பிரதமரின் தாயார் ஹீராபென் மோடி உடல்நலக்குறைவால் அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (30/12/2022 )அதிகாலை 3:30 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 99. இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியில் இருக்கிறது" எனத் தன்னுடைய தாய்க்கு இதயபூர்வமான இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக, பிரதமர் மோடி இன்று வங்காளத்தில் வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொள்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், பிரதமரின் தாயார் காலமாகியிருக்கிறார். இருப்பினும், அந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் திட்டமிட்டப்படி நடைபெறும் எனவும், அதில் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் பங்கெடுப்பார் எனவும் தகவல் வெளியாகியிருக்கிறது. ஹீராபென் மோடியின் மறைவைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், ``குடும்பத்தை பேணி வளர்ப்பதற்கு ஹீரா பா எதிர்கொண்ட போராட்டங்கள் அனைவருக்கும் முன்னுதாரணமாகும்.

அவரது தியாகத் துறவு வாழ்க்கை என்றும் நம் நினைவில் இருக்கும். இந்த துயர நேரத்தில் பிரதமர் மோடி, அவருடைய குடும்பத்தினருடன் ஒட்டுமொத்த தேசமும் நிற்கிறது. கோடிக்கணக்கான மக்களின் பிரார்த்தனைகள் உங்களுடன் இருக்கின்றன. ஒரு மனிதனின் வாழ்க்கையின் முதல் நண்பன் மற்றும் ஆசிரியை அம்மா, யாரை இழக்க நேரிடும் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி உலகின் மிகப்பெரிய வலி" எனப் பதிவிட்டிருக்கிறார்.
மேலும் படிக்க ஹீராபென் மோடி மறைவு; பிரதமரின் நிகழ்ச்சி நிரலில் எந்தவித மாற்றமும் இல்லை எனத் தகவல்!