இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் உதயநிதிஸ்டாலின் நேற்று (25-12-2022) கோவை மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். நேற்று காலை கோவை நேரு விளையாட்டு அரங்கத்தில் செயற்கை இழை ஓடுதளப்பாதை அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியை முடித்து விட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூடத்தில் பங்கேற்றார்.

பின்னர், கொடிசியாவில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "சென்னைக்கு அடுத்த நிலையில் உழைப்பால் பிரசித்தி பெற்ற மாவட்டமாக கோவை உள்ளது.
கோவை மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 57 ஆயிரத்து 575 மனுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. கோவையை தி.மு.க அரசு புறக்கணித்து விடும் என்று பத்திரிகையாளர்கள் பேசினார்கள். அவை பொய் என்று செந்தில் பாலாஜி நிரூபித்து காட்டியிருக்கிறார். இந்த விழாவில் 368 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட இருக்கிறது. தமிழ்நாட்டிலே அதிக நலத்திட்ட உதவிகள் பெற்ற மாவட்டமாக கோவை திகழ்கிறது.
அ.தி.மு.க-வாக இருந்தாலும், பா.ஜ.க-வாக இருந்தாலும் எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் ஆட்சி. கலைஞரின் பேரன், ஸ்டாலினின் மகன், அமைச்சர் என்ற பெருமையை விட, நான் உங்கள் வீட்டுச் செல்லப்பிள்ளையாகவே இருக்க விரும்புகிறேன்” என்றார்.

இவ்விழாவில் பேசிய கோவை மாவட்டப் பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி, "கடந்த அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் கோவை பெற்ற வளர்ச்சியை விட, தற்பொழுது நடைபெறும் தி.மு.க ஆட்சியில் அதிக வளர்ச்சி பெறும். அன்னூரில் தொழிற்பூங்கா அமைப்பதற்கு விவசாய நிலங்களை அரசு கட்டாயப்படுத்தி எடுப்பதாக பொய் செய்தி பரப்பினார்கள். விவசாயிகள் விருப்பம் இருந்தால் நிலங்களைத் தரலாம். அரசு கட்டாயப்படுத்தி எடுக்காது", என்றார்.
மேலும் படிக்க ``நான் உங்கள் வீட்டுச் செல்லப்பிள்ளை" - கோவை விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்