தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கட்டியிருக்கும் கைகாடிகாரம் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து வாங்கியது என சமூக வலைதளங்களில் சர்ச்சையானது. இதற்கு பதில் அளித்த அண்ணாமலை, ``புதிதாக நான் அணிந்திருக்கும் வாட்ச், சட்டை, கார் போன்ற தனிப்பட்ட பொருள்களை வைத்து அரசியல் செய்கிறார்கள். நான் கையில் கட்டியிருக்கும் வாட்ச் ரஃபேல் போர் விமானத்தின் பாகங்களிலிருந்து தயாரிக்கப்பட்டது. உலகில் இந்த வகை வாட்ச் 500 மட்டும் தான் உள்ளது. அதனால், என் உடம்பில் உயிர் உள்ள வரை இந்த வாட்ச் என்னிடம் இருக்கும். நம்மை தவிர வேறு யார் அதை வாங்குவார்கள். நம்முடைய நாட்டிற்காக இந்த வாட்ச்சைக் கட்டியுள்ளேன்.

ஏனென்றால் நான் தேசியவாதி. ரஃபேல் நம்முடைய நாட்டிற்கு கிடைத்திருக்கக்கூடிய மிகப்பெரிய பொக்கிஷம். விமானம் வந்த பிறகு இந்தியா உலக அளவில் பேசப்படுகிறது. இந்த வாட்சில் விமானத்தின் புகைப்படம் இடம்பெற்றிருக்கும். மொத்தமுள்ள 500 வாட்ஸ்களில் 149-வது வாட்ச்சை நான் கட்டியிருக்கிறேன். இது என்னுடைய தனிப்பட்ட விருப்பம். எனக்கு பிடித்ததை நான் செய்கிறேன். இந்தியாவினுடைய எதிரிகள் இந்தியாவிலேயே சில கட்சிக்குள் ஊடுருவி இருக்கிறார்கள். இந்தியா பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு பெறக்கூடாது என்பதற்காக, சீனா மற்றும் பாகிஸ்தானுடைய ஏஜென்ட்டாக அவர்கள் செயல்படுகிறார்கள். அவர்களுக்கு என்னுடைய பதில், இது பழைய இந்தியா அல்ல. மோடிஜியின் புதிய இந்தியா. அடித்தால் நாங்களும் திருப்பி அடிப்போம்" எனத் தெரிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து,இந்த வாட்ச் விவகாரம் சமூக வலைதளங்களில் தீயாகப் பரவியது. இந்த நிலையில், தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரான்ஸ் நிறுவனத்திற்காக, உலகில் வெறும் 500 கை கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு, 5 லட்சம் ரூபாய்க்கும் மேல் விலையுள்ள Rafale watch-ஐ, வெறும் 4 ஆட்டுக்குட்டிகள் மட்டுமே சொத்தென சொல்லும் ஆட்டுப்புளுகர் கட்டியிருக்கிறார்.
அவர் வாங்கின ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட்டால், வெளிநாட்டு வாட்ச்சை கட்டியிருக்கும் தேசியவியாதி, மன்னிக்க தேசியவாதி. ஆடு வளர்த்து சேர்த்து 5 லட்சம் ரூபாய் வாட்ச் கட்டும் அளவுக்கு உயர்ந்தது எப்படி? வார்ரூம் வழியாக தொழிலதிபர்களை மிரட்டினால் இப்படியெல்லாம் பணம் கிடைக்குமா? கடிகாரம் வாங்கிய ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட முடியுமா? இல்லை வழக்கம்போல excel sheet ஏமாத்து வேலைதான் வருமா?" எனப் பதிவிட்டிருக்கிறார்.

மேலும், தி.மு.க மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி தனது ட்விட்டர் பதிவில், ``அண்ணாமலை கட்டியுள்ள watch விலை 8,00,000 மேல்... அதன் நிறுவனம் ஆடம்பர luxury watch செய்யும் bell and ross என்ற ஸ்விட்சர்லாந்து நிறுவனம்! அண்ணாமலை இதில் தேசியவாதி என பெருமை கொள்ள எதுவும் இல்லை. அதன் விலையும் குறைவு இல்லை, இதை இவருக்கு யார் பரிசாக கொடுத்தார் என்பது தான் கேள்வி? ராகுல் காந்தி போட்ட டி-ஷர்டையும், நடிகை போட்ட பிகினியையும் வைத்து அரசியல் செய்கிற கட்சி பிஜேபி-தான்!" எனத் தெரிவித்திருக்கிறார்.
மேலும் படிக்க " `4 ஆடுகள் மட்டுமே சொத்து' என்றவர் கையில் ரூ.5 லட்சம் கடிகாரம்?" - அண்ணாமலையை சாடிய செந்தில் பாலாஜி