Doctor Vikatan: வானிலை மாற்றத்தால் அடிக்கடி தொண்டைவலியும் தொண்டைக் கரகரப்பும் வருகின்றன. தலை பாரமாக இருக்கிறது. இதைத் தவிர்க்கவும் முன் எச்சரிக்கையாக மேற்கொள்ளவும் எளிய வழிகள் இருந்தால் சொல்லுங்கள்.
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி

வானிலை மாற்றத்தால் நீங்கள் குறிப்பிட்டுள்ள தொண்டைவலி, தொண்டைக் கரகரப்பு மட்டுமன்றி, பின்கழுத்து வலி, நெற்றிவலி, தும்மல் போன்றவையும் வரலாம். இந்தப் பருவத்தில் தாக்கும் இத்தகைய பிரச்னைகளிலிருந்து விலகி இருக்க, நம் நோய் எதிர்ப்பாற்றலை மேம்படுத்திக் கொள்ள வேண்டியது மிக முக்கியம்.
நமது சுற்றுச்சூழலில் பூமி மட்டுமல்ல, காற்றும் மிக அதிகமாக மாசடைந்திருக்கிறது. ஆகாயத்திலிருந்து பனி பொழியும்போது காற்றிலுள்ள மாசையும், அதன் கெடுதல்களையும் சேர்த்தே அது சுமந்து வருகிறது. அதனால் மழை மற்றும் பனிக்காலத்தில் இந்தப் பிரச்னைகள் நம்மை அதிகம் தாக்குகின்றன.
துளசியும் ஏலக்காயும் சேர்த்துக் கொதிக்கவைத்த நீரை அருந்துவது, கற்பூரவள்ளி இலை அல்லது வெற்றிலை அல்லது ஆடாதொடா இலைகள் சேர்த்துக் கொதிக்க வைத்த நீரை அருந்துவது போன்றவை தொண்டைக் கரகரப்பு, தலைபாரம் போன்றவற்றுக்கு குணமளிக்கும்.
தண்ணீரில் ஆடாதொடா இலை, நொச்சி இலை இரண்டிலும் தலா ஐந்து, நான்கைந்து மிளகு சேர்த்து நன்கு கொதிக்கவைத்துக் குடிக்கலாம்.
சுக்கு, மிளகு, திப்பிலியில் சிறிது எடுத்து நன்கு இடித்து, தண்ணீரில் சேர்த்துக் கொதிக்கவைத்து, தேநீர் போல இனிப்பு சேர்த்தோ, இனிப்பு சேர்க்காமல் கஷாயமாகவோ குடிக்கலாம்.
சித்தரத்தையும் அதிமதுரமும் தொண்டைவலிக்கும், தொண்டைக் கரகரப்புக்கும் அற்புதமான மருந்துகள். இவற்றையும் தட்டிப்போட்டு தண்ணீரைக் கொதிக்க வைத்துக் குடிக்கலாம்.

மழை மற்றும் பனிக்காலத்தில் கூடியவரை வெதுவெதுப்பான நீரையே நாள் முழுவதும் குடிப்பது நல்லது. மிளகு, சீரகம் இரண்டையும் சுத்தமான துணியில் சிறு மூட்டையாகக் கட்டி, தண்ணீரில் போட்டுக் கொதிக்கவைத்து அந்த நீரை வெதுவெதுப்பாக அவ்வப்போது குடிக்கலாம்.
தொண்டைவலியும் தொண்டைக் கரகரப்பும் வந்தபிறகு இவற்றைச் செய்வதற்கு பதில் வருவதற்கு முன்பே முன்னெச்சரிக்கையாகப் பின்பற்றினால் இந்த அவதிகளிலிருந்து தப்பிக்கலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
மேலும் படிக்க Doctor Vikatan: வானிலை மாற்றத்தால் ஏற்படும் தொண்டைவலியும் கரகரப்பும்.... இயற்கையான தீர்வுகள் உண்டா?