சாதா இளைஞன் ஊருக்குள் கெத்தாய் சுற்றும் தாதாவோடு உரசினால் என்னாகும்? கொலவெறி தாதாவை டி.எஸ்.பி-யாகி பழி தீர்க்கும் அதே அரதப்பழசான போலீஸே இந்த DSP! விஜய் சேதுபதி - பொன்ராம் கூட்டணியில் இந்த டி.எஸ்.பி வசீகரித்தானா... வதைத்தானா?
திண்டுக்கல்லில் அமைதியே உருவாக வாழும் பூக்கடை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் இளவரசுவின் மகன் விஜய் சேதுபதி. நண்பர்களோடு கிரிக்கெட் விளையாடிக் கொண்டும் சரக்கடித்துக் கொண்டும் ஜாலியாய் திரிகிறார். விஜய் சேதுபதிக்கு அரசாங்க வேலை வாங்கித்தர ஆசைப்படுகிறார் இளவரசு. ஒரு தருணத்தில் தாதா பாஸ்கருக்கும் விஜய் சேதுபதிக்கும் முட்டிக்கொள்ள, விஜய் சேதுபதியின் தலையைவெட்ட இளவரசுவிடமே நாள் குறிக்கிறார் வில்லன் பாஸ்கர். வில்லனைப் பழிவாங்க விஜய் சேதுபதி போலீஸ் ஆகிறார். அதற்குள் தாதா வில்லனும் இந்தப் பக்கம் புரொமோஷன் வாங்கி எம்.எல்.ஏ-வாகி நிற்கிறார். அரசியல் செல்வாக்குமிக்க எம்.எல்.ஏ தாதாவை, போலீஸ் விஜய் சேதுபதி எப்படிப் பழிதீர்க்கிறார் என்பதே கதை!

சாதாரணமாகவே தாதாயிஸ கதைக்களம் என்றாலே 'மதுரைக்காரய்ங்கடா!' என 1265 தடவைக்கும் மேல் மதுரையைத் துவைத்துக் காயப்போட்ட காரணத்தால் இம்முறை 'திண்டுக்கல்காரன்டா' எனப் பக்கத்து மாவட்டத்துக்குத் தாவி இருக்கிறார்கள். (பஸ் ரூட் கணக்காக இன்னும் எத்தனை மாவட்டங்களுக்கு நீளுமோ?!) மற்றபடி ஒரு போலீஸ் - தாதா ஆக்ஷன் கதையில் என்னவெல்லாம் இருக்குமோ அவை எல்லாமே டி.எஸ்.பி-யில் இருக்கிறது. அதில் சுவாரஸ்யமாக ஏதாவது சேர்த்திருக்கிறார்களா எனக் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுத் தேடினால்... ப்ச்ச்ச்ச்ச்... எதுவும் இல்லை!
80-களின் அரதப்பழசான நைந்துபோன பழைய காக்கிச் சட்டைக் கதையை இஸ்திரி போட்டு விஜய் சேதுபதிக்கு மாட்டி விட்டிருக்கிறார் இயக்குநர் பொன்ராம். விஜய் சேதுபதி அறிமுகமாகும் ஆரம்பக் காட்சியில் மட்டும் அனல் பறக்கிறது. போலீஸ் உடை பொருத்தமாக இருந்தாலும் போகப்போகக் கதையில் வரும் தேவையற்ற ஃப்ளாஷ்பேக்குகளும், போலீஸான பிறகு அவர் செய்யும் சுமாரான சாகசங்களும் பலத்த ஏமாற்றமே! 'போலீஸுக்கு ஃபிட்னெஸ் தேவையில்லை. ஸ்மார்ட்னெஸ் மட்டும்போதும்' என்று நினைக்க வைக்கும் விஜய் சேதுபதியின் பாடிலாங்குவேஜுக்காகவே அவர் தைரியத்தைப் பாராட்டலாம்.
படத்தின் ஹீரோயின் அனு கீர்த்தி வாஸ். தமிழ்நாட்டு முகம். ஹீரோ பூக்கடை - ஹீரோயின் மிக்சர் கடை என்று 'எப்படியெல்லாம் யோசிச்சு சீன் வெச்சுருக்கீங்க சாமி!' என வியக்க வைக்கிறார்கள். 'அடங்குங்கடா..!', 'செஞ்சு விட்ருவேன்!', 'போய்ட்டே இரு!' என 'திண்டுக்கல்' பெண்ணாய் வளையவரும் ஹீரோயின் பாத்திரத்தில் உயிர்ப்பே இல்லை. இவருக்கும் விஜய் சேதுபதிக்குமான லவ் ட்ராக் படத்தின் கதையோட்டத்துக்குக் கொஞ்சம்கூட உதவி செய்யவில்லை. போதாக்குறைக்கு இந்த லவ் எபிசோடில், 'அன்னபூரணி... என்னை லவ்வு பண்ணி நீ!' என்ற ரொமான்டிக் பாட்டு வேறு வருகிறது. எதுக்கு... கதையை மறக்கத்தான்... தியேட்டரை மறக்கத்தான்... வெளியே போகத்தான்!

காமெடிக்கு எனப் படத்தில் புகழ், சிங்கம்புலி, தீபா சங்கர் என நிறைய பேர் இருக்கிறார்கள். ஷிவானி நாராயணன்கூட இருக்கிறார். ஆனால், மருந்துக்கும்கூட ஒருவரும் சிரிக்கவைக்கவில்லை. அதிலும், 'குபுகுபுகுனு நுரை வந்தா ஸ்ட்ராங்கு பீரு... குபுக்குனு நுரை வந்தா லெஹர் பீரு!' என புகழிடம் கு.ஞானசம்பந்தம் சொல்லும் தகவல் எல்லாம் திண்டுக்கல் கல்வெட்டில் பொறிக்கப்பட வேண்டிய அரிய கண்டுபிடிப்பு!
போலீஸ் படத்தில் துளியூண்டாவது புத்திசாலித்தனமான காட்சிகள், லாஜிக்கான காட்சிகள் இருக்க வேண்டும் என்பது அடிப்படை விதி. இந்தப் படத்தில் அப்படி ஒரு காட்சிகூட இல்லை. எம்.எல்.ஏ யாரையாவது சுடச் சொன்னால் டி.எஸ்.பி சுட்டுவிடலாம் என்கிற அளவிலேதான் காவல்துறை பற்றிய புரிதல் இருக்கும்போது 'இதற்கு மேல் எதுக்கு எதிர்பார்த்துக்கிட்டு' என்ற மோடுக்கே செல்ல வேண்டியிருக்கிறது. லாக்-அப் மரணங்கள் பற்றியும் மனித உரிமை பற்றியும் பேசும் இக்காலகட்டத்தில் உண்மையைப் பேச வைக்க வில்லனின் ஆட்களைத் தலைகீழாகத் தொங்கவிட்டு, போலீஸ் அடி என்னவென்று ஜாலியாய் காட்டுகிறார் ஹீரோ. ஏன்..? இதனாலேயே வில்லனுக்கும் நாயகனுக்குமான மோதல் ஒருகட்டத்தில் சவசவத்துப் போகிறது.
போலீஸ் ஸ்டேஷனில் உட்கார்ந்து கொண்டு, 'குடிச்சிருக்கானா..? கம்மியா குடிச்சிட்டு வீட்டுல போயி தூங்கச் சொல்லுங்க!' என அட்வைஸ் பண்ணும் டி.எஸ்.பியிடம் வேறு என்ன எதிர்பார்த்துவிட முடியும்? படத்தில் கெஸ்ட் ரோலில் நட்புக்காக விமல் வந்து போகிறார். ஆனால் 'இவர் வேற சீரியஸா காமெடி பண்ணிக்கிட்டு!' என்று மட்டுமே நினைக்கத் தோன்றுகிறது.

க்ளைமாக்ஸில் ஆக்ரோஷமாகச் சண்டைபோடும்போதுகூட ஹீரோவிடம், '5 சான்ஸ் தர்றேன்' என்று சொல்கிறார் வில்லன். இதெல்லாம் ஈஸ்ட்மேன் கலர் காலத்து ஃபைட் சீக்வென்ஸ் ஐடியா. இன்னுமா இந்த டீ ஆறல? அதைக்கூட மன்னித்து மறந்துவிடலாம். அதே க்ளைமாக்ஸில் கொலவெறியோடு மோதிக் கொண்டிருக்கும்போது, வில்லனுக்கு டீ வருகிறது. சண்டையை நிறுத்திவிட்டு, 'ஒரு டீ சாப்பிட்டுட்டு சண்டை போடலாமா?' என்று வில்லன் கேட்பதெல்லாம் எதில் சேர்ப்பது என்று சத்தியமாய் புரியல..!
படத்தில் ஒளிப்பதிவு, எடிட்டிங் என சில துறைகளில் உள்ளவர்கள் சத்தமில்லாமல் வேலை பார்த்திருக்கிறார்கள் போல. நாமும் அப்படியே அதைக் கடந்து விடலாம். சொல்லுவதற்கென்று சிறப்பாய் ஒன்றுமில்லை! இசை... இமான். காதைப் பதம் பார்க்கும் பின்னணி இசையோடும், பெரிதாய் ஈர்க்காத பாடல்களோடும் அவர் பங்குக்குச் 'சிறப்பாய்' செய்திருக்கிறார்.
மொத்தத்தில் அவர்கள் பாஷையில் சொல்வதென்றால்... `வில்லனைப் பழிவாங்குறதா சொல்லிட்டு எங்களை பழிவாங்கிட்டீங்களேய்யா!'
மேலும் படிக்க DSP Review: அதே டெய்லர், அதே வாடகை; தமிழ் சினிமாவின் மற்றுமொரு டெம்ப்ளேட் காக்கிச்சட்டை சினிமா!