கேரள மாநிலம், பாறசாலை மூல்யங்கரையைச் சேர்ந்த கல்லூரி மாணவன் ஷாரோன்ராஜ் கொலை வழக்கில் அவருடைய காதலி கிரீஷ்மா கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். கிரீஷ்மாவுக்கு உடந்தையாக இருந்ததாக கைதுசெய்யப்பட்ட அவருடைய தாய் சிந்து, தாய் மாமா நிர்மல் குமார் ஆகியோரும் சிறையில் இருக்கின்றனர். இந்த நிலையில், கேரளா போலீஸார் ஷாரோன்ராஜ் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தயாராகிவிட்டனர். அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்படவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கிடையே குற்றப்பத்திரிகையில் உள்ள தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

கிரீஷ்மாவுக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவருக்கும் நிச்சயமான நிலையில், ஷாரோன்ராஜை கடந்த அக்டோபர் மாதம் தனது வீட்டுக்கு வரவழைத்து கஷாயத்தில் விவசாயத்துக்குப் பயன்படுத்தும் பூச்சிமருந்தை கலந்து கொடுத்திருக்கிறார் கிரீஷ்மா. பூச்சிமருந்து கலந்த கஷாயம் கொடுக்கப்பட்ட நிலையில், அக்டோபர் 25-ம் தேதி ஷாரோன் இறந்தார். திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீஸார் கிரீஷ்மாவை கஸ்டடியில் எடுத்து விசாரனை நடத்தினர். கிரீஷ்மாவின் மொபைல்போனில் பல போட்டோக்கள் அழிக்கப்பட்டாலும், அவற்றை போலீஸார் மீட்டிருக்கின்றனர்.

கிரீஷ்மா கூகுளில் சர்ச் செய்து ஜூஸ் சேலஞ்ச் நடத்தியது தெரியவந்திருக்கிறது. ஜூஸில் பூச்சிமருந்து கலந்தால் உடலின் எந்ததெந்த உறுப்புகள் பாதிக்கும் என கிரீஷ்மா கூகுளில் பார்த்து தெரிந்துகொண்டதும், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதலே ஷாரோன்ராஜை கொலைசெய்ய திட்டம்தீட்டி வந்ததும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. நான்கு முறை கொலைசெய்ய முயன்று, ஐந்தாவது முறையாக ஷாரோன்ராஜின் உயிரை காவுவாங்கியிருக்கிறார் கிரீஷ்மா. ஷாரோன்ராஜ் கொலையில் கிரீஷ்மாவின் தாய் சிந்து, தாய் மாமா நிர்மல்குமார் ஆகியோருக்கு நேரடி தொடர்பு இல்லை என்றாலும், கொலை நடக்கப்போகிறது என அவர்களுக்கு தெரிந்திருந்ததாகவும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
மேலும் படிக்க 10 மாத பிளான்; கூகுளில்தேடி கொலையை அரங்கேற்றிய கிரீஷ்மா- ஷாரோன்ராஜ் வழக்கில் கசிந்த குற்றப்பத்திரிகை