அணு ஆயுத ஏவுகணை சோதனை மூலம் அடிக்கடி அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளை அச்சுறுத்தி கவனம் ஈர்க்கும் நாடு வட கொரியா. குறிப்பாக அமெரிக்கா, தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு வட கொரியா பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. அதேபோல் அதிபர் கிம் ஜாங் உன்னின் அரசு உள்நாட்டு மக்களுக்கு கடினமான கட்டுப்பாடுகளை விதிக்கவும் தவறியதில்லை. கடந்த ஆண்டு கூட, வட கொரியாவின் முன்னாள் அதிபர் கிம் ஜாங்-இலின் பத்தாவது நினைவு தினத்தில், 11 நாள் துக்க அனுசரிப்பின் ஒரு பகுதியாக, வட கொரிய குடிமக்கள் சிரிக்கவோ, ஷாப்பிங் செய்யவோ, மது அருந்தவோ கூடாது. இதனை மீறினால் தண்டனை எனவும் கூறப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், தென் கொரிய, அமெரிக்க திரைப்படங்களைப் பார்த்ததற்காக 2 சிறுவர்களுக்கு வட கொரியா அரசு மரண தண்டனை நிறைவேற்றியிருப்பதாக ஓர் அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகியிருக்கிறது. வட கொரியாவில், கே-நாடகங்கள்(K-Dramas) என்று பிரபலமாக அறியப்பாடும் தென் கொரிய நாடகங்களைப் பார்ப்பது, விநியோகம் செய்வது தண்டிக்கத்தக்க குற்றமாகவும், அப்படி யாரேனும் செய்தால் அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை என்று சொல்லப்படுகிறது.

இப்படியிருக்க தற்போது வெளியான தகவலின்படி, கடந்த அக்டோபர் மாதம் வட கொரியாவின் ரியாங்காங் மாகாணத்திலுள்ள ஒரு பள்ளியில் சந்தித்துக்கொண்ட 16, 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள், பல தென் கொரிய மற்றும் அமெரிக்க நாடக நிகழ்ச்சிகளைப் பார்த்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அக்டோபர் மாதமே அந்த சிறுவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, ஹைசனில் உள்ள ஒரு விமானநிலையத்தில் பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த சம்பவம் நடந்து இத்தனை நாள்கள் ஆனபிறகும் இப்போதுதான் அதுபற்றிய தகவல் வெளிவர ஆரம்பித்திருக்கின்றன.
மேலும் படிக்க தென் கொரிய, அமெரிக்க திரைப்படங்கள் பார்த்த 2 சிறுவர்கள் - மரண தண்டனை நிறைவேற்றிய வட கொரியா