சிவசேனா கட்சி உடைந்த பிறகு இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர் மிகவும் மோசமாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரத்தில் ஆதித்ய தாக்கரேவுக்கு தொடர்பு இருப்பதாக முன்பே செய்திகள் வெளியானது. இப்போது மீண்டும் அதே பிரச்னையை சிவசேனாவில் இருந்து பிரிந்து சென்று தனி அணியாக செயல்படும் ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனாவை சேர்ந்த ராகுல் ஷெவாலே எழுப்பி இருக்கிறார். அதுவும் இப்பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்பி இருக்கிறார். ஏற்கெனவே இவ்வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது.
இது குறித்து கேள்வி எழுப்பிய ராகுல் ஷெவாலே எம்.பி. ``நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பான சிபிஐயின் வழக்கு விசாரணை எந்த நிலையில் இருக்கிறது. ஏயு என்பவரிடமிருந்து ரியா சக்ரவர்த்திக்கு 44 முறை போன் அழைப்புகள் சென்றிருக்கிறது. ஏயு என்றால் ஆதித்ய உத்தவ் தாக்கரே என்று பீகார் போலீஸார் தெரிவித்துள்ளனர். அதன் வழக்கு விசாரணை எந்த மட்டத்தில் இருக்கிறது?'' என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

ராகுல் ஷெவாலே எம்.பி.யின் இக்கருத்து குறித்து ஆதித்ய தாக்கரே கூறுகையில், ``சொந்த வீட்டுக்கும், கட்சிக்கும் விசுவாசமாக இல்லாத ஒருவரிடமிருந்து நாங்கள் வேறு எதை எதிர்பார்க்க முடியும். ஏக்நாத் ஷிண்டேயின் நில மோசடி மற்றும் மகாராஷ்டிரா தலைவர்களை களங்கப்படுத்திய பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப இது போன்ற பிரச்னைகளை கையில் எடுக்கின்றனர். அவர்களைப்போல் நான் கீழ்த்தரமாக செல்ல மாட்டேன். அவர்களை இன்னும் அதிகமாக நேசிக்கிறேன். அவர்களின் ஆதாரமற்ற கேள்விகளுக்கு பதிலளிக்கவேண்டிய அவசியமில்லை'' என்று தெரிவித்தார்.
ரியா சக்ரவர்த்தி சுஷாந்த் சிங்கை காதலித்து வந்தார். அவர்தான் அதிகப்படியான போதைப்பொருளை சுஷாந்த் சிங்கிற்கு வாங்கிக்கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
மேலும் படிக்க சுஷாந்த் சிங் மரண வழக்கு : ஆதித்ய தாக்கரே, நடிகை ரியா சக்ரவர்த்திக்கு 44 முறை போன் செய்தாரா?