தமிழக ஆளுநரை விமர்சித்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "திருச்சி தேசியக் கல்லூரியில் நடந்த முப்பெரும் விழாவில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, சுதந்திரப் போராட்ட வரலாற்றை மக்களை மையப்படுத்தி திருத்தி எழுதப்பட வேண்டும். மகாத்மா காந்தி மட்டுமின்றி பல்வேறு தலைவர்களுடைய பங்களிப்பை அனைவரும் தெரிந்து கொள்கிற வகையில் பதிவு செய்யப்பட வேண்டும், வரலாற்றில் அகிம்சை போராட்டம் தான் அதிக அளவில் பதிவாகியுள்ளது. ஆயுதப் போராட்டங்கள் அதிகம் பதிவாகவில்லை என்று உரையாற்றி வரலாற்று திரிபுவாதம் செய்திருக்கிறார்.
1915-ம் ஆண்டில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் மகாத்மா காந்தி பங்கேற்கத் தொடங்கியது முதல் இந்திய தேசிய காங்கிரஸ் மாபெரும் மக்கள் இயக்கமாக செயல்பட தொடங்கியது. 1920-ல் அந்நிய துணி பகிஷ்கரிப்பு, ஒத்துழையாமை இயக்கம், 1929-ல் தண்டியில் உப்பு சத்தியாகிரகம், 1940-ல் சட்ட மறுப்பு போராட்டம், இறுதியாக 1942-ல் வெள்ளையனே வெளியேறு போராட்டம் ஆகியவற்றை இந்திய தேசிய காங்கிரஸ் நடத்தி 1947-ல் இந்திய நாடு விடுதலை பெற்றது.
இத்தகைய போராட்டங்களை காந்தியடிகள் தலைமையில் அகிம்சை, சத்தியாகிரக வழிமுறைகளின் மூலமாக 200 ஆண்டுகால பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தை ஆட்சியிலிருந்து அகற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது. இத்தகைய விடுதலைப் போராட்டங்களில் இன்றைய பொதுவுடமை கட்சியினரும் பங்கேற்று சொல்லொணா துன்பங்களுக்கு ஆளானதை எவரும் மறந்திட இயலாது. எந்த விடுதலைப் போராட்டத்திலும் இன்றைய பா.ஜ.கவின் தாய் ஸ்தாபனங்களான இந்து மகா சபையோ, ஆர்.எஸ்.எஸ். அமைப்போ கடுகளவு பங்களிப்பும் அளித்ததில்லை.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் ஏஜெண்டுகளாக, கைக் கூலிகளாக இருந்தவர்கள் தான் இன்றைய பா.ஜ.கவின் மூதாதையர்கள். இத்தகைய கறைபடிந்த அத்தியாயத்தை பின்னணியாகக் கொண்டுள்ள பா.ஜ.கவின் ஊதுகுழலாக இருக்கிற ஆர்.என் ரவி, விடுதலைப் போராட்ட வரலாற்றை திருத்தி எழுத வேண்டுமென்று கூறுவது அப்பட்டமான ஒரு அரசியல் மோசடியாகும். வரலாறு என்பது வரலாறு தான். அதை யாரும், எவரும் திருத்தி எழுதி விட முடியாது.
வரலாற்று உண்மைகளை மூடி மறைத்து திருத்தி எழுத எவர் முயன்றாலும் அவர்கள் வெற்றி பெற முடியாது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திர போஸ், வல்லபாய் படேல், தமிழகத்தில் தந்தை பெரியார், திரு.வி.க, பெருந்தலைவர் காமராஜர், ஜீவா போன்ற எண்ணற்ற தலைவர்களின் கடும் சிறைவாச கொடுமைகளினால் தான் இந்தியாவுக்கு விடுதலை கிடைத்தது என்பதை பா.ஜ.க மூடிமறைக்க முயன்றாலும், இந்திய மக்கள் அனைவரும் உண்மை வரலாற்றை அறிந்தே வைத்திருக்கிறார்கள்.

இத்தகைய வரலாற்றுப் பெருமைகளை ஆர்.என்.ரவி முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்து பொய்யான வரலாற்றை எழுத முயன்றால் அந்த முயற்சி நிச்சயம் வெற்றி பெறாது. உண்மைக்கு எதிராக எவரும் வெற்றி பெற முடியாது. எனவே, ஆளுநராக நியமனம் செய்யப்பட்டது முதல் ஒரு அரசியல்வாதியாக பா.ஜ.கவின் கொள்கை பரப்பு செயலாளராக, அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டு வருகிற ஆர்.என். ரவி, தமது அத்துமீறிய ஆதாரமற்ற அவதூறு பேச்சுகளை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். அப்படி நிறுத்தவில்லை என்றால் கடும் விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்" என கூறப்பட்டிருக்கிறது.
மேலும் படிக்க ``எச்சரிக்கிறேன்... ஆளுநர் அத்துமீறிய பேச்சுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும்" - கே.எஸ்.அழகிரி ஆவேசம்