தேனி மாவட்டம், கூடலூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள விண்ணேற்றிப் பாறையில் கண்ணகி கோட்டம் அமைந்துள்ளது. தஞ்சையைச் சேர்ந்த ஆய்வாளர் கோவிந்தராஜனால் 1963-இல் கண்டெடுக்கப்பட்ட கண்ணகி கோட்டத்தில் கண்ணகி சிலையின் இடுப்புக்கு கீழ் உள்ள பகுதி மட்டுமே உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பெளர்ணமி தினத்தன்று அந்தச் சிலையை முழுமைப்படுத்தி அம்மனாக வடித்து தமிழக மக்கள் வழிபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 1976-இல் வனத்தில் வைத்து ஆடு வெட்டியதாக எழுந்த சர்ச்சையால் இன்று வரை கேரள அரசும், கேரள வனத்துறையும் தமிழக பக்தர்களை கண்ணகி கோட்டத்திற்கு செல்லவிடாமல் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
தமிழக-கேரள எல்லை முழுமையாக வரையறை செய்யப்படாத நிலையில், கண்ணகி கோட்டத்தை 1983-இல் கேரளத் தொல்லியல் துறை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. இதனைப் பயன்படுத்தி கண்ணகி கோட்டத்தின் ஒரு பகுதியில் துர்க்கை அம்மன் சிலை கேரள பக்தர்களால் நிறுவி கண்ணகி கோட்டத்தை உரிமை கொண்டாட தொடங்கினர். மேலும் 1986-க்கு பிறகு ஆண்டுக்கு ஒரு நாள் மட்டுமே விழா நடந்த அனுமதி அளிக்கின்றனர்.
தேனி மாவட்டம் கூடலூர் பளியன்குடியில் இருந்து 6 கிலோ மீட்டர் நடந்து சென்றால் கண்ணகி கோட்டத்தை அடைந்துவிடலாம். சுமார் 12 அடி அகலம் கொண்ட இந்தப் பாதையில் சாலை அமைத்தால் தமிழர்கள் எளிதாக கண்ணகி கோட்டத்தை அடைந்துவிட முடியும். ஆனால் இந்தச் சாலையில் பக்தர்கள் நடந்து செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் குமுளி சென்று அங்கிருந்து 16 கிலோ மீட்டர் தூரம் ஜீப்பில் பயணித்தும், நடைபயணமாகவும் கண்ணகி கோட்டம் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
``தமிழக - கேரள எல்லையை முறையாக அளவீடு செய்தாலே கண்ணகி கோட்டம் தமிழக எல்லைக்குள் வந்துவிடும். கேரள அரசின் இடையூறு இன்றி தமிழக பக்தர்கள் கண்ணகி கோட்டம் சென்றுவர பளியன்குடி பாதையை சீரமைத்து கொடுத்தால் மக்கள் எவ்வித இடையூறும் இன்றி கண்ணகி கோட்டம் சென்றுவரலாம்.

பிறகு இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் கோயிலை கொண்டு முறையாக சீரமைத்து பராமரிக்க வேண்டும். தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் கண்ணகி கோட்டம் தொடர்பாக கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் எனக் கூறியிருந்தது. அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என கம்பம், கூடலூர் மக்களால் வலியுறுத்தப்பட்டு இருந்தது.
இதற்கிடையே கேரளாவில் நடந்துவரும் டிஜிட்டல் ரீ சர்வே பணி தொடங்கப்பட்டதற்கு பிறகு, கூகுள் மேப்பில் தமிழக எல்லைக்குள் காட்டப்பட்ட கண்ணகி கோட்டம் கேரள எல்லைக்குள் காட்டுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதேவேளையில், தமிழக வனத்துறைக்கும், இந்து சமய அறநிலையத்துறைக்கும் தொடர்புடைய விவகாரங்கள் குறித்து காணொலி வாயிலாக கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பில், துறைகட்டுபாட்டில் இல்லாத கோயில் என கண்ணகி கோட்டம் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து கண்ணகி கோட்டத்தை தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் கொண்டுவருவதற்கான வேலையைத் தொடங்கியுள்ளது எனத் தகவல் வெளியாகி உள்ளது. முதற்கட்டமாக கண்ணகி கோயில் அறநிலையத்துறை கட்டுபாட்டில் கொண்டுவரப்படவுள்ளது. இதற்கு ஆட்சேபனை இருப்பின் தேனி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் ஒரு வாரத்துக்குள் தெரிவிக்கும்படி கீழக்கூடலூர் கிராம நிர்வாக அலுவலர், கண்ணகி கோயில் நிர்வாகி, தேனி சரக ஆய்வர் ஆகியோருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கண்ணகி கோட்டத்துக்கு தமிழக வனத்துறை, அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு கண்ணகி கோயிலில் வழிபடும் பக்தர்களும், தமிழ் ஆர்வலர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க கண்ணகி கோட்டம் விவகாரத்தில் தீர்வு?! - இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டுக்கு கொண்டுவர ஏற்பாடு!