கேரள மாநிலம் பாறசாலை மூல்யங்கரையைச் சேர்ந்த கல்லூரி மாணவன் ஷாரோன்ராஜ் கொலை வழக்கில், அவரின் காதலி கிரீஷ்மா கைது செய்யப்பட்டுள்ளார். கிரீஷ்மாவுக்கு உடந்தையாக இருந்ததாக அவரின் தாய் சிந்து மற்றும் தாய்மாமா நிர்மல் குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். கிரீஷ்மாவுக்கு வேறு ஒருவருடன் நிச்சயம் ஆன நிலையில் ஷாரோன்ராஜை கடந்த அக்டோபர் மாதம் தனது வீட்டுக்கு வரவழைத்து கஷாயத்தில் விவசாயத்துக்கு பயன்படுத்தும் பூச்சிமருந்தை கலந்து கொடுத்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. பூச்சிமருந்து கலந்த கஷாயம் கொடுக்கப்பட்ட நிலையில், அக்டோபர் 25-ம் தேதி ஷாரோன் இறந்தார். இந்த வழக்கை விசாரித்துவரும் திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீஸார் கிரீஷ்மாவை கஸ்டடியில் எடுத்து விசாரித்தனர். ஷாரோன்ராஜ் பி.எஸ்சி படித்துவந்த திங்கள்நகரை அடுத்த நெய்யூரில் உள்ள கல்லூரிக்கும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். மேலும் கிரீஷ்மா படித்துவந்த திருவிதாங்கோட்டில் உள்ள கலை கல்லூரிக்கும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

கிரீஷ்மா ஜூஸ் சேலஞ்ச் நடத்தி ஷாரோனுடன் சேர்ந்து வீடியோ எடுத்த குழித்துறை பழைய பாலம் பகுதியிலும், திற்பரப்பு உள்ளிட்ட பகுதிகளிலும் அவர்கள் ஜோடியாக சுற்றி திரிந்த இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின்போது ஷாரோனுக்கு கஷாயத்தில் பூச்சுமருந்து கலந்து கொடுத்து கொலை செய்வதற்கு முன்னதாகவே நெய்யூர் கல்லூரியில் வைத்து ஜூஸில் காய்ச்சலுக்கான டோலோ மாத்திரைகளை அதிக அளவில் கலந்துகொடுத்ததாக கிரீஷ்மா ஒப்புக்கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
கிரீஷ்மாவின் வாக்குமூலம் நெய்யாற்றின்கரை மாஜிஸ்திரேட் கோர்ட் 2- ல் பதிவு செய்யப்பட்டது. அவரின் வாக்குமூலம் குறித்த தகவல் இப்போது வெளியாகியுள்ளது. கிரீஷ்மாவின் வாக்குமூலத்தில், ``நான் ஷாரோனை கொலை செய்யவில்லை. போலீஸார் வேண்டுமென்றே இந்த வழக்கை என்மீது திணித்துள்ளனர். போலீஸார் என்னை மிரட்டி குற்றம் செய்ததாக ஒப்புக்கொள்ள வைத்தனர். அதற்கான ஆதாரங்களை அவர்கள் பொய்யாக உருவாக்கினர்" என கூறியுள்ளார். கிரீஷ்மாவின் இந்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதே சமயம் கிரீஷ்மாவின் வாக்குமூலம் வழக்கை பாதிக்காது என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து குற்றப்பிதிவு போலீஸ் தரப்பில் கூறுகையில், "குற்றம் சாட்டப்பட்டவர்கள் கோர்ட்டில் குற்றத்தை மறுப்பது வழக்கமான ஒன்றுதான். இந்த வழக்கில் அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது கிரீஷ்மா எங்களுக்கு அளித்த வாக்குமூலத்தை முழுமையாக வீடியோ எடுத்துள்ளோம். 70 நாள்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளோம். கிரிஷ்மாவை மறுபடியும் கஸ்டடி எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம், நெய்யாற்றின்கரை கோர்ட் அனுமதி வழங்காமல் இருந்தால் மேல் கோர்ட்டில் அனுமதி கேட்டு மனு அளிக்க உள்ளோம்" என்கிறார்கள்.
மேலும் படிக்க ``காதலனை நான் கொலை செய்யவில்லை... போலீஸார் மிரட்டினர்” - கிரீஷ்மா வாக்குமூலத்தால் அதிர்ச்சி