கிறார் என்று பலரும் அலசிவருகிறார்கள். இந்த யாத்திரையில், சமூகசெயற்பாட்டாளர் மேதா பட்கர், பாடகர் டி.எம்.கிருஷ்ணா, மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்தி, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் போன்ற அரசியலுக்கு அப்பாற்பட்ட பல ஆளுமைகளும் ராகுல் காந்தியுடன் கைகோத்துவருகிறார்கள்.
சுமார் 2000 கி.மீ தூரத்தைக் கடந்து மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரை அடைந்தபோது, பத்திரிகையாளர்களிடம் சில கருத்துக்களை ராகுல் பகிர்ந்துகொண்டார். தன்னிடம் பாசிட்டீவான பல மாற்றங்களை இந்த யாத்திரை ஏற்படுத்தியிருப்பதாக ராகுல் கூறுகிறார். அதிகமான பொறுமையையும், மற்றவர்களின் கருத்துக்களை நிதாதனத்துடன் கேட்கக்கூடிய பக்குவத்தையும் இந்த யாத்திரை தனக்கு கொடுத்திருப்பதாக அவர் கூறுகிறார்.
‘பாரத் ஜோடோ யாத்திரை மூலம் ராகுல் சாதித்தது என்ன?’ என்ற கேள்வியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் கலைப்பிரிவுத் தலைவரும், மாநில செய்தித்தொடர்பாளருமான சந்திரசேகரிடம் முன்வைத்தோம்.
``ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு, சோனியா காந்தியும் அவருடைய குடும்பத்தினரும் அரசியலைவிட்டு ஒதுங்கியிருந்தனர். அப்போது, சீதாராம் கேசரி தலைமையில் காங்கிரஸ் செயல்பட்டது. காங்கிரஸ் கட்சி ஒரு சரிவை சந்தித்த நேரத்தில், சோனியா காந்தி அரசியலுக்கு வர வேண்டும் என்று கட்சியினர் அழைத்தனர். அதன் பிறகு, அவர் அரசியல் வந்தார். அப்போது, காங்கிரஸ் கட்சி வெறும் நான்கு மாநிலங்களில் ஆட்சியில் இருந்தது. சோனியா காந்தி வந்த பிறகு, 14 மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்தது.

ராகுல் காந்தி தன் தாய்க்கு உதவியாகவும் கட்சி வளர்ச்சிக்காகவும் அரசியலுக்கு வந்தார். பின்னர், கட்சியின் விருப்பத்தை ஏற்று நாடாளுமன்ற உறுப்பினரானார். 2004-ம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது, மத்திய அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு மன்மோகன் சிங்கும், கட்சித் தலைவர்களும் ராகுல் காந்தியிடம் வேண்டுகோள் வைத்தனர். அவர் அதை ஏற்கவில்லை. 2009-ம் ஆண்டு மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது, துணை பிரதமர் பதவியை ஏற்குமாறு ராகுல் காந்தியிடம் வேண்டுகோள் வைத்தபோது, அதையும் அவர் ஏற்க மறுத்தார்.
பதவி மீது விருப்பம் இல்லாத ராகுல் காந்தி, கட்சியின் நலன் கருதி கட்சித் தலைவர் பதவியை ஏற்றார். பிறகு, 2019-ல் ஏற்பட்ட நாடாளுமன்றத் தோல்வியைத் தொடர்ந்து தலைவர் பதவியிலிருந்து விலகிய ராகுல் காந்தி, நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் தலைவர் பதவிக்கு வர வேண்டும் என்று சொன்னார். இன்றுவரை அதில் அவர் உறுதியாக இருந்தார். அதனால், தற்போது நேரு குடும்பத்தைச் சாராத மல்லிகார்ஜுன கார்கே தலைவராகியிருக்கிறார்.
அதே நேரத்தில், அரசியலை விட்டு ராகுல் ஒதுங்கவில்லை. மாறாக, இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையில், மக்கள் தான் எஜமானார்கள் என்பதால், மக்களை நோக்கிச் செல்கிறோம் என்று யாத்திரை மேற்கொண்டுவருகிறார். அவர் யாத்திரை செல்லும் மாநிலங்களில் மிகுந்த எழுச்சியைக் காண முடிகிறது. காங்கிரஸ் ஆட்சி இல்லாத ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில்கூட லட்சக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டதைப் பார்த்தோம்.

ராகுல் காந்தியைப் பொருட்படுத்த வேண்டியதில்லை என்று கூறியவர்களும், பப்பு என்று அவரை கிண்டல் செய்தவர்களும், அவருடைய ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு பேட்டிக்கும் பதிலளித்துக்கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். பிரதமர் மோடி குஜராத்தில் பிரசாரத்தை ஆரம்பித்தபோது, ராகுல் காந்தியின் யாத்திரையைத்தான் குறிப்பிட்டு பேசினார். அது, இந்த யாத்திரைக்கு கிடைத்த வெற்றியாகப் பார்க்கிறோம். இந்திய அளவில் தவிர்க்க முடியாத தலைவராக அவர் உருவாகிவருகிறார் என்கிற அச்சம் அவர்களுக்கு ஏற்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.” என்றார்.
மேலும் படிக்க பாரத் ஜோடோ யாத்திரையில் 100 நாள்கள் - ராகுல் காந்தி சாதித்தது என்ன?!