நாமக்கல் மாவட்டம், மரூர்பட்டியைச் சேர்ந்தவர் முத்துராஜா (28). இவர், அங்குள்ள தனியார் கோழித்தீவன ஆலையில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், முத்துராஜா நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் தனது கணக்கில் இருந்து ரூ. 2 லட்சம் பணத்தை சொந்த தேவைக்காக எடுத்துள்ளார். பின்னர், அந்த பணத்தை தனது இருசக்கர வாகனத்தின் முன்பகுதியில் உள்ள கவரில் வைத்து கொண்டு, சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில், நாமக்கல் அருகே உள்ள முதலைப்பட்டி பகுதியில் முத்துராஜா சென்றபோது அவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனம் ஒன்றில் வந்த இரண்டு மர்ம நபர்கள், 'வண்டியை நிறுத்துங்க. உங்க வண்டியில் இருந்த பை தவறி கீழே விழுந்து விட்டது. நிறுத்தி அதை எடுங்க' என கூறி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துராஜா, தனது வாகனத்தை நிறுத்திவிட்டு, பின்னால் சென்று பார்த்ததாகச் சொல்லப்படுகிறது.

ஆனால், அங்கு எந்த பையும் இல்லாததைக் கண்டு குழம்பிய முத்துராஜா, திரும்ப தனது வாகனத்தை நோக்கி வந்துள்ளார். ஆனால், அதற்குள் அந்த இரண்டு மர்ம நபர்களும் அங்கிருந்து எஸ்கேப்பாகியுள்ளனர். இந்நிலையில், தனது வாகனத்தில் கவரை செக் செய்த அவர், அதிர்ந்துபோனார். காரணம், அங்கே பையில் வைத்திருந்த ரூ. 2 லட்சம் காணாமல்போயுள்ளது. தன்னைக் குழப்பிவிட்டு, அந்த இரண்டு மர்ம நபர்களும் முத்துராஜா வாகன கவரில் வைத்திருந்த ரூ.2 லட்சத்தை திருடி விட்டு, அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதனால், அதிர்ச்சியடைந்த முத்துராஜா, இந்த சம்பவம் குறித்து நாமக்கல் நல்லிபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின்பேரில், போலீஸார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்வையிட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ரூ.2 லட்சத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் படிக்க `வண்டியை நிறுத்துங்க; பை தவறி விழுந்துடிச்சு’ - ரூ. 2 லட்சத்தை திருடிய மர்ம ஆசாமிகளை தேடும் போலீஸ்