ஒரு கிராமத்து அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் வாட்ஸ்அப் குழு சமீபத்தில் தொடங்கப்பட்டது. பள்ளி நிர்வாகமே தொடங்கிய அக்குழுவில், கடந்த கால் நூற்றாண்டுக் காலத்தில் அப்பள்ளியில் படித்த பெண்கள் இணைக்கப்பட்டார்கள். அனைவரையும் தாங்கள் வசிக்கும் ஊர், மேற்படிப்பு, வேலை குறித்த தகவல்களை பகிரச் சொல்லிக் கேட்க, ஆர்மி முதல் ஐ.டி வேலை வரை பகிர்ந்தனர் பெண்கள். `நம்ம ஸ்கூல்ல படிச்சபுள்ள டாக்டரா இருக்காம்’, ‘என்கூட படிச்ச பொண்ணு இப்போ சிங்கப்பூர்ல வேலை பார்க்குதாம்’ என்றெல்லாம், குழுவில் இணைந்த பெண்களுக்கு, அந்தப் பெண்கள் கொடுத்த ஆச்சர்யமும் மகிழ்வும் அழகு.
அந்த மகிழ்வைவிட முக்கியமானது, அக்குழுவில் இணைந்த பெண்களுக்குக் கிடைத்த ஊக்கம். `கல்யாணம் ஆனதால நான் வேலைக்குப் போகல. நீங்க லெக்சரரா இருக்கீங்கனு குரூப்ல போட்டிருந்தீங்க. நானும் `நெட்’ எழுத கைடு பண்ண முடியுமா?’, ‘அக்கா நீங்க ஹெச்.ஆர்ல வேலை பார்க்கிறதா குரூப்ல சொல்லியிருந்தீங்க. நான் எம்.எஸ்.டபுள்யூ முடிச்சிருக்கேன். உங்க லிங்க்ல பிளேஸ்மென்ட்டுக்கு ஏதாச்சும் வாய்ப்பிருந்தா சொல்றீங்களா ப்ளீஸ்?’ என்பது வரை, தனிப்பட்ட உரையாடல்களில் பற்றுக்கொடிகள் தங்களுக்கான கம்பங்களை தேடியடைந்துகொண்டிருந்தார்கள்.
எல்லாவற்றையும்விட நெகிழ்ச்சி, குரூப்பில் ஒரு சீனியர் பெண் அனுப்பியிருந்த மெசேஜ். ‘நான் ப்ளஸ் டூக்கு மேல படிக்கல. இதே கிராமத்துலதான் இருக்கேன். என் ரெண்டு பொண்ணுங்களும் இதே ஸ்கூல்லதான் படிக்கிறாங்க. நீங்கயெல்லாம் இத்தனை திசைகள்ல, இத்தனை வேலைகள்ல இருக்கிறதைப் பார்த்ததுக்கு அப்புறம், என் பொண்ணுங்க எதிர் காலத்து மேல எனக்குப் பெரிய நம்பிக்கை வந்துருச்சு’ என்று அவர் பகிர்ந்திருந்த மெசேஜ், அந்த குரூப்பின் வெற்றி.

உத்வேகம்... இது நமக்கு மிக அவசியமான எரிபொருள் தோழிகளே. சமீபத்தில் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, அவள் விகடன் யூடியூப் சேனல், சோஷியல் மீடியா பக்கங்களில் பகிரப்பட்ட ‘அவள் விருதுகள் 2021’ காணொலிகளைப் பார்த்தவர்கள் நம்மிடம் பகிர்ந்துகொண்டதும்... `ரொம்ப உத்வேகமா இருந்தது’ என்ற வார்த்தைகளைத்தான். நம் விருது நிகழ்ச்சியின் நோக்கமும் அதுதான். சாதனைப் பெண்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுத்து, மற்ற பெண்களையும் சாதிக்கத் தூண்டும் உத்வேகம்.
உத்வேகம் கொடுக்கக்கூடியவர்கள், நம்மை சுற்றியிருப்பவர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அதை வழங்குவோம். அவர்கள் வாழ்வில் ஒரு பிடி நம்பிக்கை, ஒரு துளி ஒளி, ஒரு படி முன்னேற்றம் உண்டாக்குவோம். உத்வேகம் தேவைப்படுபவர்கள், நம்மைச் சுற்றியுள்ளவர்களிடமிருந்து, செய்திகளில், காணொலிகளில் பார்க்கும் பெண்களிடமிருந் தெல்லாம் அதை எடுத்துக்கொள்வோம்.
பிறக்கவிருக்கிறது புத்தம் புதிய ஆண்டு. வயதொன்று ஏற இருக்கிறது நமக்கு. ஒவ்வொரு நாளும் நாம் சிறப்பாவதற்கான வாய்ப்பைக் கொண்டிருக்கிறது. வேலை, சுயதொழில், ஆரோக்கியம், ஃபிட்னஸ், பொருளாதார சுதந்திரம், சுயமரியாதை, சேமிப்பு, குழந்தை வளர்ப்பு, வீட்டு நிர்வாகம், உறவுகள் பேணுவது... இப்படி இவற்றில் நம்மை எதில் சிறப்பாக்கிக்கொள்ள விரும்புகிறோமோ, அந்த விருப்பத்தை செயலாக்குவோம். அதற்கான உத்வேகம் கொள்வோம், உத்வேகம் பகிர்வோம்!
உரிமையுடன்,
ஸ்ரீ
ஆசிரியர்
மேலும் படிக்க நமக்குள்ளே...