தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி பஞ்சாயத்துக்கு உள்பட்ட கிராமம், வினைதீர்த்தநாடார்பட்டி. இந்த கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.
அதில் திப்பணம்பட்டி, மடத்தூர், கல்லூரணி, சிவகாமியாபுரம், அரியபுரம், பாவூர்சத்திரம், கீழப்பாவூர் உள்ளிட்ட ஏராளமான கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

பள்ளியின் அவசியம் கருதி, கடந்த 2018-ம் ஆண்டு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், மாணவர்கள் படிப்பதற்கு வசதியாக கூடுதல் வகுப்பறைகள் கட்டிக் கொடுக்கப்படவில்லை. இதுவரை அதற்கான முயற்சிகள் எதையும் கல்வித்துறை மேற்கொள்ளவும் இல்லை என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டு.
தற்போது அந்தப் பள்ளியில் 560 மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்களில் சுமார் 250 பேருக்கு இருப்பதற்கான இருக்கை வசதி, வகுப்பறை கட்டடம் ஆகியவை இல்லாததால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். வகுப்பறை இல்லாததால் மாணவர்கள் அங்குள்ள மரத்தின் நிழலில் அமரவைக்கப்படுகிறார்கள்.

மழைக்காலங்களில் அதற்கு வாய்ப்பு இல்லாததால் சைக்கிள் ஸ்டாண்ட், கிராம பஞ்சாயத்துக்குச் சொந்தமான கட்டடம், அண்ணா மறுமலர்ச்சி நூலகம் , உள்ளிட்ட இடங்களில் அமரவைக்கப்பட்டு பாடம் நடத்தப்படுகிறது. தற்போதைய மாணவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடும்போது கூடுதலாக ஆறு வகுப்பறைகள் தேவை என்கிறார்கள் பள்ளி ஆசிரியர்கள்.
கூடுதல் வகுப்பறைகளைக் கட்டுவதற்குத் தேவையான இடவசதி பள்ளியில் இல்லை. அதே சமயம், பள்ளிக்கு அருகில் 4.6 ஏக்கர் அரசு நிலம் பயன்படுத்தப்படாமல் கிடக்கிறது. பண்பொழியில் உள்ள திருமலை கோயிலுக்குச் சொந்தமான அந்த நிலத்தைப் பள்ளியின் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்குக் கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது. இது தொடர்பாக அதே பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் ஆராதனா என்ற மாணவி, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அந்த கடிதம் வைரலாக பரவி வருகிறது.

அந்தக் கடிதத்தில், “நான் தமிழ்வழிக் கல்வியில் மூன்றாம் வகுப்பு படிக்கிறேன். எனது ஆசிரியர்கள் நன்றாகக் கற்றுக் கொடுக்கிறார்கள். எங்கள் பள்ளி வளாகத்தில் இடவசதியே இல்லை. விளையாட்டு மைதானம் கிடையாது. என்னுடைய தனித்திறைமைகளை வளர்த்துக்க எந்த வசதியும் இல்லை. அதனால் என்னை ஆறாம் வகுப்பில் வேறு பள்ளியில் சேர்க்கப் போவதாக பெற்றோர் சொல்கிறார்கள். ஆனால் எனக்கு இந்த அரசுப் பள்ளியில் படிக்க வேண்டும் என்பது தான் விருப்பம். ஆனால் இங்கு இடவசதி இல்லாததால் எல்லோரும் கஷ்டப்படுகிறார்கள்” என்று அவரது கடிதம் நீள்கிறது
“எங்கள் பள்ளிக்கு அருகில் திருமலை கோயிலுக்குச் சொந்தமான இடம் கிடக்கிறது. எனது பெற்றோர் பேசும்போது, ’இந்த கோயில் இடத்தை முதலமைச்சர் நினைத்தால் கொடுக்க முடியும்’ என்றார்கள். அதனால் அவர்களிடம், ``நானே முதல்வருக்கு கடிதம் எழுதி அந்த இடத்தைக் கொடுக்குமாறு கேட்பேன்" என்று சொல்லி இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். அதனால் அந்த இடத்தைக் கொடுத்து நாங்கள் எல்லோரும் இங்கேயே படிக்க உதவுங்கள். நீங்கள் 8-ம் தேதி தென்காசி வரும்போது உங்களை நேரில் சந்தித்து மனு கொடுக்க ஆசைப்படுகிறேன். அதை நிறைவேற்றிக் கொடுங்கள், ஐயா” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மாணவி ஆராதனா எழுதியுள்ள கடிதம் வைரலாகி வருகிறது. 8-ம் தேதி தென்காசி மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க வருகைதரும் முதலமைச்சர் ஸ்டாலின், பள்ளி மாணவர்களின் நலனுக்காக கோரிக்கை மனு அளிக்க விருப்பம் தெரிவித்துள்ள மாணவி ஆராதனாவை சந்திக்க அனுமதி கொடுப்பாரா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு போதிய இடவசதி இல்லாதது குறித்து கல்வித் துறையினரிடம் கேட்டதற்கு, ‘இது தொடர்பாக அரசின் கவனத்துக்கு தெரியப்படுத்தி உள்ளோம். அரசின் ஒப்புதல் பெற்று இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடத்தில் கூடுதல் வகுப்பறை கட்ட பேச்சுவார்த்தை நடந்துவருகிறது என்கிறார்கள்.
மேலும் படிக்க `பள்ளியில் இட வசதி இல்லை... மரநிழலில் படிக்கிறோம்’ - முதல்வருக்கு கடிதம் எழுதிய 3-ம் வகுப்பு மாணவி