ஈரோடு வீரப்பன்சத்திரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருபவர் சுரேஷ் (43). இவரின் நண்பரான ஈரோடு, கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் தலைமைக்காவலராக பணியாற்றிய கல்யாணசுந்தரம், அலட்சியமாக பணியாற்றியதாக சமீபத்தில் பவானிசாகர் போலீஸ் ஸ்டஷனுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
கடந்த ஓராண்டுக்கு முன் தலைமைக் காவலர் சுரேஷ் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் உள்ள பைனான்சியரிடம் ரூ. 1 லட்சம் கடன் வாங்கியிருந்தார். சுரேஷ் வாங்கிய கடனுக்காக நண்பர் கல்யாணசுந்தரம், ஜாமீன் கையெழுத்து போட்டிருந்தார். குமாரபாளையத்தில் உள்ள பைனான்சியரை பார்த்து பணம் கொடுக்காமல் கால தாமதம் ஆனதால், கடந்த 5 நாள்களுக்கு முன் அதுகுறித்து பேசுவதற்காக தலைமைக் காவலர்கள் சுரேஷும், கல்யாணசுந்தரமும் சென்றனர்.

அப்போது சுரேஷுக்கும், கல்யாணசுந்தரத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் சுரேஷிடம் இருந்த வாக்கி- டாக்கியை பிடுங்கி கல்யாணசுந்தரம் அங்குள்ள வாய்க்காலில் தூக்கி எறிந்து விட்டார் என்று சொல்லப்படுகிறது.
இதுகுறித்து சுரேஷ், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், கல்யாணசுந்தரம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் உயர் அதிகாரிகளின் ஆலோசனைப்படி இருவரும் சமாதானமாக போவதாக எழுதி கொடுத்தனர்.
இந்த தகவல் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகனுக்கு தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் அழைத்து விசாரணை நடத்திய அவர் தலைமைக் காவலர்கள் சுரேஷ், கல்யாணசுந்தரம் ஆகிய இருவரையும் தற்காலிக பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டார்.
மேலும் படிக்க ஈரோடு: தலைமைக் காவலர்களிடையே மோதல்... இருவரை சஸ்பெண்ட் செய்த எஸ்.பி.!