உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 300 நாள்களைக் கடக்கும் நேரத்தில், இந்தப் போரில் உக்ரைன், ரஷ்யா மட்டுமல்லாமல், உலக நாடுகள் பலவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. போரை நிறுத்த பலகட்ட முயற்சிகள் நடைபெற்றது. அதோடு பல்வேறு உலக நாடுகள் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்திவந்தன. இந்த நிலையில், உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி முதன்முறையாக டிசம்பர், 21-ம் தேதி அமெரிக்கா சென்றிருக்கிறார்.

ஜெலன்ஸ்கியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தன் மனைவியுடன் வரவேற்று, வெள்ளை மாளிகையில் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஏற்கெனவே ஆயுதங்களையும், போர் உத்திகளையும் இலவசமாக அமெரிக்காவிடமிருந்து உக்ரைன் பெற்றுவருகிறது. தற்போது, ஆயுதப் பற்றாக்குறை ஏற்படக்கூடிய சூழலில், ஜெலன்ஸ்கி அமெரிக்காவுக்குச் சென்றிருக்கிறார் எனக் கூறப்படுகிறது. போர் காரணமாக உக்ரைன் நிதி நெருக்கடியை சந்தித்துவரும் நிலையில், உக்ரைனுக்கு கூடுதலாக ரூ.70 ஆயிரம் கோடி அளவுக்கு உதவிகளை செய்யவிருப்பதாக அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை தெரிவித்திருக்கிறது.
இதன் மூலம், இதுவரை உக்ரைனுக்கு அமெரிக்கா ரூ.18 லட்சம் கோடி அளவுக்கு உதவிகளை செய்திருக்கிறது எனக் கூறப்படுகிறது. ஜோ பைடனை சந்தித்துப் பேசியதற்குப் பிறகு, அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜெலன்ஸ்கி உரையாற்றினார். அப்போது, “நீங்கள் கொடுக்கும் நிதியுதவியை வெறும் தானம் என்று நினைக்காதீர்கள். இது ஜனநாயகம், பாதுகாப்புக்கான முதலீடு. இந்த அவையில் நான் உரையாற்றுவது பெருமைக்குரியது. உக்ரைன் சுறுசுறுப்பாக இயங்குகிறது. பதிலடி கொடுக்கிறது. அதிபர் பைடன் எங்களுக்கு துணை நிற்பதில் மகிழ்ச்சி. உக்ரைன் ஒருபோதும் ரஷ்யாவிடம் சரணடையாது" என்றார் ஜெலன்ஸ்கி.

இந்த நிலையில், ரஷ்ய செய்தியாளர்களிடம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், "ரஷ்யாவை பலவீனப்படுத்த அமெரிக்கா உக்ரைனை ஒரு போர்க்களமாக பயன்படுத்துகிறது. எங்கள் இலக்கு... இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதுதான். இதற்காக நாங்கள் பாடுபடுகிறோம். எல்லாமே விரைவில் முடிவடையும் என்பதை உறுதிப்படுத்த நாங்கள் முயல்வோம்" எனத் தெரிவித்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது.
மேலும் படிக்க ``எங்கள் இலக்கு, விரைவில் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதுதான்" - ரஷ்ய அதிபர் புதின்