தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள 'மாண்டஸ்' புயல், தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலானது, இன்று நள்ளிரவு சமயத்தில் புதுவை - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையே கடக்க வாய்ப்புள்ளதாகவும், இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு பகுதியில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இந்நிலையில், மாவட்ட வாரியாக புயல் பாதிப்பு மற்றும் அதனால் ஏற்படும் மழையின் அளவை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து வருகின்றனர்.

இந்த புயலின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு விழுப்புரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கான அரசு பேருந்து சேவை இரவு நேரத்தில் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மோசமான வானிலையின் காரணமாக பல்வேறு பகுதிகளுக்கான விமான சேவைகளும் தடைபட்டுள்ளது. இதனிடையே, புயல் மற்றும் மழையினால் பாதிப்புகள் ஏற்படலாம் என கருதப்படும் 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தமிழக பேரிடர் மீட்பு குழுவினர் சென்றுள்ளனர். அந்த வகையில், 40 பேர் கொண்ட பேரிடர் மீட்பு குழுவினர் நேற்று விழுப்புரம் மாவட்டம், காக்குப்பம் பகுதிக்கு வந்தடைந்தனர்.
அங்கு பாதுகாப்பு உபகரணங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் த.மோகன் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது, "வானிலை ஆய்வு மையம், சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுத்திருக்கிறது. அதில் ஒரு மாவட்டமாக விழுப்புரம் உள்ளது. எனவே, மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்து தாலுகாக்களிலும் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் 40 கி.மீ பகுதிகளில் 19 மீனவ கிராமங்கள் உள்ளன. அங்கு தான் இந்த பாதிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை எதிர்கொள்வதற்கு 12 புயல் பாதுகாப்பு மையங்கள் உள்ளது. மேலும் 1091 தற்காலிக புயல் பாதுகாப்பு மையங்களையும் தயார் நிலையில் வைத்திருக்கிறோம்.

கூடுதலாக, முதலமைச்சரின் அறிவுரைப்படி தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர் 40 பேர் விழுப்புரம் மாவட்டத்திற்கு வந்துள்ளனர். அவர்கள் செய்யவிருக்கும் பணிகள் குறித்து இப்போது ஆய்வு செய்தோம். அது மட்டுமில்லாமல், இந்த மழையினை எதிர்கொள்வதற்காக நவீன உபகரணங்களுடன் அவர்கள் வந்திருக்கிறார்கள். மழை பாதிப்புகள் இருக்கக்கூடிய பகுதிகளில் அவர்களை இன்று மாலை நிறுத்திவிடுவோம். விழுப்புரம் மாவட்டத்தில் அனைவரும் தயார் நிலையில் இருக்கிறோம். கூடுதலாக தமிழ்நாடு பேரிடம் மீட்பு குழுவினர் இருப்பதினால் எவ்வித பிரச்னை வந்தாலும் எதிர்கொள்வதற்கு விழுப்புரம் தயாராக இருக்கிறது.

இதுமட்டுமின்றி ஒவ்வொரு தாலுகா மற்றும் ஒன்றியங்கள் வாரியாக அரசு அலுவலர்களை நியமித்திருக்கிறோம். அவர்கள் எல்லோரும் அவரவர் தலைமையகத்தில் இருக்க வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கி இருக்கிறோம். யாரும் விடுப்பில் செல்லக்கூடாது எனவும் சொல்லியிருக்கிறோம்" என்றார்.
கட்டுப்பாடு அறையில் செயல்பட்டு வரும் இலவச அழைப்பு எண்: 1077. புகார் தொலைபேசி எண்: 04146 - 223265 வாட்ஸ் அப் எண்: 7200151144
மேலும் படிக்க மாண்டஸ் புயல்: விழுப்புரம் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?! - ஆட்சியர் தகவல்