`டயட்' என்பதையே கெட்ட வார்த்தை போல பார்ப்பவரா நீங்கள்? 'வாயைக் கட்டற வேலையெல்லாம் நமக்கு ஆகாது' என்பவரா? வாயைக் கட்ட முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் ஆரோக்கிய சமையலுக்காவது மாறலாமே.... உங்களுக்கு மிகப் பிடித்த உணவுகளையே ஆரோக்கிய வெர்ஷனில், அதே சுவையில் மாற்றி செய்து சாப்பிட்டுப் பாருங்களேன்.... இந்த வாரம் ஹெல்த்தி வீக் எண்டாக மாறட்டும்...
வரகு சிக்கன் பிரியாணி
தேவையானவை:
வரகு அரிசி - 2 கப்
பெரிய வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்)
பச்சை மிளகாய் - 3 (கீறவும்)
இஞ்சி - பூண்டு விழுது - 3 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - அரை கப்
புதினா - அரை கப்
கெட்டியான தேங்காய்ப்பால் - ஒரு கப்
தண்ணீர் - 2 கப்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
ஊறவைப்பதற்கு:
சிக்கன் - அரை கிலோ
புளிக்காத கெட்டியான
தயிர் - ஒரு கப்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பிரியாணி மசாலா பொடிக்கு:
சோம்பு - ஒன்றரை டேபிள்ஸ்பூன்
பட்டை - 2 துண்டு
ஏலக்காய் - 4
அன்னாசிப்பூ - ஒன்று
கிராம்பு - 4

செய்முறை:
வரகு அரிசியைக் கழுவி, 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும். சிக்கனை நன்கு கழுவி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் ஊறவைப்பதற்குக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துப் புரட்டி 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிரியாணி மசாலா பொடிக்குக் கொடுத்துள்ள பொருள்களை மிக்ஸியில் போட்டுப் பொடி செய்துகொள்ளவும். ஒரு டீஸ்பூன் நெய்யைத் தனியே எடுத்து வைக்கவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் மீதமுள்ள நெய் சேர்த்துக் காய்ந்ததும், நறுக்கிய பெரிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் மற்றும் அரைத்து வைத்துள்ள பொடியைச் சேர்த்துக் கிளறவும். ஊறவைத்துள்ள சிக்கனை அதில் சேர்த்து 5 நிமிடங்கள் நன்கு கிளறி, சிக்கனில் மசாலா சேரும் வரை புரட்டிவிட்டு, தட்டுகொண்டு மூடி 15 நிமிடங்கள் குறைவான தீயில் வேகவைக்கவும்.
வாணலியில் உள்ள சிக்கன் மசாலாவை ஒரு குக்கருக்கு மாற்றவும். பின் அந்த வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து, ஊறவைத்துள்ள வரகு அரிசியைப் போட்டு 5 நிமிடங்கள் கிளறி, அதைக் குக்கரில் உள்ள சிக்கன் கலவையுடன் சேர்க்கவும். குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கொத்தமல்லித்தழை, புதினா, தேங்காய்ப்பால் மற்றும் தண்ணீர் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், குக்கரை மூடி, தீயை அதிகரித்து ஒரு விசில்விட்டு, பிறகு தீயைக் குறைத்து 5 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும். சிக்கன் வரகு பிரியாணி ரெடி!
சோளம் ஓட்ஸ் சிக்கன் 65
தேவையானவை:
எலும்பில்லாத, துண்டுகளாக்கப்பட்ட சிக்கன் - அரை கிலோ
எலுமிச்சைப்பழம் - ஒன்று (சாறு பிழியவும்)
மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
அரிசி மாவு - 2 டீஸ்பூன்
சோள மாவு - 2 டீஸ்பூன்
முட்டை - ஒன்று
இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
டிப் செய்ய:
மஞ்சள் சோள மாவு - கால் கப்
சிக்கன் ஃப்ரை மிக்ஸ் - கால் கப்
உப்பு - சிறிதளவு
ஓட்ஸ் - கால் கப்

செய்முறை:
சிக்கனை அலசி சுத்தம் செய்யவும். வாயகன்ற பாத்திரம் ஒன்றில் சிக்கனைச் சேர்த்து, அதில் எலுமிச்சைச் சாறு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு அதனுடன் மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்க்கவும். பின்னர் அதில் அரிசி மாவு, சோள மாவு, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து ஒருசேரக் கலக்கவும். பிறகு அதில் முட்டையை உடைத்து ஊற்றிக் கலக்கவும். இக்கலவையை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
டிப் செய்ய கொடுத்துள்ளவற்றில் ஓட்ஸ் தவிர்த்து மற்றவற்றைச் சேர்த்துக் கலவையாக்கவும். ஒவ்வொரு சிக்கன் துண்டாக எடுத்து, டிப்பில் நனைத்து எடுத்து, ஓட்ஸில் ஒரு புரட்டுப் புரட்டவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து, சிக்கன் துண்டுகளை ஐந்து ஐந்தாகப் போட்டுப் பொரிக்கவும். நன்றாக வெந்ததும் எடுத்துவிடவும். சுவையான சோளம் ஓட்ஸ் சிக்கன் 65 தயார்.
கம்பு கத்திரிக்காய் மசாலா
தேவையானவை:
கத்திரிக்காய் - அரை கிலோ
கம்பு - அரை கப்
பெரிய வெங்காயம் - 2 (நறுக்கவும்)
தக்காளி - 4 (நறுக்கவும்)
பூண்டு - 4 பல் (தட்டவும்)
மிளகு - அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் - ஒன்று
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு
நிலக்கடலை - கால் கப்
வெள்ளை எள் - 2 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
சர்க்கரை - ஒரு டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்
புளி - பெரிய நெல்லிக்காய்
அளவு 2 உருண்டைகள்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:
கத்திரிக்காயை நீளவாக்கில் துண்டுகளாக்கிக்கொள்ளவும். புளியை வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து ஒரு கப் அளவுக்குக் கரைத்து எடுத்துக்கொள்ளவும். வெறும் வாணலியில் கடுகு மற்றும் வெந்தயத்தை ஒரு நிமிடத்துக்கு வறுத்துப் பொடித்துக்கொள்ளவும். பின்பு அதே வாணலியில் கம்பு, நிலக்கடலை மற்றும் வெள்ளை எள் மூன்றையும் தனித்தனியாக வறுத்து எடுத்து அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் சேர்த்து, கத்திரிக்காய் துண்டுகளைப் பொரித்தெடுத்துத் தனியாக வைக்கவும். பின்னர் மற்றொரு வாணலியில் எண்ணெய்விட்டு கறிவேப்பிலை, மிளகு, பூண்டு மற்றும் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்துப் பொன்னிறமாகும்வரை வதக்கவும். பிறகு தக்காளி, பூண்டு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறி கடுகு - வெந்தயப் பொடி சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். புளித்தண்ணீர் சேர்த்துக் கலந்து சர்க்கரை, உப்பு, பொரித்து வைத்துள்ள கத்திரிக்காயைச் சேர்த்து வேகவிடவும். வெந்ததும் கம்பு - நிலக்கடலை - எள் கலவையைச் சேர்த்துக் கொதிக்கவிடவும். பின்பு அதில் நல்லெண்ணெய் சேர்த்து, தீயைக் குறைத்து, ஓரங்களில் எண்ணெய் பிரிந்துவரும்போது இறக்கி, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
சோளம் பச்சைப்பயறு சாட் டிலைட்
தேவையானவை:
இனிப்புச் சோளம் - ஒரு கப் (வேகவைத்தது)
தக்காளி - ஒரு கப் (நறுக்கியது)
குடமிளகாய் - ஒரு கப் (நறுக்கியது)
பச்சைப்பயறு - ஒரு கப் (ஊறவைத்து வேகவைத்தது)
உப்பு - தேவைக்கேற்ப
எலுமிச்சைச்சாறு - 2 டேபிள்ஸ்பூன்
சாட் மசாலா - 2 டீஸ்பூன்
வெள்ளரி - ஒரு கப்

செய்முறை:
பச்சைப்பயறை முந்தைய தினமே ஊறவைத்துக் கொள்ளவும். அதை குக்கரில் போட்டு வேகவைத்து வடிகட்டிக் கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் சோளம், பச்சைப்பயறு, தக்காளி, வெள்ளரி, குடமிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து அதோடு உப்பு, எலுமிச்சைச்சாறு, சாட் மசாலா கலந்து பரிமாறலாம்.
மேலும் படிக்க சிக்கன் பிரியாணி, சிக்கன் 65, கத்திரிக்காய் மசாலா.... சிறுதானிய விருந்து | வீக் எண்டு ஸ்பெஷல்