தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள களப்பாகுளம் பகுதியில் காவல்துறையினர் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக இரு வாகனங்கள் வேகமாக வந்துள்ளன. அவற்றை மறித்த சங்கரன்கோவில் தாலுகா காவல்துறையினர் அதில் இருந்த நபர்களிம் எங்கிருந்து வருகிறார்கள் என்பது பற்றியும் எங்கே செல்கிறார்கள் என்பது குறித்தும் விசாரித்துள்ளனர். ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பேசியதால் போலீஸாருக்கு சந்தேகம் வந்துள்ளது.

வாகனத்தை முழுமையாகச் சோதனையிட முடிவுசெய்து சாலையின் ஓரத்தில் நிறுத்துமாறு சொன்னதும் காரில் இருந்தவர்களின் முகத்தில் அச்சம் ஏற்பட்டுள்ளது. அதனால் காருக்குள் ஏதோ சந்தேகப்படும் வகையிலான பொருள் இருப்பதைக் கணித்துவிட்ட போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தியபடியே காரையும் முழுமையாகச் சோதித்துள்ளனர். அப்போது காரின் சீட்டுக்குள் கட்டுக்கட்டாக கள்ள நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததைக் கண்டுபிடித்தனர்.
காருக்குள் இருந்து 40 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். அவற்றை அப்பாவி கிராம மக்களிடம் இரண்டு மடங்காகக் கொடுத்து தாங்கள் பணத்தை மாற்றிக் கொள்வதாகப் பிடிபட்டவர்கள் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். கிராமப் பகுதிகளில் இது போல இரண்டு மடங்காகப் பணத்தைக் கொடுத்தால் சந்தேகம் ஏற்படாது என்பதால் தென்காசி மாவட்டத்துக்கு வந்ததாகத் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் இருந்ததை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

பிடிபட்டவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்திய பின்னர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கள்ள நோட்டுகள் பிடிபட்ட சம்பவத்தில் வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்த ஜெகதீசன் என்ற சுரேஷ், பாலசுப்ரமணியன் என்ற பாபு, சந்தோஷ், வீரபத்திரன், குண்டவட்டம் பகுதியைச் சேர்ந்த சிராஜ் கரீம், ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த வளர்மதி, கிருஷ்ணவேணி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். சங்கரன்கோவில் பகுதியில் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க தென்காசி: வாகன சோதனையில் கட்டுக்கட்டாக கள்ள நோட்டுகள் பறிமுதல் - இரு பெண்கள் உள்பட 7 பேர் கைது!