மத்திய பிரதேச காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.ராஜா பதேரியா கட்சி தொண்டர்கள் கூடியிருந்த கூட்டத்தில் பேசும் போது, ``பிரதமர் நரேந்திர மோடி தேர்தலை ஒழித்துவிடுவார். மதம், மொழி, சாதி அடிப்படையில் மக்களை பிரிப்பார். பழங்குடியினர் மற்றும் சிறுபான்மை மக்கள் ஆபத்தில் உள்ளனர். எனவே அரசியலமைப்பை காப்பாற்ற வேண்டுமானால் பிரதமர் மோடியை கொலை செய்ய தயாராகவேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார். இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. முதல்வர் சிவராஜ் சவுகானும் கண்டனம் தெரிவித்திருந்ததோடு ராகுல் காந்தியின் ஜோடோ யாத்திரை குறித்தும் விமர்சித்திருந்தார். அதோடு காங்கிரஸ் கட்சியினரால் மோடியை களத்தில் சந்திக்க முடியாது என்பதால் அவரை கொலை செய்வது குறித்து காங்கிரஸ் தலைவர் பேசுகிறார் என்றும் சவுகான் குறிப்பிட்டு இருந்தார்.

மத்திய பிரதேச அரசு இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் போலீஸார் ராஜா மீது வழக்கு பதிவு செய்தனர். தனது கருத்து சர்ச்சையானதை தொடர்ந்து ராஜா வெளியிட்ட விளக்கத்தில், ``தேர்தலில் மோடியை தோற்கடிக்க தயாராக வேண்டும் என்ற அடிப்படையில்தான் பேசினேன்” என்றும், ``மகாத்மா காந்தியின் அகிம்சை கொள்கையை பின்பற்றுபவன்” என்றும் குறிப்பிட்டு இருந்தார். காங்கிரஸ் கட்சியும் ராஜாவின் கருத்துக்கு அதிருப்தி தெரிவித்திருந்தது. இது தொடர்பாக அக்கட்சியின் நிர்வாகி பவன் கெரா வெளியிட்டுள்ள அறிக்கையில், ``ராஜாவின் பேச்சு கண்டனத்திற்குறியது. பிரதமர் உட்பட யாருக்கு எதிராகவும், இது போன்று பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று குறிப்பிட்டு இருந்தார். ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்ததால் இன்று திடீரென ராஜா காலையில் கைது செய்யப்பட்டார். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் படிக்க `பிரதமர் மோடியை கொலை செய்ய தயாராகுங்கள்’... சர்ச்சையான பேச்சு - காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ கைது