Doctor Vikatan: என் தோழி, வெஜைனா பகுதியின் வாடையைப் போக்கவென்று விதம்விதமான வாஷ் உபயோகிக்கிறாள். வெஜைனா வாடை என்பது இயல்பானதா... அல்லது அது ஏதேனும் பாதிப்பின் அறிகுறியா? அதைப் போக்க என்ன வழி?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்

இதை ஓர் உதாரணத்துடன் விளக்கினால் உங்களுக்கு எளிதாகப் புரியும் என நினைக்கிறேன். நம்முடைய வாய்ப்பகுதியில் எப்போதும் உமிழ்நீர் சுரந்துகொண்டே இருக்குமல்லவா.... அதனால் அந்தப் பகுதி எப்போதும் ஈரத்தன்மையுடனும் இருக்கும். அதே போன்ற ஈரப்பதத்துடன்தான் பெண்ணின் வெஜைனா பகுதியும் இருக்கும்.
அந்தப் பகுதியில் நிறைய சுரப்பிகளும் lymph nodes எனப்படும் நிணநீர் கணுக்களும் இருக்கும். இதனால் இந்தப் பகுதியில் திரவக் கசிவு என்பது இருந்துகொண்டே இருக்கும். இது ஒன்றும் அசாதாரண நிகழ்வல்ல.
வெஜைனா என்பது பெண் உடலின் கீழ்ப்பகுதியில், வெளிச்சம் படாத இடத்தில் இருக்கிறது. அதனால் அந்தப் பகுதியில் பாக்டீரியாவும் நிறைய இருக்கும். வெஜைனாவுக்கு என தனிப்பட்ட வாடை எதுவும் கிடையாது. அதன் வாடையை 90 சதவிகிதம் நம்மால் உணர முடியாது.
காலையில் தூங்கி எழுந்ததும் பல் துலக்காவிட்டால் வாயிலிருந்து துர்நாற்றம் வருவதைப் போல, வெஜைனா பகுதியில் ஏதேனும் இன்ஃபெக்ஷன் இருந்தால்தான் அதன் வாடையை நம்மால் உணர முடியும்.
இன்று பல இளம் பெண்களும் இந்த வாடையைப் போக்க வெஜைனா பகுதியில் பெர்ஃபியூம், வெஜைனல் வாஷ் போன்றவற்றை உபயோகிக்கிறார்கள். இது சரியான விஷயமல்ல. வெஜைனா பகுதியில் நல்ல பாக்டீரியா நிறைய இருக்கும். வாசனையான பொருள்களை அந்தப் பகுதியில் உபயோகிக்கும்போது அந்த பாக்டீரியா அழிந்துவிடும். அதனால் அந்தப் பகுதியில் எளிதில் கிருமித் தொற்று பாதிக்கும்.
மீன் போன்ற வாடை, அழுகிய அசைவ வாடை இரண்டும் பாக்டீரியா தொற்றின் அறிகுறிகளாக இருக்கலாம். இதனுடன் மஞ்சள்நிற கசிவும் இருக்கலாம். இதை ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுத்து குணப்படுத்தலாம்.

சில பெண்கள் மாதவிலக்கின் போது வெஜைனாவுக்குள் வைத்துக்கொள்ளும் டாம்பூன்கள் உபயோகிப்பார்கள். அதை வைத்ததையே மறந்து விடுவார்கள். அது மட்டுமல்ல, சாதாரண நாப்கினையை குறிப்பிட்ட நேரம் தாண்டியும் மாற்றாமல் வைத்திருந்தால் வாடை வீசும். எனவே அந்தரங்க உறுப்பு சுகாதாரம் என்பது மிக முக்கியம்.
இந்த விஷயங்களை உங்கள் தோழிக்கு எடுத்துச் சொல்லுங்கள். அதிக அளவில் அந்தரங்க உறுப்பு வாடை வருவதாக அவர் உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறச் சொல்லுங்கள். அதுதான் சரியானது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
மேலும் படிக்க Doctor Vikatan: வெஜைனா வாடையைப் போக்க நறுமணமூட்டிகளைப் பயன்படுத்துவது சரியா?