வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவுக்கு உட்பட்ட மெயின் பஜார் வீதியைச் சேர்ந்த அண்ணன், தம்பிகளான அரிநாராயணன், சரவணன், அசோக்குமார், அருண்குமார் ஆகிய நால்வரும் தங்கள் வீட்டுப் பெண்களுடன் வேலூர் எஸ்.பி அலுவலகத்திற்கு நேரில் வந்து புகார் மனு ஒன்றைக் கொடுத்திருக்கிறார்கள். அதில், ‘‘எங்கள் தந்தையும், எங்கள் சித்தப்பாவும் கூட்டாகச் சேர்ந்து 22-03-1994 அன்று ஏரிபுதூர் கிராமத்தில் 7.45 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்தனர். அந்த நிலத்தை இத்தனை ஆண்டுகாலமாக நாங்கள்தான் அனுபவித்துவருகிறோம். இதுவரை எந்த இடையூறும் இருந்ததில்லை. இந்த நிலையில், தி.மு.க-வின் அணைக்கட்டு மத்திய ஒன்றியச் செயலாளரான ஏரிபுதூர் வெங்கடேசன், எங்களுக்குச் சொந்தமான அந்த நிலத்தை ஆக்கிரமித்து, மண் அள்ளி விற்பனைச் செய்கிறார். இதுபற்றி கேட்டதற்கு எங்கள் குடும்பத்தினரை அடித்து தாக்கினார்; கொலை மிரட்டல் விடுத்தார். எங்கள் குடும்பத்தினரின் உயிருக்கு ஏதாவது நேர்ந்தால், அதற்கு வெங்கடேசன்தான் முழுக்க முழுக்கக் காரணம்’’ எனக் கூறியிருந்தனர்.

இதுபற்றி தி.மு.க ஒன்றியச் செயலாளர் வெங்கடேசனிடம் விளக்கம் கேட்டபோது, ‘‘அந்தக் குடும்பத்தினர் இத்தனை ஆண்டுகாலமாக பயன்படுத்திவந்த அந்த நிலம், என்னுடைய பூர்வீக நிலம். என் பெரியப்பாவிற்குச் சொந்தமானது. அவர் சற்று மனநிலைப் பாதிக்கப்பட்டவர். 1993-ம் ஆண்டிலேயே அவரது வாரிசுகளான எங்கள் பெயர்களில், அந்த நிலத்தை ‘உயில்’ எழுதி வைத்துவிட்டார். அதேசமயம், எங்கள் வீட்டு பெரியவர்களுக்குத் தெரியாமலேயே திருட்டுத்தனமாக எதிர்த்தரப்பினர்தான் பத்திரப்பதிவு செய்திருக்கிறார்கள். இத்தனை ஆண்டுகளாக அந்த உயில் மாயமாகியிருந்தது. சமீபத்தில் எங்கள் பழைய வீட்டை இடித்தபோது தான் அந்த ஆவணம் சிக்கியது. அதேபோல, எதிர்த்தரப்பினரை நான் தாக்கவுமில்லை; கொலை மிரட்டல் விடுக்கவுமில்லை; என் மீது பொய்ப் புகார் கொடுத்திருக்கிறார்கள். சட்ட ரீதியாக அவர்களை எதிர்கொள்வேன்’’ என்றார்.
மேலும் படிக்க வேலூர்: ஒரு குடும்பத்துக்கே கொலை மிரட்டல்?! - திமுக ஒன்றியச் செயலாளர் மீது நில அபகரிப்புப் புகார்