தஞ்சாவூரில், தனியார் பஸ் டிரைவரான இளைஞர் ஒருவர் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து இளம் பெண் ஒருவரிடம் பழகியுள்ளார். இருவரும் காதலித்த நிலையில் ஏற்கெனவே டிரைவருக்கு திருமணம் ஆனது இளம் பெண்ணுக்கு தெரிய வந்துள்ளது. இந்நிலையில் தன்னையும் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய இளம் பெண்ணை அந்த டிரைவர் துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை வாய்க்காலில் வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் மேலஉளூர் பகுதியைச் சேர்ந்தவர் அகல்யா (26). கல்லுாரி படிப்பை முடித்திருக்கும் அவர் டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதுவதற்காக தஞ்சாவூரில் உள்ள மாவட்ட மைய நுாலகத்தில் படித்து வந்துள்ளார். அதற்காக தினமும், மேலஉளூரில் இருந்து தனியார் பஸ் மூலம் தஞ்சாவூருக்கு சென்று வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 6-ம் தேதி நூலகத்திற்கு சென்ற அகல்யா வீடு திரும்பவில்லை. பயந்து போன அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அகல்யாவை தேடியுள்ளனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் வடசேரி பாசன வாய்க்காலில் இளம்பெண் ஒருவரின் உடல் கிடப்பதை பார்த்தவர்கள் தஞ்சாவூர் தாலுகா போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

உடனே, உடலை கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தியதில் வாய்க்காலில் கிடந்தது காணாமல் போன அகல்யா என்பது தெரியவந்தது. அகல்யா எப்படி இறந்தார் அவர் உடல் அந்த பகுதிக்கு எப்படி வந்தது என போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதற்காக அகல்யாவின் செல்போனை ஆய்வு செய்ததில் தஞ்சாவூர் ஞானம் நகரை சேர்ந்த நாகராஜ் (25) என்ற இளைஞர் அகல்யாவிடம் கடைசியாக பேசியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸார் சந்தேகத்தின் பேரில் நாகராஜை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் திருமணம் செய்ய வற்புறுத்தியதால் அகல்யாவை கொலை செய்து விட்டேன் என கூறி போலீஸாரை அதிர வைத்த நாகராஜை கைது செய்துள்ளனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், ``நாகராஜ், தஞ்சாவூர்– பட்டுக்கோட்டை மார்க்கத்தில் தனியார் பஸ் ஒன்றில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார்.
அகல்யா, மேலஉளூரில் இருந்து தினமும் தஞ்சாவூருக்கு நாகராஜ் ஓட்டி வந்த பஸ்ஸில் சென்றுள்ளார். இதில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலிக்க தொடங்கியுள்ளனர். கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நெருங்கி பழகி வந்த இருவரும் வெளியிடங்களுக்கும் சென்று வந்துள்ளனர்.
நாகராஜ் தனக்கு திருமணமானதை மறைத்து அகல்யாவிடம் பழகி வந்துள்ளார். ஒரு கட்டத்திற்கு பிறகு நாகராஜ் திருமணமானவர் என்பது அகல்யாவிற்கு தெரிய வர அதிர்ச்சியடைகிறார். உயிருக்கு உயிராக காதலித்த அகல்யா நாகராஜிடம் தன்னையும் திருமணம் செய்து கொள் என கூறி வந்துள்ளார்.
விளையாட்டாக சொல்கிறார் சமாளித்து விடலாம் என நினைத்துள்ளார் நாகராஜ். ஆனால் திரும்ப திரும்ப திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அகல்யா நாகராஜிடம் வற்புறுத்த தொடங்கியுள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னை தீர்வதற்கு அகல்யாவை தீர்த்து கட்டுவது மட்டுமே ஒரே வழி என யோசித்த நாகராஜ் கொலை செய்வதற்கான திட்டம் போட்டுள்ளார்.

இதையடுத்து, கடந்த 6-ம் தேதி அகல்யாவை காரில் அழைத்துச் சென்ற நாகராஜ் புதுக்கோட்டை சாலையில் ஆள் நடமாட்டமே இல்லாத பகுதிக்கு சென்று காரை நிறுத்தியுள்ளார். அன்பாக பேசுவது போல் நடித்து அகல்யா போட்டிருந்த துப்பட்டாவை பிடித்து இறுக்கி கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். மூச்சு அடங்கியதும் அகல்யா உடலை காரில் வைத்தே பல கிலோ மீட்டர் தூரம் எடுத்து சென்றவர், வடசேரி வாய்க்காலில் போட்டு விட்டதாக தெரிவித்தார். நாகராஜிடம் மேலும் விசாரணை தொடர்ந்து வருகிறது” எனத் தெரிவித்தனர்.
மேலும் படிக்க துப்பட்டாவால் கழுத்தை நெரித்து இளம்பெண் கொலை... காரில் எடுத்து செல்லப்பட்ட உடல் - ஓட்டுநர் கைது!