திருச்சி மாவட்டம் விரகனூரில் பிறந்த பாதிரியார் ஸ்டேன் சுவாமி, ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக செயல்பட்டுவந்தார். மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக 2020-ம் ஆண்டு என்.ஐ.ஏ-வால் இவர் கைது செய்யப்பட்டார். பொய்க்குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டிருப்பதாக சமூகச் செயற்பாட்டாளர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் அரசியல் கட்சியினரும் குற்றம்சாட்டினர்.

83 வயதான பாதிரியார் ஸ்டேன் சுவாமி, பார்க்சின்சன் என்ற கைநடுக்க நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆனாலும், அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. கைநடுக்கம் காரணமாக அவரால் உணவு உட்கொள்ள முடியவில்லை. அதனால், அவருக்கு சாப்பிட ஒரு ஸ்பூன் வழங்க வேண்டும் என்று சிறை நிர்வாகத்திடம் கேட்டபோது, ஸ்பூன் வழங்க சிறை நிர்வாகம் மறுத்துவிட்டதாக சர்ச்சை எழுந்தது. அவருக்கு ஸ்பூன் வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வேண்டுகோள் வைக்கப்பட்டது. அவரின் ஜாமீன் மனு நீதிமன்ற விசாரணையில் இருந்தபோதே, சிறையில் அவர் மரணமடைந்தார்.
2018-ம் ஆண்டு, மகாராஷ்டிரா மாநிலம் பீமா கோரேகானில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியையொட்டி பெரும் வன்முறை ஏற்பட்டு, ஒருவர் உயிரிழந்தார். அங்கு வன்முறையைத் தூண்டியதாக கவிஞர் வரவர ராவ், வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், அம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெல்டும்டே உட்பட பலர் என்.ஐ.ஏ-வால் கைது செய்யப்பட்டனர். அவர்களில் சிலருக்கும் மட்டும் ஜாமீன் கிடைத்திருக்கிறது. மற்றவர்கள் இன்னும் சிறையில் இருக்கிறார்கள். அதே வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்டேன் சுவாமி, மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டது.

அந்தக் குற்றச்சாட்டை ஸ்டேன் சுவாமி உறுதியாக மறுத்தார். ஸ்டேன் சுவாமியின் கணினியில் இருந்த ஆவணங்களின் அடிப்படையில் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால், அவரின் கணினி ‘ஹேக்’ செய்யப்பட்டு, அதில் போலியான ஆவணங்கள் திணிக்கப்பட்டன என்று ஸ்டேன் சுவாமியின் ஆதரவாளர்கள் கூறிவந்தனர். இந்த நிலையில்தான், பாதிரியார் ஸ்டேன் சுவாமியின் கணினியில் பல குற்றவியல் ஆவணங்கள் திணிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த அர்செனல் கன்சல்டிங் என்ற தடயவியல் நிறுவனம் ஒன்று தற்போது அறிக்கை அளித்திருக்கிறது.
ஸ்டேன் சுவாமி பயன்படுத்திய கணினியை அவருடைய வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தின் அனுமதியுடன் அமெரிக்காவின் உள்ள தடயவியல் நிறுவனத்துக்கு அனுப்பினர். அந்த கணினியை ஆய்வு செய்த நிறுவனம், தற்போது தனது இறுதி அறிக்கையை ஆதாரப்பூர்வமாக அளித்திருக்கிறது. ‘மாவோயிஸ்ட் கடிதங்கள்’ என்று குறிப்பிடப்படும் கடிதங்கள் உட்பட 44 ஆவணங்கள் ஸ்டேன் சுவாமியின் கணினியில் இருந்ததாக என்.ஐ.ஏ தரப்பு கூறியது. அந்த ஆவணங்கள், ஸ்டேன் சுவாமியின் கணினியில் ஹேக்கர்களால் திணிக்கப்பட்டதாக அர்செனல் கன்சல்டிங் அறிக்கை தற்போது கூறுகிறது.

மேலும், ஸ்டேன் சுவாமிக்கு தெரியாமல் ஹேக்கர்களால் அந்த ஆவணங்கள் அவரின் கணினியில் திணிக்கப்பட்டிருப்பதையும் அர்சேனல் தடயவியல் நிறுவனம் ஆதாரப்பூர்வமாக நிரூபித்திருக்கிறது. அந்த ஆவணங்களை ஒருமுறை கூட அவர் திறந்து பார்க்கவில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கை பற்றிய விவரங்கள் அமெரிக்காவில் வெளியாகும் ‘வாஷிங்டேன் போஸ்ட்’ பத்திரிகையில் உடனடியாக வெளியானது.
பீமா கோரேகான் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ‘நகர்ப்புற நக்சலைட்கள்’ என்றெல்லாம் விமர்சிக்கப்படுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டேன் சுவாமியைப் போலவே, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்ற அனைவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று வாதிட்டுவருகிறார்கள். இந்த நிலையில், ஸ்டேன் சுவாமி மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் என்று சொல்லப்பட்டுவந்த ஆவணங்கள் பொய்யானவை என்ற உறுதிசெய்யப்பட்டிருப்பதற்கு என்.ஐ.ஏ என்ன பதில் சொல்லப்போகிறது? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!
மேலும் படிக்க ஸ்டேன் சுவாமி: லேப்டாப் ஹேக் செய்யப்பட்டு ஆவணங்கள் திணிக்கப்பட்டது? - அமெரிக்க அறிக்கை சொல்வது என்ன?