பிக் பாஸ் 6 நாள் 72: `கனா காணும் காலங்கள்' வீடு; கமல் சொன்னதை மீறிய அசிம் - தனலட்சுமி!

0
இந்த வார வீக்லி டாஸ்க்கான ‘கனா காணும் காலங்கள்’ பார்ப்பதற்கு சற்று சுவாரசியமாக இருந்தது. எந்த வித நெகட்டிவிட்டியையும் வெளிப்படுத்தாமல் மழலைகளாகவே மாற முயன்ற ஹவுஸ்மேட்ஸ்களின் மெனக்கெடலையும் குறும்புகளையும் நிச்சயம் பாராட்ட வேண்டும். ஆனால் இதில் திருஷ்டிப் பரிகாரமாக அமைந்தது, அசிம் – தனலஷ்மி உரையாடல்.

‘விதிமீறல் செய்யாதீர்கள்’ என்று கமல் அத்தனை அழுத்தமாக எச்சரித்தும் கூட ‘இந்த வாரம் யார் வெளியே போவாங்க?’ என்று எவிக்ஷனைப் பற்றி இருவரும் பேசியதை தவிர்த்திருக்கலாம்.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

கார்டன் ஏரியா, கிண்டர் கார்டன் பள்ளி போல உருமாறியிருந்தது. அங்கிருந்த சைக்கிளை எடுத்து ரச்சிதா ஓட்ட, கதிரவனும் மைனாவும் ஆடுபலகையில் உட்கார்ந்து ஆடிக் கொண்டிருந்தார்கள். சூழலுக்குப் பொருத்தமான ‘வேக்அப்’ பாடல் ஒலிக்க ஏறத்தாழ அனைவருமே ‘பேபி’ மோடிற்கு மாறிக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது.

பிக் பாஸ் 6 நாள் 72

மணிகண்டனின் தம்பி போன்ற ஒரு முகம் திடீரென தெரிந்தது. ஆனால் அது மணிகண்டனேதான். ஸ்கூல் டாஸ்க்கிற்காக மீசையையும் தாடியையும் எடுத்து இந்திப் பட ஹீரோ மாதிரி இருந்தார். “நீ மீசை, தாடியை எடுத்தா கொஞ்சம் குண்டா ஆயிட்ட ஆயிஷா மாதிரியே இருப்பே” என்று ஏற்கெனவே மணியை கிண்டல் அடித்திருக்கிறார்கள். ஆனால் இப்போதோ சற்று மாற்றி ‘க்வீன்சி.. எப்ப வந்தே.. வைல்ட் கார்ட்ல வந்துட்டியா?” என்று மைனா மணியைக் கிண்டலடித்தார். ‘ஆம்பளை தனா’ மாதிரி இருக்கே’ என்று அவர் சொன்னதை நல்ல வேளையாக தனலஷ்மி சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. எடுத்திருந்தால் பஞ்சாயத்தாகியிருக்கும்.

‘வெரி நைஸ்யா’ என்று மணிகண்டனின் புதிய லுக்கை பிக் பாஸ் பாராட்டியதால், பொறாமை கொண்ட ஏடிகே, தானும் மீசை, தாடியை எடுக்கும் விபரீதமான முடிவிற்குச் சென்றார். பிறகு காரியத்தை முடித்து விட்டு ‘பிக் பாஸ்.. அங்கிள்..நான் எப்படியிருக்கேன்..?’ என்று கோவை சரளா குரலில் கேட்க, ஏடிகேவின் இம்சை தாங்காமல் ‘ஸோ. க்யூட்’ என்று அவருக்கும் பாராட்டை கோயில் சுண்டல் போல வழங்கினார் பிக் பாஸ்.

கதிரவனை பங்கப்படுத்திய பிக் பாஸ்

மணிக்கும் ஏடிகேவிற்கும் வந்த துணிச்சல் கதிரவனுக்கு வரவில்லை. தாடி. மீசையை எடுப்பதற்கு தயங்கி அங்குமிங்குமாக பதுங்கிக் கொண்டிருந்தவரிடம் “என்ன கதிர்.. தயாராகவில்லையா.? முகத்துல ஏதோ அழுக்கு மாதிரி இருக்கு. துடைச்சுட்டு வாங்க” என்று பிக் பாஸ் நக்கலடிக்க, வேறு வழியில்லாமல் அவரும் ‘ஷேவிங்’ மோடிற்குச் சென்று ‘தில்லுமுல்லு’ ரஜினி மாதிரியே கண்ணாடி முன் அழுது விட்டு காரியத்தை முடித்து திரும்பினார். “தாடிய எடுக்காதீங்க.. உங்களுக்கு செட் ஆகாது’ என்று முன்பே கதிரவனை ஷிவின் எச்சரித்திருந்தது சரியான யூகம்தான். மீசை, தாடியில்லாமல் குடுமி போட்டு இருந்த கதிரவன், பார்ப்பதற்கு சிறுமியைப் போலவே காமெடியாக இருந்தார்.

பிக் பாஸ் 6 நாள் 72

குறும்பு செய்த மைனாவிடம் “உங்க அம்மாவை நான் பார்க்கணும்” என்று பி.டி.மாஸ்டர் அமுவாணன் எச்சரிக்க “அதுக்கு எங்க அப்பா கிட்ட பர்மிஷன் வாங்கணும்’ என்று வில்லங்கம் செய்தார் மைனா. “சார்.. கை சூப்பறான் சார்” என்று ஏடிகேவை மைனா போட்டுக் கொடுக்க, அவரிடம் மணி செய்த குறும்பு ரசாபாசமாக இருந்தது.

பள்ளி மணி அடித்தது. புகைப்பட விக்ரமனின் தலையில் பாசமாக கொம்பு வரைந்து கொண்டிருந்தார் ஷிவின். ஆசிரியர்கள் பள்ளிக்கு சைக்கிளில் கிளம்பினார்கள். “ஹப்பாடா. பத்து கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து வரதுக்குள்ளே..” என்று நம் மனதில் ஓடிய அதே மைண்ட் வாய்ஸை வசனமாக சொல்லி சரியாக கிண்டலடித்தார் அமுதவாணன். ஃபார்மல் ஆடையின் லுக்கில் பார்ப்பதற்கு ஸ்டைலாக இருந்தார் அசிம். கெட்டப் எதுவும் மாற்றாமல் வேட்டி, சட்டையில் இருந்தார் விக்ரமன். கழுத்தில் விசில் தொங்கினால் அது பி.டி.வாத்தியார் என்று எளிமையாக உருமாறியிருந்தார் அமுதவாணன்.

‘தமிழ்த் தாய் வாழ்த்துடன்’ பள்ளிக்கூடம் ஆரம்பித்தது. பிக் பாஸ் எடிட்டிங் டீம் புத்திசாலிகள்தான். பாடலின் கடைசி வரியை மட்டும் காண்பித்து சமாளித்தார்கள். முழுமையான பாடலை இவர்கள் சரியாகப் பாடினார்களா என்று தெரியவில்லை. ‘கெட்ட வார்த்தைகள் பேசக்கூடாது.. மாணவர்களே’ என்று பிரேயர் மீட்டிங்கில் விக்ரமன் உபதேசம் செய்ய “கெட்ட வார்த்தைன்னா. என்ன?" என்று மைனா அப்பாவியாக கேட்க “ஏதாவது உதாரணம் சொல்லுங்க சார்” என்று வில்லங்கத்தைக் கூட்டினார் மணிகண்டன்.

பிக் பாஸ் 6 நாள் 72

‘ஆறுவது சினம்’ – தனலஷ்மிக்கு சொல்லப்பட்ட உபதேசம்

வகுப்பிற்குள் நுழைந்த பின்பும் மாணவர்களின் குறும்பு அடங்கவில்லை. மணியின் வார் பட்டையைப் பிடித்து ரப்பர் பேண்ட் போல ‘டர்’ரென்று மைனா இழுக்க, ‘அய்யாங்..’என்று கதறி அழுதார் மணி. ‘என் பேரு சுகி’ என்று தனலஷ்மி சொல்ல ‘அதை வெச்சுதான் எங்க வீட்ல ஃபுட் ஆர்டர் பண்ணுவாங்க” என்று மைனா அடித்த நக்கலுக்கு சக குழந்தைகள் வெடித்து சிரித்தார்கள். தமிழாசிரியர் விக்ரமனின் மகன்தான் ஏடிகேவாம். எனவே என் பெயர் ‘ஆ.டா.க. விக்ரமன்’ என்று சொல்லித் திரிந்து கொண்டிருந்தார்.

ஆத்திச்சூடியை வகுப்பில் சொல்லித் தந்த விக்ரமன், அதன் ஒவ்வொரு வரிகளுக்கும் ஏற்ப பொருத்தமானவர்களை அழைத்து புத்தி சொன்ன விதம் சிறப்பானது. ‘ஆறுவது சினம்’ என்கிற வரிக்கு தனலஷ்மியை அவர் அழைத்து உபதேசம் செய்தது மிகப் பொருத்தமானது. ‘அறம் செய்ய விரும்பு’விற்கு ஏடிகேவை அழைத்தார்.

நடிப்பதற்கு ஆசைப்பட்டு வாய்ப்பு கிடைக்காமல் பி.டி. வாத்தியாராக மாறிய அமுதவாணனுக்கு ‘பன்ச் வசனம்’ பேசும் பாத்திரம். ஆனால் ‘அங்க பாரு எறும்பு. முகத்தை திருப்பி இரும்பு’ என்று ரைமிங்காக பேசி இம்சை செய்து கொண்டிருந்தார். மதிய உணவிற்கான மணி அடித்தது. ‘சிறந்த மாணவரை தேர்வு செய்து சாக்லேட் தரும் நேரம். சமர்த்தாக இருந்த ஏடிகேவை தேர்ந்தெடுத்தார் விக்ரமன். (பிள்ளைப் பாசம் போல). மதிய உணவு சாப்பிடுவதற்காக வட்டமாக அமர்ந்த பிள்ளைகள், டிபன் பாக்ஸிலிருந்து எடுத்து சிந்தியபடி சாப்பிட, விலங்குப் பொம்மைகளுக்கும் ‘மம்மு’ வைத்து ஜீவகாருண்யம் வளர்த்தார் கதிரவன். (கேரக்ட்டராவே மாறிட்டாரு போல!).

ஸ்டிரிக்ட் ஆஃபிசர் அசிம் சொன்ன ‘நரி’ கதை

கறாரான ஆசிரியர் அசிம் ‘கதை சொல்ல’ வந்தார். கிணற்றில் விழுந்த நரி என்பது கதையின் தலைப்பு. ‘அய்யோ பாவம்’ என்று நரிக்காக ஆரம்பத்திலேயே கோரஸாக குழந்தைகள் வருந்தினார்கள். லாஜிக் பிழைகள் இருந்தாலும் சிறப்பான உச்சரிப்பில் அசிம் கதை சொல்லி முடித்த போது ‘ஏமாத்தின அந்த நரியை சாகடிக்கணும்.. எனக்கு காண்டாகுது” என்று கொலைவெறி மோடிற்கு மாறி மழலையில் கத்திய மைனாவை சமாதானப்படுத்திய அசிம், கதையின் நீதியை சிறப்பாகப் புரிந்து கொண்டு சொன்ன ரச்சிதாவிற்கு சாக்லேட் பரிசளித்தார்.

பி.டி. பீரியட் ஆரம்பித்தது. ‘புரூஸ்லி போடுவார் குங்பூ.. நம்ம செய்யப் போறது ஜம்ப்பு’ என்று உடற்பயிற்சியை ஆரம்பித்தார் அமுதவாணன். 1,2,3 என்று டைமிங்காக செய்ய வேண்டிய கைத்தட்டலை பி.டி.மாஸ்டர் தவறான ரிதத்தில் சொல்ல, அதைத் திருத்திய மணிகணடன் ‘போய்யா யோவ்..’ என்பது போல் சைகை செய்தது குறும்பு. ‘நேத்து சொல்லித் தந்ததை ஞாபகம் வெச்சிருக்கியான்னு டெஸ்ட் பண்ணேன்’ என்று சமாளித்த அமுது, திடீரென்று தமி்ழாசிரியாக மாறி ‘ஓட மீன் ஓட’ பாடலையெல்லாம் கலந்து கட்டினார். மாணவர்களுக்கு திடீரென்று ‘ஏஞ்சல்’ டாஸ்க் ஞாபகம் வந்து விட்டது போல. ‘எதிர்பார்க்கலைல்ல..’ என்று கத்திக் கொண்டே பி.டி.மாஸ்டரை அலேக்காக தூக்கிக் கொண்டு போய் தரையில் கிடத்தி விளையாடினார்கள்.

பிக் பாஸ் 6 நாள் 72

பிறகு நடந்த லெமன் ஸ்பூன் போட்டியில் ஏடிகே முதற்பரிசு பெற்றார். சாக்குப்பையை காலில் நுழைத்து ஓடும் போட்டியில் ஷிவின் வென்றார். ‘ஓகே. நாம இப்ப ஒரு பாரம்பரிய விளையாட்டை ஆடலாம்” என்று சொன்ன அமுதவாணன், ‘பூப்பறிக்க வருகிறோம்’ என்கிற பெயரில் ஒரு ஆட்டத்தை ஆரம்பித்து மாணவர்களின் மூக்குகளில் ரத்தம் வர வைத்தார். ஒருவர் கண்ணை மூடிக் கொண்டு அமர, அவரின் மூக்கில் வந்து சிலர் கிள்ள வேண்டும். யார் கிள்ளியது என்று கண்டுபிடிக்க வேண்டும். தனலஷ்மியும் ஏடிகேவும் டெரராக கிள்ளியதில் மணி மற்றும் ஷிவினின் மூக்கில் ரத்தக்கீறல்கள் தென்பட்டன.

ஸ்ட்ரிக்ட் வாத்தியாரான அசிம், கதிரவன் என்கிற மாணவனிடம் காலி கோப்பைகளை எடுத்து போகச் சொல்லி வேலை வாங்கியது தவறான முன்னுதாரணம். அனைத்து விளையாட்டுக்களிலும் சிறப்பாக பங்கேற்ற ஷிவினுக்கு சாக்லேட் பரிசாக கிடைத்தது. பி.டி. பீரியட் முடிந்த போது மற்ற மாணவர்கள் மகிழ்ச்சியாக இருக்க தனலஷ்மி மட்டும் சோகமாக டெஸ்க்கில் தலை வைத்து படுத்துக் கொண்டார். பிறகுதான் அதற்கான காரணம் புரிந்தது.

விதிமீறல் செய்த அசிம் – தனலஷ்மி

‘யூகேஜி குழந்தைங்கன்ற பேர்ல இவங்க ரொம்ப ஓவரா பண்றாங்க. நான் வேற மாதிரி யோசிச்சு வெச்சிருந்தேன். அந்த வழிலதான் போகப் போறேன். என்ன பண்ணாலும் வாரக்கடைசில ஏதாவது பஞ்சாயத்து வரத்தான் போகுது” என்று பிறகு அசிமிடம் அலுத்துக் கொண்டார் தனலஷ்மி. (கமல் இதை கவனிக்கவும். டாஸ்க்கை எவ்வளவு சிறப்பா பண்ணாலும் ஏதாவதொரு பஞ்சாயத்தை நீங்க இழுத்து விடறீங்களாம்!). “இந்த வாரம் நான் இருப்பேனோ.. மாட்டேனோ..’ என்று தனலஷ்மி சோகமாக சொல்ல “நிச்சயம் இருப்பே.. ரச்சிதா ஒருவேளை போகலாம். டாஸ்க்கை சிறப்பா பண்ணா மைனாவிற்கு தப்பிக்க சான்ஸ் உண்டு” என்று எவிக்ஷன் யூகம் பேசிய அசிம், பிறகு பாதுகாப்பாக தன் பெயரையும் சேர்த்துக் கொண்டார்.

பிக் பாஸ் 6 நாள் 72

டாஸ்க் முடிந்தது. சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர் ஒருவரையும் இரண்டு மாணவர்களையும் தேர்ந்தெடுக்க வேண்டும். ‘குட் டச். பேட் டச் சொல்லித் தருவீங்கன்னு எதிர்பார்த்தேன்’ என்று விழிப்புணர்வுச் செய்தியை எதிர்பார்த்த மைனா, சிறந்த ஆசிரியராக அமுதவாணனைத் தேர்ந்தெடுத்தார். தந்தைப் பாசத்துடன் விக்ரமனை சுட்டிக் காட்டினார் ஏடிகே. அசிமின் பெயரைச் சொன்னார் விக்ரமன். இறுதியில் அதிக வாக்குகள் பெற்று ‘நல்லாசிரியர்’ விருதைப் பெற்றவர் அமுதவாணன்.

சிறந்த மாணவர்கள் இருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நேரம். பொம்மைகளுக்கு மம்மு ஊட்டிய கதிரவனின் அர்ப்பணிப்பு பாராட்டப்பட்டது. கேரக்ட்டருக்காக மீசை, தாடியை முதலில் தியாகம் செய்து முன்னுதாரணமாக இருந்த மணிகண்டனும் பாராட்டப்பட்டார். ஏடிகேவின் உடல்மொழியை மணிகண்டன் கவனித்து பாராட்டியது சிறப்பு. மைனாவின் மழலை மொழியை சிலர் குறிப்பிட்டார்கள். இறுதியில் கதிரவனும் மைனாவும் ‘சிறந்த மாணவர்களாக’ தேர்வானார்கள்.

மியூசிக் டீச்சர் ரோலுக்கு நடந்த போட்டி

அடுத்த எபிசோடில் மேல்நிலைப்பள்ளியாக வீடு மாறும். சிறப்பாக பங்கேற்ற மூவரும் ஆசிரியர்களாக இருப்பார்கள். இவர்களுக்கான கேரக்ட்டர் ஸ்கெட்ச் சொல்லப்பட்டது. ஆங்கில ஆசிரியர் பதவியை கேட்டுப் பெற்றுக் கொண்டார் மைனா. வீடு இதற்காக முன்கூட்டியே சிரித்து வைத்தது. மியூசிக் டீச்சர் பாத்திரத்திற்காக போட்டி நடந்தது. கதிரவனும் அமுதவாணனும் இந்த கேரக்ட்டர்தான் வேண்டுமென்று அடம் பிடித்தார்கள். “நான் எத்தனை தடவை விட்டுக் கொடுத்திருக்கேன்” என்று பரிதாபமாக கதிரவன் கெஞ்சினாலும், அமுதவாணன் மசியவில்லை. “இல்ல கதிரு.. அதுல சுவாரசியம் இருக்கு. என்னால நல்லா பண்ண முடியும்னு நம்பறேன்” என்று பிடிவாதமாக இருந்தார். மற்றவர்கள் கூடி முடிவு செய்ய. கதிரவனும் வழக்கம் போல் பெருந்தன்மையாக விட்டுக் கொடுக்க “மியூசிக் டீச்சர்’ பாத்திரம் அமுதவாணனுக்குச் சென்றது. கணக்கு டீச்சர் பாத்திரத்தை கதிரவன் வேறுவழியின்றி எடுத்துக் கொண்டார்.

பிக் பாஸ் 6 நாள் 72

எபிசோட் முழுக்க குறும்பாகச் சென்றதால் சற்று சோகச் சுவையைக் கூட்டி சமன் செய்ய முயன்றார் பிக் பாஸ். எனவே ஒவ்வொருவரும் ‘தாங்கள் கடந்து வந்த பாதை, கனவு லட்சியம். அதில் பெற்றோர்களின் பங்கு’ போன்றவற்றை சொல்ல வேண்டுமாம். ‘எங்க அம்மா.. அப்பா எனக்காக ரொம்ப கஷ்டப்பட்டாங்க. அப்ப அத்தோட அருமை தெரியல. இப்பத்தான் தெரியுது’ என்று ஒவ்வொவரும் தங்களின் பிளாஷ்பேக்குகளை சென்டியாக சொல்ல ஆரம்பித்தார்கள்.

பெற்றோர்களின் அருமையை, அவர்களின் தியாகத்தை இளம் வயதில் புரிந்து கொள்ளாத பிள்ளைகளின் கதை என்பது காலம் காலமாக தொடர்ந்து கொண்டே இருப்பதுதானே?!

மேலும் படிக்க பிக் பாஸ் 6 நாள் 72: `கனா காணும் காலங்கள்' வீடு; கமல் சொன்னதை மீறிய அசிம் - தனலட்சுமி!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top