மஞ்சள் காமாலையின் தீவிரத்தை, நிறமாற்றம் கொண்டு எவ்வாறு கண்டறிவது?
பிலிருபின் அளவு பிறந்ததிலிருந்து அதிகரிக்கத் தொடங்கி மூன்றாவது தினம் உச்சத்தைத் தொட்டு, பின் குறையத் தொடங்கும். குழந்தை பிறந்த முதல் அல்லது 2வது தினத்திலேயே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்தால், மஞ்சள் காமாலை உள்ளதா என்பதை உறுதிசெய்ய 3வது அல்லது 4வது நாளில் மருத்துவரை மீண்டும் அணுகுவது முக்கியம். மஞ்சள் நிறமாற்றத்தின் அளவைக் கொண்டு, உடலில் பிலிருபினின் அளவை கணிக்க முடியும். இதனை க்ராமர் விதி (Kramer’s rule) என்றழைப்போம்.

குழந்தையை இயற்கை வெளிச்சத்திலோ அல்லது வெண்மை ஒளியின் கீழோ, அதன் உடைகளை முழுதும் நீக்கி பரிசோதிக்க வேண்டும்.
ஆள்காட்டி விரலை சில நொடிகள் குழந்தையின் சருமத்தில் அழுத்தியெடுக்கும்போது, குழந்தையின் சருமத்தில் மஞ்சள் நிறமாற்றம் ஏற்படுகிறதாவென பார்க்க வேண்டும்.
மஞ்சள் நிறமாற்றம், எலுமிச்சை மஞ்சள் நிறத்தில், முகத்தில் மட்டும் இருந்தால், பிலிருபின் அளவு 5-7 mg/dL, மார்பு மற்றும் மேல்பகுதி வரை இருந்தால் – 7-9 mg/dL, கீழ் வயிறு மற்றும் தொடைப்பகுதி வரை இருந்தால் – 9-11 mg/dL, முழங்கால் மற்றும் கைகளில் இருந்தால் – 11-13 mg/dL மற்றும் உள்ளங்கை மற்றும் பாதங்கள் வரை இருந்தால் – 13-15 mg/dL வரை ரத்தத்தில் உள்ளதென கணிக்கலாம்.
அதுவே மஞ்சள் நிறமாற்றம் ஆரஞ்சு மஞ்சள் நிறத்தில், முகத்தில் மட்டும் இருந்தால், பிலிருபின் அளவு 7-9 mg/dL, மார்பு மற்றும் மேல் பகுதி வரை இருந்தால் – 9-11 mg/dL, கீழ் வயிறு மற்றும் தொடைப் பகுதி வரை இருந்தால் – 11-13 mg/dL, முழங்கால் மற்றும் கைகளில் இருந்தால் – 14-16 mg/dL மற்றும் உள்ளங்கை மற்றும் பாதங்கள் வரை இருந்தால் – 17 mg/dL மேல் இரத்தத்தில் உள்ளதென கணிக்கலாம். மஞ்சள் நிறமாற்றம் முழங்கால் மற்றும் கைகளில் இருப்பது தெரியவந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். மருத்துவர் Transcutaneous Bilirubinometer (TcB) கொண்டு பிலிருபின் அளவை கண்டறிவார். அதிகமாக இருக்கும்பட்சத்திலோ, TcB இல்லாதபட்சத்திலோ, ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பிலிருபினின் அளவு உறுதி செய்யப்படும்.
சிகிச்சை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது?
முதலில் ரத்தப் பரிசோதனை மூலம் பிலிருபினின் அளவு கண்டறியப்படும். 35 வாரங்களுக்குப் பிறகு பிறக்கும் குழந்தைகளுக்கு ‘American Academy of Pediatrics (AAP)’ மற்றும் 35 வாரங்களுக்கு முன் பிறந்த குறைமாத குழந்தைகளுக்கு NICE Guidelines / Maisel’s chart வரையறுத்துள்ள ஒளிக்கதிர் சிகிச்சை மற்றும் ரத்த மாற்றம் வரை கட்டத்தில், பிலிரூபினின் அளவு குறிக்கப்பட்டு, ஒளிக்கதிர் சிகிச்சை அல்லது ரத்த மாற்ற சிகிச்சைக்குத் தேவையுள்ளதா என்பதை மருத்துவர் முடிவு செய்து சிகிச்சையைத் தொடங்குவார்.
ஒளிக்கதிர் சிகிச்சை என்றால் என்ன?
ஒளிக்கதிர் சிகிச்சைக்கு (Phototherapy) பயன்படுத்தப்படும் விளக்குகள் 460-490 nm அலைநீளத்தில் நீல நிற கதிர்களை உமிழக் கூடியவை. இந்த அலைநீளத்தில், உடலிலுள்ள பிலிருபின் நீரில் கரையக்கூடிய சமபகுதியமாக (isomers) மாற்றப்பட்டு, சிறுநீர் மற்றும் மலத்தில் கழிவாக வெளியேற்றப்பட்டுவிடும். இதன் மூலம் உடலிலுள்ள பிலிருபினின் அளவு குறைந்து, மூளை பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்பட்டுவிடும். ஒளிக்கதிர் சிகிச்சையின் போது, அதன் கதிர்கள் குழந்தையின் கண்களில் படாமல் இருக்க, கண்கள் பேண்ட் கொண்டு மூடப்படும். மேலும் கதிர்கள் உடல் முழுதும் படுவதற்காக டயப்பர் விடுத்து, அனைத்து உடைகளும் நீக்கப்படும். பிலிருபினின் அளவு மிகவும் அதிகமாக இருந்தால், குழந்தையின் மேல்புறம் மட்டுமல்லாமல் கீழ்ப்புறத்திற்கும் ஒளிக்கதிர் சிகிச்சை (Double Surface Phototherapy) கொடுக்கப்படும்.
ஒளிக்கதிர் சிகிச்சைக்குப் பிறகு பிலிருபினின் அளவு குறைகிறதா என்று பரிசோதிக்கப்படும். 12 மணி நேர இடைவேளையில் செய்யப்பட்ட இரு ரத்தப் பரிசோதனைகளின் பிலிருபினின் அளவு ஒளிக்கதிர் சிகிச்சைத் தேவையின் எல்லைகீழ் இருந்தால், ஒளிக்கதிர் சிகிச்சை நிறுத்தப்படும். முன்பு, CFL விளக்குகளே பெரும்பான்மையாக பயன்படுத்தப்பட்டன; தற்போது பிலிருபினின் அளவை வெகுவாகவும், வேகமாகவும் குறைக்கவல்ல அதிக வீரியமுள்ள LED விளக்குகள் உபயோகத்திற்கு வந்துவிட்டன.

ஒளிக்கதிர் சிகிச்சை, உடலிலுள்ள பிலிருபினின் அளவைத்தான் குறைக்குமே தவிர, பிலிருபின் அதிகரித்ததற்கான காரணத்தைச் சரி செய்யாது. எனவே, அடிப்படை காரணத்தைக் கண்டறிந்து சரிசெய்வது மிக முக்கியமாகும். பிலிருபினின் அளவு மீண்டும் அதிகரிக்கிறதா, என்பதைக் கண்டறிய ஒளிக்கதிர் சிகிச்சை நிறுத்திய பிறகு 12 மற்றும் 24 மணி நேரத்தில் மீண்டும் ரத்தப் பரிசோதனை தேவைப்படும். எனவே, பல்வேறு முறை ரத்த நாளங்களிலிருந்து ரத்த மாதிரிகளைச் சேகரிப்பதற்குப் பதிலாக, குதிகால் குத்தல் (heel prick) மூலம், துளி ரத்தத்தின் வாயிலாக Capillary TSB மூலம் பிலிருபினின் அளவு கணடறியும் வசதி, நாட்டின் முக்கிய மருத்துவக் கல்லூரிகளான எய்ம்ஸ், PGI மற்றும் ஜிப்மரில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இனி வரும் காலங்களில், நமது அரசு மருத்துவமனைகளிலும் எதிர்பார்க்கலாம்.
தற்போது, பச்சிளம் குழந்தைகளில் ஏற்படும் மஞ்சள் காமாலை பற்றி விரிவாக அறிந்திருப்பீர்கள்! முதல் அத்தியாயத்தில் தாங்கள் கேட்டிருந்த கேள்வியில், தாய் மற்றும் குழந்தையின் ரத்த வகை குறிப்பிடப்படாததால், Rh அல்லது ABO இணக்கமின்மை இருக்குமா என்பதை அறிய முடியவில்லை. மேலும், பிலிருபினின் அளவும் கூறப்படாததால், மஞ்சள் காமாலையின் தீவிரம் என்னவென்று தெரியவில்லை. எனினும், பிறந்த 3 நாள்களில் 300 கிராம் எடையிழப்பு என்பது, பிறந்த எடையின் 10% ஆகும். பிறந்த முதல் 7 நாள்களில் எடையிழப்பு இருக்குமெனினும், ஒரு நாளுக்கு 2% மேல் இருக்கக் கூடாது. குழந்தைக்கு போதிய தாய்ப்பால் கிடைக்காததையே இது காட்டுகிறது. எனவே, ‘Breast feeding failure jaundice’ தான் மஞ்சள் காமாலையின் காரணமாக இருக்கக்கூடுமென நான் கருதுகிறேன். தாய்ப்பால் கொடுக்கும் நிலை மற்றும் இணைப்பு சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

தாய்ப்பால் சுரப்பு போதுமானதாக உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். மன அழுத்தம் மற்றும் வலி போன்றவை தாய்ப்பால் சுரப்பை குறைத்துவிடும் என்பதால், அதையே நினைத்து அழுத்தத்திற்கு உள்ளாகாதீர்கள். தேவைப்பட்டால் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க மாத்திரைகள் மற்றும் உணவுமுறைகளில் மாற்றங்களை மருத்துவர் பரிந்துரைப்பார். குழந்தைக்கு போதுமான அளவு பால் கிடைப்பதை உறுதி செய்ய, சில நாள்கள் பாலாடையிலும் பால் கொடுக்க அறிவுறுத்துவார். மேற்குறிப்பிட்டதுபோல ஒளிக்கதிர் சிகிச்சை பிலிருபினின் அளவை குறைக்கவல்லது.
பிலிருபின் ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டும்போதுதான் மூளை பாதிப்பு ஏற்படத் தொடங்கும். அதைத் தடுக்க ‘ரத்த மாற்றம்’ செய்ய வேண்டுமென்ற AAP-இன் DVET வரைகட்டத்தில் உள்ள அளவிற்கு மேல் குழந்தையின் பிலிருபின் இருந்தால், ‘ரத்த மாற்றம்’ செய்து மூளை பாதிப்பு ஏற்படாமல் தடுத்துவிட முடியும். Rh-இணக்கமின்மை போன்ற காரணங்களால், குழந்தையின் ரத்த சிவப்பணுக்கள் சிதைவுற்றால் மட்டுமே அந்த அளவிற்கு பிலிருபினின் அளவு அதிகரிக்கும் என்பதாலும், பெரும்பான்மையான ‘Breast feeding failure Jaundice’, ஒளிக்கதிர் சிகிச்சை மற்றும் போதுமான பால் கிடைப்பது மூலம் சரியாகிவிடுமென்பதாலும், ‘மூளை பாதிப்பு’ குறித்தோ `ரத்த மாற்றம்’ குறித்தோ நீங்கள் கவலை கொள்ளாதீர்கள்.
பராமரிப்போம்...
மேலும் படிக்க மஞ்சள் காமாலையின் தீவிரத்தைக் கண்டறிய உதவும் நிறமாற்றம் | பச்சிளம் குழந்தை பராமரிப்பு- 2