Doctor Vikatan : ஜூரம், சளி, தலைவலியெல்லாம் வந்தால் தடுக்கக்கூடாது. அதெல்லாம் வந்தால்தான், நம்முடைய நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும் என்கிறார்கள். இதில் உண்மை இருக்கிறதா?
பதில் சொல்கிறார் கோவையைச் சேர்ந்த பொது மருத்துவர் ஆதித்யன் குகன்

உங்களுடைய இதே சந்தேகம் பலருக்கும் இருப்பதுதான். டான் என்பவர் இது குறித்து ஆராய்ச்சியும் செய்திருக்கிறார்.
வெளிநாடுகளில் வருடந்தோறும் ஃப்ளு தடுப்பூசியைச் செலுத்திக் கொள்கிறார்கள். இன்ஃப்ளுயென்ஸா என்கிற வைரஸ்தான் நமக்கு அடிக்கடி காய்ச்சல், தலைவலி, ஜலதோஷம் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. இந்த வைரஸானது வருடத்துக்கு இரண்டு, மூன்று முறை உருமாறுகிறது.
ஒருவகை இன்ஃப்ளுயென்ஸா வைரஸானது மூன்று முதல் நான்கு வருடங்களுக்கு நிலையாக இருக்கும் என்கிறார்கள். உதாரணத்துக்கு ஹெச்1என்1 என்பது பன்றிக்காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ். இது மூன்று முதல் நான்கு வருடங்களுக்கு நிலையாக இருக்குமாம். எனவே உலக சுகாதார நிறுவனமானது அவ்வப்போது உருமாறும் வைரஸின் தன்மைக்கேற்ப புதுப்புது தடுப்பூசிகளைத் தயாரித்து மக்கள் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்துகிறது,
நீங்கள் கேட்டதுபோல காய்ச்சல், சளி போன்றவை வந்து, அவற்றிலிருந்து மீண்டபிறகு உடலுக்கு இயற்கையான எதிர்ப்பாற்றல் உருவாவது உண்மைதான். 'மெமரி செல்ஸ்' எனப்படும் வெள்ளை அணுக்கள் நம் உடலில் தங்கிவிடுவதுதான் காரணம். ஒவ்வொரு முறை அந்த வைரஸ் தாக்கும்போதும் இந்த மெமரி செல்கள், நம் உடலின் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கின்றன.

ஆனால் வருடந்தோறும் ஃப்ளு தடுப்பூசி போட்டுக் கொள்ளும்போது அது அந்த வருடம் மட்டும்தான் தன் ஆற்றலைக் காட்டுகிறது, அடுத்தடுத்த வருடங்களில் அது ஆற்றலை இழந்துவிடுகிறது என்று சொல்லப்படுகிறது.
அதாவது உங்கள் கேள்விக்கு இரண்டு விதமாக பதிலளிக்கலாம். வயதானவர்கள், இணை நோய்கள் உள்ளவர்கள் போன்றோர் உடல்நலம் பாதிக்கப்படும்போது அதை அலட்சியப்படுத்தக் கூடாது. இவர்களுக்கெல்லாம் நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருக்கும் என்பதால் கட்டாயம் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள வேண்டும். அதுவே ஆரோக்கியமான நபர்கள் என்றால் சளி, காய்ச்சல் பாதிக்கும்போது இயற்கையாகவே எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
மேலும் படிக்க Doctor Vikatan: அடிக்கடி சளி, காய்ச்சல் பாதித்தால்தான் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்குமா?