கேரள மாநிலத்தில் கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் சி.பி.எம் தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணி வெற்றிபெற்று பினராயி விஜயன் மீண்டும் முதல்வர் ஆனார். இந்த தேர்தலில் மலப்புறம் மாவட்டம் பெருந்தல்மண்ண சட்டமன்ற தொகுதியில் 1,65,616 ஓட்டுகள் பதிவாகியிருந்தன. காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் கூட்டணியின் முஸ்லிம் லீக் வேட்பாளர் நஜீப் காந்தபுரம் 76,530 வாக்குகளும், எல்.டி.எஃப் வேட்பாளர் கே.பி.முஹம்மது முஸ்தபா 76,492 வாக்குகளும் பெற்றார். மீதமுள்ள ஓட்டுகள் பிற வேட்பாளர்கள் பெற்றனர். இதில் 38 ஓட்டுகள் வித்தியாசத்தில் முஸ்லிம் லீக் வேட்பாளர் நஜீப் காந்தபுரம் வெற்றிபெற்றார். மாநிலத்தில் மிகவும் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற வேட்பளர் இவர்தான்.

அதேசமயம் அவரை எதிர்த்து போட்டியிட்ட எல்.டி.எஃப் வேட்பாளர் கே.பி.முஹம்மது முஸ்தபா ஐகோர்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், ``கொரோனா சமயத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் பெறப்பட்ட 348 ஸ்பெஷல் தபால் ஓட்டுக்களில் தேர்தல் அதிகாரிகளின் கையொப்பம் இல்லை என்பதால் அவை எண்ணப்படாமல் மாற்றிவைக்கப்பட்டது. ஆனால், அவற்றையும் எண்ண வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 348 ஓட்டுகள் அடங்கிய மூன்று வாக்குப்பெட்டிகளையும் சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டது. இதன்படி, ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த கரூவூலத்தின் பாதுகாப்பு அறையை திறந்து பார்த்தபோது அங்கு இரண்டு பெட்டிகள்தான் இருந்தன. ஒரு ஓட்டுப்பெட்டி காணாமல்போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பெருந்தல்மண்ணயில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கூட்டுறவு வங்கியின் துணை பதிவாளர் அலுவலகத்தில் அது இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஓட்டுப்பெட்டிகள் கோர்டில் ஒப்படைக்கப்பட உள்ளன. அதே சமயம் ஓட்டுப்பெட்டி வேறு இடத்துக்குச் சென்றது எப்படி என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாநில தேர்தல் அதிகாரி மலப்புறம் மாவட்ட கலெக்டரிடம் அறிக்கை கேட்டுள்ளார்.
மேலும் படிக்க `காணாமல்போன ஓட்டுப்பெட்டி... 22 கி.மீ தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டது' - கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்