மும்பை அருகே உள்ள நாலாசோபாரா என்ற இடத்தைச் சேர்ந்த சோனாக்ஷி வக்டே என்ற பெண் தன்னுடைய குழந்தையுடன் வாடா அருகில் உள்ள தன்னுடைய தாயார் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். அவர் ஷேர் டாக்ஸியில் சென்றார். டாக்ஸியின் முன்புறம் குழந்தையுடன் அமர்ந்திருந்தார். பின்புறம் சில பயணிகள் இருந்தனர். டாக்ஸி வேகமாகச் சென்றபோது ஜன்னல் வழியாக குழந்தை தவறி சாலையில் விழுந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் பயத்தில் சோனாக்ஷியும் கார் கதவை திறந்து கொண்டு வெளியில் குதித்து விட்டதாக டாக்ஸி டிரைவர் தெரிவித்துள்ளார்.
வெளியில் விழுந்த குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டது. சோனாக்ஷியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் சோனாக்ஷி வேறு மாதிரி தெரிவித்துள்ளார். டாக்ஸியிலிருந்த 3 பயணிகள் இறங்கிய பிறகு டிரைவர் தன்னை மானபங்கம் செய்ய முயன்றதாகவும், இதனால் பயத்தில் குழந்தையுடன் காரில் இருந்து வெளியில் குதித்தாகவும் தெரிவித்துள்ளார். சோனாக்ஷி அடிக்கடி தனது வாக்குமூலத்தை மாற்றி மாற்றி கூறி வருகிறார்.

உண்மையிலேயே டாக்ஸி டிரைவர் மானபங்கம் செய்ததால் சோனாக்ஷி டாக்சியில் இருந்து குதித்தாரா அல்லது சோனாக்ஷியின் கையில் இருந்து குழந்தை தவறி விழுந்ததால் பயத்தில் சோனாக்ஷி வெளியில் குதித்தாரா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இது குறித்து போலீஸார் கூறுகையில், ``ஆரம்பத்தில் டிரைவர் தன்னை மானபங்கம் செய்ய முயன்றதால்தான் குழந்தையுடன் டாக்ஸியில் இருந்து குதித்ததாக சோனாக்ஷி தெரிவித்தார்.
ஆனால் பின்னர் குழந்தை தனது கையில் இருந்து தவறிவிழுந்துவிட்டதால் பயத்தில் தானும் வெளியில் குதித்ததாக தெரிவித்துள்ளார்" என்று தெரிவித்தனர். டிரைவர் விஜய் இது தொடர்பாக போலீஸாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், ``சோனாக்ஷி தன்னுடைய கணவருக்கு போன் செய்யும்படி என்னிடம் கேட்டார். அவர் சொன்ன நம்பருக்கு டயல் செய்ய முயன்ற போது 9 நம்பர்களையே கொடுத்தார்.
உடனே நம்பரை சரிபார்க்கும்படி கேட்டேன். அவரும் போன் நம்பரை சரி பார்த்தபோது மடியில் இருந்த குழந்தை தவறி வெளியில் விழுந்துவிட்டது" என்று தெரிவித்துள்ளார். சோனாக்ஷி சென்ற டாக்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. டிரைவர் மீது கொலைக்கு நிகரான வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க ஓடும் டாக்ஸியில் தாயின் கையிலிருந்து விழுந்த குழந்தை உயிரிழப்பு! - பாலியல் அத்துமீறலா என விசாரணை