"ஒரு புகழ்மிக்க நூற்றாண்டு, இறைவனின் காலடியில் இளைப்பாறுகிறது. என் தாயிடம் ஒரு துறவியின் பயணத்தையும், சுயநலம் இல்லாத கர்மயோகிக்கு உரிய அடையாளத்தையும், உயர்ந்த மதிப்பீடுகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையும் நான் எப்போதும் உணர்ந்திருக்கிறேன்."
- தனது தாயின் மறைவுக்கு பின் ட்விட்டரில் உருக்கமாக பதிவிட்டிருக்கிறார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடி தனது அரசியல் வாழ்க்கையில் முக்கியமான வெற்றித் தருணங்களில் தன் தாயாரைச் சந்தித்து அவரிடம் ஆசி பெறுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். 2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியானதும் பல தரப்பிலிருந்து கடுமையான கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழுந்தன. அந்த நேரத்தில் மோடியின் தாயார் ஹீராபென் தன் மகனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், வங்கி வாசலில் வரிசையில் நின்ற காட்சி நாடு முழுவதும் பேசப்பட்டது. அண்மையில் குஜராத் தேர்தல் நடைபெற்றபோது தள்ளாத வயதிலும் ஜனநாயகக் கடமையை ஆற்ற வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்கு பதிவு செய்தார் ஹீராபென்.
2015-ஆம் ஆண்டு ஃபேஸ்புக் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஸூக்கர்பெர்க் உடன் பிரதமர் மோடி நடத்திய உரையாடலில் தன் தாயாரைப் பற்றிப் பேசும்போது, "என் தந்தை இறந்ததும் என் தாயார் என்னை வளர்க்க மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார். வீடுகளில் வேலைக்காரியாக உழைத்திருக்கிறார்" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

கடந்த ஜூன் 18-ஆம் தேதி ஹீராபென் மோடி தனது நூறாவது வயதில் அடியெடுத்து வைத்தபோது பிரதமர் மோடி அவரை வணங்கி ஆசி பெற்றார். அதோடு அவரின் பிளாக்கில்(Blog) ‘அம்மா’ என தலைப்பிடப்பட்டுள்ள அந்த பதிவில், தனது தாய் குறித்த பல்வேறு தகவல்களை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார். அதில் சிலவற்றை இங்கு காணலாம்....
அதில், ``அம்மா என்பது வெறும் வார்த்தை அல்ல. பாசம், பொறுமை, நம்பிக்கை, வாழ்க்கை உணர்வு என எல்லாம் நிறைந்திருக்கும். எனது ஆளுமையில் எது சிறப்பாக இருந்தாலும் அது அம்மாவும், அப்பாவும் கொடுத்த பரிசு. டெல்லியில் நான் இருக்கும் போது ஏராளமான நினைவுகள் வந்து செல்கின்றன. எனது அம்மா, அவரின் தாயின் பாசத்தை பெற்றதில்லை. அவர் சிறு வயதில் இருந்தபோதே ஃப்ளூ தொற்றுநோயால் அம்மாவை இழந்துவிட்டார். நமக்கெல்லாம் கிடைத்தது போல அம்மா மடியின் சுகம் அவருக்கு கிடைக்கவில்லை. பள்ளிக்கு செல்ல முடியவில்லை. அவரின் குழந்தை பருவம் வறுமை நிறைந்ததாக இருந்தது. திருமணமான பிறகு குடும்பத்தின் மூத்த மருமகளாக இருந்தார். வட்நகரில் நாங்கள் வசித்து வந்தது மிகவும் சிறிய வீடு. அந்த வீட்டில் ஜன்னல், கழிவறை, சமையலறை என எதுவும் இல்லை.
எனது அம்மா அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்துவிடுவார். வீட்டை நடத்த கூடுதல் பணம் தேவைப்படும். அதனால் அதிகாலையில் வீட்டு வேலை எல்லாம் முடித்துவிட்டு மற்றவர்களின் வீடுகளுக்கு பாத்திரம் தேய்க்கச் செல்வார். இருந்த போதிலும், `நாங்கள் அவருக்கு உதவுவோம்’ என ஒரு நாளும் எதிர்பார்த்ததில்லை. எனக்கு உள்ளூர் குளத்தில் விளையாடுவது பிடிக்கும். எனவே குளத்துக்கு போகும் போது அழுக்குத் துணிகளையும் எடுத்துச் சென்று வைத்து வருவேன், இது அம்மாவுக்கு கொஞ்சம் உதவியாக இருக்கும். வீட்டு வேலை மட்டுமின்றி பருத்தி உரிப்பது முதல் நூல் நூற்பு வரை அத்தனை வேலைகளையும் செய்வார்.

பருவமழை எங்கள் மண் வீட்டிற்கு பல பிரச்னைகளை கொண்டு வரும். இருப்பினும், நாங்கள் குறைந்தபட்ச அசௌகரியத்தைக் கூட எதிர்கொள்வதை அம்மா சகித்துக் கொள்ள மாட்டார். ஜூன் மாத வெயிலில், எங்கள் மண் வீட்டின் கூரையின் மீது ஏறி, ஓடுகளை சரிசெய்வார். இருப்பினும், அவருடைய துணிச்சலான முயற்சிகளுக்கிடையிலும் எங்கள் வீடு மழையின் தாக்குதலுக்கு தாக்குப்பிடிக்க முடியாத அளவுக்கு பழைமையானதாக இருந்தது.
மழைக்காலங்களில், எங்கள் வீட்டின் கூரை ஒழுகி, வீடு வெள்ளக்காடாகிவிடும். மழைநீரை சேகரிக்க, ஒழுகல் உள்ள இடங்களின்கீழ், வாளிகளையும், பாத்திரங்களையும் அம்மா வைப்பார். இந்த மோசமான சூழலிலும், அமைதியின் சின்னமாக அம்மா இருப்பார். இந்தத் தண்ணீரை அடுத்த சில நாள்களுக்கு அவர் பயன்படுத்திக் கொள்வார் என்றால் அது உங்களுக்கு வியப்பாக இருக்கும். தண்ணீர் சேமிப்புக்கு இதைவிட வேறு சிறந்த உதாரணம் எதுவாக இருக்க முடியும்!" என்றிருக்கிறார்.
மேலும் தொடர்ந்த மோடி, ``வீட்டை அலங்கரிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்ட அம்மா, வீட்டை சுத்தப்படுத்தி அழகுபடுத்துவதற்கு கணிசமான நேரத்தை ஒதுக்குவார். மாட்டுச்சாணம் கொண்டு தரையை அவர் மொழுகுவார். மாட்டுச்சாணத்தால் தயாரிக்கப்பட்ட எருக்களை எரிக்கும் போது ஏராளமான புகை வரும். ஆனாலும், அதை வைத்துதான் ஜன்னல் இல்லாத எங்களது வீட்டில் அம்மா சமையல் செய்வார்.

சுவர்கள் முழுவதும் கரும்புகை படிவதால், அடிக்கடி வெள்ளையடிக்க வேண்டியிருக்கும். இதையும் அம்மாவே சில மாதங்களுக்கு ஒருமுறை செய்வார். இதுபோன்று செய்வது பாழடைந்து போகும் எங்கள் வீட்டில் புத்துணர்ச்சியூட்டும் வாசனையை ஏற்படுத்தும். வீட்டை அலங்கரிப்பதற்காக சிறு சிறு மண்பாண்டங்களையும் அம்மா தயாரிப்பார். பழைய வீட்டு உபயோகப் பொருள்களை மறு சுழற்சி செய்யும் இந்தியாவின் பழக்கவழக்கத்திற்கு அவர் முன்னோடியாகத் திகழ்ந்தார்.
படுக்கைகள் சுத்தமாகவும், சரியாகவும் விரிக்கப்பட வேண்டும் என்பதில் அம்மா மிகுந்த கவனம் செலுத்துவார். படுக்கையில் சிறு தூசி இருந்தால் கூட அவர் சகித்துக் கொள்ளமாட்டார். படுக்கை விரிப்பில் லேசான சுருக்கம் இருந்தால்கூட அம்மா அதனை சரிசெய்த பிறகே மீண்டும் விரிப்பார். இந்தப் பழக்கத்தை பின்பற்றுவதில் நாங்கள் அனைவரும் மிகுந்த கவனமாக இருப்போம். தற்போதும் கூட, இந்த தள்ளாத வயதிலும், அவருடைய படுக்கையில் லேசான சுருக்கம் கூட இருக்கக் கூடாது என அம்மா எதிர்பார்ப்பார்!

இதுதான் தற்போதும் நேர்த்தியான செயல்பாட்டிற்கு வழிவகுக்கிறது. காந்திநகரில் அவர் எனது சகோதரர்கள் மற்றும் எனது உறவினர் குடும்பங்களுடன் வசித்தாலும், இப்போதும் கூட, இந்த வயதிலும் அவரது வேலைகளை அவரே செய்வதற்கு முயற்சிக்கிறார்.
தூய்மையில் அவர் கவனம் செலுத்துவதை இப்போதும்கூட காணலாம். நான் எப்போது அவரைக்காண காந்திநகர் சென்றாலும், அவரது கையால் எனக்கு இனிப்புகளை ஊட்டிவிடுவார். சிறு குழந்தைகளை சுத்தம் செய்யும் அம்மாவைப் போல, நான் சாப்பிட்டவுடன் கைக்குட்டையை எடுத்து எனது முகத்தை துடைத்துவிடுவார். அவர், எப்போதும் ஒரு கைக்குட்டை அல்லது சிறிய கைத்துண்டை அவரது சேலையிலேயே முடிந்து வைத்திருப்பார்.
அம்மா தூய்மையில் கவனம் செலுத்துவது பற்றிய பழங்கால நிகழ்வுகளை நினைவுகூர்வதாக இருந்தால், அவற்றை எழுதுவதற்கு காகிதங்கள் போதாது. தூய்மை மற்றும் துப்புரவில் கவனம் செலுத்துபவர்களைக் கண்டால், அவர்கள் மீது அம்மா மிகுந்த மரியாதை செலுத்துவார் என்பது அவரது மற்றொரு தனிப்பண்பு. வத் நகரில் எங்கள் வீட்டை ஒட்டிய சாக்கடையை சுத்தம் செய்ய யார் எப்போது வந்தாலும், அவர்களுக்கு அம்மா தேனீர் கொடுக்காமல் விடமாட்டார். வேலை பார்த்தவுடன் தேனீர் கிடைக்கும் என்பதால், எங்களது வீடு துப்புரவு பணியாளர்களிடையே மிகுந்த பிரசித்திப் பெற்றதாகும்.

நான் எப்போதும் நினைவுகூரும் அம்மாவின் மற்றொரு பழக்கம் என்னவென்றால், மற்ற உயிரினங்கள் மீதும் அவர் மிகுந்த பாசம் காட்டுவார். ஒவ்வொரு கோடை காலத்திலும், பறவைகளுக்காக அவர் பாத்திரங்களில் தண்ணீர் வைப்பார். எங்கள் வீட்டை சுற்றித்திரியும் தெரு நாய்களும், பசியின்றி இருப்பதை அவர் உறுதி செய்வார்.
எனது அப்பா, தேனீர் கடையிலிருந்து கொண்டு வரும் பாலாடையிலிருந்து சுவை மிகுந்த நெய்யை அம்மா தயாரிப்பார். இந்த நெய் எங்களது பயன்பாட்டிற்கு மட்டுமானதல்ல. எங்களது பக்கத்து வீடுகளில் உள்ள பசுமாடுகளுக்கும் உரிய பங்கு வழங்கப்படும். அந்தப் பசுக்களுக்கு அம்மா தினந்தோறும் ரொட்டிகளை வழங்குவார். காய்ந்து போன ரொட்டிகளாக அல்லாமல், வீட்டில் தயாரிக்கப்பட்ட நெய்யை தடவி பாசத்துடன் அவற்றை வழங்குவார்.
உணவு தானியங்களை சிறு துளி கூட வீணாக்கக் கூடாது என அம்மா வலியுறுத்துவார். எங்களது பக்கத்து வீடுகளில் எப்போது திருமண விருந்து நடைபெற்றாலும், உணவு பொருள்களை வீணாக்கக் கூடாது என அவர் எப்போதும் எங்களிடம் நினைவூட்டுவார். உன்னால் எவ்வளவு சாப்பிட முடியுமோ அதை மட்டும் சாப்பிடு – என்பதே எங்களது வீட்டில் தெளிவான விதிமுறையாக இருந்தது.
தற்போதும் கூட, அவரால் எவ்வளவு சாப்பிட முடியுமோ, அந்த அளவு சாப்பாட்டைத்தான் அம்மா எடுத்துக்கொள்வார், ஒரு கவளம் சாதத்தைக் கூட அவர் வீணாக்க மாட்டார். சிறந்த பழக்க வழக்கங்களுக்கென்றே பிறந்தவரான அவர், குறித்த நேரத்தில் சாப்பிடுவதோடு, சாப்பாடு நன்றாக செரிக்கும் விதமாக மென்று சாப்பிடுவார்.

நான் வீட்டை விட்டுச் செல்வது என்று முடிவெடுத்தபோது, அதை அவரிடம் சொல்வதற்கு முன்னதாகவே முடிவு அவருக்கு தெரிந்திருந்தது. வெளி உலகிற்கு சென்று இந்த உலகம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று எனது பெற்றோரிடம் நான் அடிக்கடி கூறி வந்ததுண்டு. சுவாமி விவேகானந்தரைப் பற்றி அவர்களிடம் அடிக்கடி கூறி ராமகிருஷ்ணா மிஷன் மடத்திற்குச் செல்ல வேண்டுமென்ற என் விருப்பத்தை தெரிவித்து இருந்தேன். இது பல நாள்கள் நீடித்தது. இறுதியாக ஒரு நாள் நான் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்து பெற்றோரின் ஆசியை வேண்டினேன். மனம் வெதும்பி எனது தந்தையார் என்னிடம் கூறினார் "உன் விருப்பம்". அவர்களது ஆசி இன்றி வீட்டை விட்டு வெளியேற மாட்டேன் என்று நான் அவர்களிடம் தெளிவாக கூறினேன். அப்போது எனது தாயார் உனது மனம் என்ன சொல்கிறதோ அதுபோல் செய் என்று கூறினார். அப்போதைக்கு எனது தந்தையை சமாளிப்பதற்காக ஒரு நல்ல ஜோசியரிடம் எனது ஜாதகத்தை காட்ட வேண்டும் என்று கோரினார். எனது தந்தையாரும், உறவினரான மற்றொரு ஜோசியரிடம் எனது ஜாதகத்தை காண்பித்து ஆலோசனை பெற்றார். எனது ஜாதகத்தைப் பார்த்த அந்த உறவினரான ஜோசியக்காரர் இவனது வழி வித்தியாசமானது கடவுள் இவனுக்காக வைத்திருக்கும் வழியில் மட்டுமே இந்த பையன் செல்வான் என்று கூறினார்.

சில மணி நேரங்களுக்குப் பிறகு நான் வீட்டை விட்டு வெளியேறினேன். இந்த சமயத்தில் எனது தந்தையாரும் எனது முடிவை ஏற்றுக் கொண்டு எனக்கு ஆசிர்வாதங்களை வழங்கினார். மிகச் சிறப்பான ஒரு தொடக்கம் அமைய வேண்டும் என்று வாழ்த்தி எனது தாயார் எனக்கு தயிரும் வெல்லமும் கலந்து வழங்கினார்கள். எனது வாழ்க்கை முற்றிலுமாக மாறிவிடும் என்று எனது தாயார் அறிந்திருந்தார்.
அன்னையர் அனைவருமே எப்போதுமே தங்களது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த தெரிந்தவர்கள் என்றபோதிலும் தனது குழந்தை வீட்டை விட்டு வெளியேறுகிறது என்னும் போது உணர்வுகளை கட்டுப்படுத்த இயலாமல் சிரமப்படுபவர்களாகவே இருக்கிறார்கள். கண்களில் நீர் தளும்ப எனது எதிர்காலம் சிறப்பாக அமைவதற்கு மனம் நிறைந்த ஆசிகளை வழங்கி அவர் அனுப்பி வைத்தார்.
வீட்டை விட்டு வெளியேறிய பிறகு நான் எங்கிருந்தாலும் எப்படி இருந்தாலும் என்னுடைய அன்னையின் ஆசி எப்போதும் என்னை பின்தொடர்ந்தது. அம்மா எப்போதும் என்னுடன் குஜராத்தி மொழியில் தான் பேசுவார். தம்மைவிட வயதில் குறைந்தவராக அல்லது சம வயதினராக இருந்தாலும் குஜராத்தி மொழியில் நீ என்று அழைப்பதற்கு 'து' என்று சொல்வார்கள். ஆனால் அதே சமயம் தம்மைவிட மூத்தவர்களை அவ்வாறு அழைக்கும்போது நீங்கள் என்று பொருள்படும் வகையில் 'தமே' என்று கூறுவார்கள். குழந்தையாக இருந்தபோது என்னை து என்று அழைத்து வந்த எனது தாயார், வீட்டை விட்டு வெளியேறி நான் எனது சொந்த பாதையைத் தேர்ந்தெடுத்த பிறகு எனது தாயார் என்னை 'து' என்று எப்போதும் அழைத்ததில்லை. அதற்குப் பிறகு அவர்கள் என்னை தமே என்றோ அல்லது ஆப் என்றோ தான் விளித்தார்கள்.
உறுதியான முடிவுகளை எடுப்பதற்கு எனது தாயார் என்னை எப்போதும் ஊக்குவித்து வந்தார்கள். அதே நேரத்தில் ஏழைகள் நலன் குறித்தும் அக்கறை கொள்ளும் வகையில் அவர்களது வளர்ப்புமுறை அமைந்திருந்தது. குஜராத்தின் முதலமைச்சராக நான் ஆவது என்று முடிவெடுக்கப்பட்ட போது நான் மாநிலத்திலேயே இல்லை. குஜராத்திற்கு திரும்பியதும் நேராக எனது தாயாரை சந்திக்க சென்றேன். அவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. என்னிடம் மீண்டும் நான் அவருடன் தங்கப்போகிறேனா என்று ஆர்வத்துடன் விசாரித்தார்கள். ஆனால் அவர்களுக்கு நான் என்ன பதில் கூறப்போகிறேன் என்பது நன்றாகவே தெரியும். அதனால் அரசில் உனது பணி குறித்து எனக்கு தெரியாது. ஆனாலும் எந்த காரணத்தை கொண்டும் லஞ்சம் மட்டும் வாங்காதே என்று கூறினார்.
டெல்லிக்கு புலம்பெயர்ந்த பிறகு என் அன்னையுடனான சந்திப்பு முன்பிருந்ததை விட மிகவும் குறைந்தது. சில நேரங்களில் நான் காந்திநகர் செல்லும் போது சில மணித்துளிகள் அவரை சந்திப்பேன். முன்பு அவரை அடிக்கடி சந்தித்ததை போல இப்போதெல்லாம் சந்திக்க முடிவதில்லை. ஆனாலும் என்னை சந்திக்க முடியவில்லை என்ற குறை அவரிடம் இருப்பது போலவும் நான் உணர்வதில்லை. அவரின் அன்பும், பாசமும் மாறாமல் நிலைத்திருக்கின்றன. அவரது ஆசிர்வாதங்களைப் போல.
அவருக்கு நான் அவரைப் பற்றி கவலைப்பட்டுக்கொண்டு, எனக்கிருக்கும் பெரும் பொறுப்புகள் மீதான அக்கறையை நழுவவிட்டுவிடக்கூடாது என்ற கவலை. அவரிடம் எப்போது தொலைபேசியில் பேசினாலும் எந்த தப்பையும் செய்துவிடாதே, யாருக்கும் எந்ததீங்கும் செய்துவிடாதே, ஏழைகளுக்காக பணியாற்று என்று கூறிக்கொண்டே இருப்பார்.

எனது பெற்றோர்களின் வாழ்க்கையை திரும்பிப்பார்க்கும் போது அவர்களது நேர்மையும், சுயமரியாதையும் அவர்களின் மிகப்பெரும் பண்புகளாக இருந்திருக்கின்றன என்பதை உணரமுடிகிறது.
ஏழ்மையும், அதைத் தொடர்ந்த சவால்களும் இருந்தபோதிலும் எனது பெற்றோர்கள் கண்ணியத்தை கைவிடவில்லை, சுயமரியாதையை விட்டுத்தரவில்லை என்பதை உணரலாம். எந்த சவாலையும் எதிர்கொள்ள அவர்கள் கற்றுவைத்திருந்த ஒரே மந்திரம் கடினஉழைப்பு, தொடர் கடினஉழைப்பு.
பல ஆண்டுகள் கடந்துவிட்டது. தற்போது பிரதமராக இருக்கிறேன். அம்மாவிடம் பலர் உன் மகன் பிரதமரானதில் பெருமைபடுகிறாயா என கேட்பார்கள். அதற்கு, “உங்களை போலவே நானும் பெருமைப்படுகிறேன். எதுவுமே என்னுடையது அல்ல. நான் ஒரு கருவி. எல்லாம் கடவுளின் செயல்” என்பார்.
நான் இதுவரை எந்த அரசு நிகழ்ச்சிக்கும், பொது நிகழ்ச்சிக்கும் அம்மாவை அழைத்து சென்றதில்லை. இரண்டே முறை மட்டும்தான் என்னுடன் வந்திருக்கிறார். அதில் ஒன்று, ஸ்ரீநகரில் உள்ள லால் செளக்கில் மூவர்ணக் கொடியை ஏற்றிவிட்டுத் திரும்பியபோது, அகமதாபாத்தில் நடந்த, மக்கள் மரியாதை தெரிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேடையில் எனது நெற்றியில் திலகமிட்டார். மற்றொன்று நான் 2001-ல் முதல்வராக பொறுப்பேற்ற போது என்னுடன் வந்தார். அதுதான் அவர் என்னுடன் கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி.
பஞ்சாயத்து தேர்தல் முதல் பார்லிமெண்ட் தேர்தல் வரை அனைத்து தேர்தலின் போதும் தவறாமல் தனது ஜனநாயக கடமையை ஆற்றுவார். இன்றுவரை எனது அம்மாவின் பெயரில் எந்த சொத்தும் இல்லை. அவர் தங்க ஆபரணங்கள் அணிந்து நான் பார்த்ததில்லை. அதை அவர் விரும்பியதும் இல்லை. என் அம்மா கை வைத்தியம் தெரிந்து வைத்திருப்பார். இன்னும் வாட்நகரில் உள்ள வீட்டின் முன்பு பலர் தங்களது குழந்தைகளுடன் அம்மாவிடம் சிகிச்சை பெற வருவார்கள்.
ஒவ்வொரு வறுமைக்கதைக்கு பின்னாலும், ஒரு அன்னையின் அற்புதம் நிறைந்த தியாகம் ஒளிந்திருக்கிறது. ஒவ்வொரு சவாலுக்கும் பின்னே ஒரு அன்னையின் உறுதியான முடிவு ஒளிந்திருக்கிறது. அம்மா உங்களுக்கு மிக மகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்துக்கள். நூறாவது பிறந்தநாளை கொண்டாடும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களைப்பற்றி விரிவாக பொதுவெளியில் எழுதும் துணிச்சல் இதுவரை எனக்கு ஏற்பட்டதில்லை.எங்களது அனைவருக்கும் உங்களது ஆசிர்வாதங்களை வேண்டி நிற்கிறேன். உங்கள் காலடியில் தலைவணங்குகிறேன்” என்று தனது தாயுடனான நினைவலைகளை நெகிழ்வோடும், உருக்கமாகவும் பதிவிட்டிருந்தார் பிரதமர் மோடி.
மேலும் படிக்க `பிரதமர் மோடியும் தாயும்' - பாசப் பிணைப்பைச் சொல்லும் சில நினைவலைகள்!