17 வயது பால் பௌமரின் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி. தன் இத்தனை ஆண்டுக் கால வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் கிடைத்துவிட்டதற்கான திருப்தி. பௌமர் மட்டுமல்ல அங்குக் கூடியிருக்கும் நூற்றுக்கணக்கான இளம் பாலகர்களின் முகங்களிலும் மனங்களிலும் அப்படியான ஓர் உணர்ச்சி நிலைதான் நிலவியது.
“ஜெர்மனியின் எதிர்காலம் இளைஞர்களான உங்களை நம்பியே உள்ளது” என்ற அங்கு வருகை புரிந்திருந்த தலைவரின் தீர்க்கமான சொற்பொழிவைக் கேட்டு ஒட்டுமொத்த கூட்டமும் வேறொரு உற்சாக தளத்துக்குச் செல்கிறது. ஆனால், அங்குக் கூடிருந்த 18 வயது நிரம்பிடாத பாலகர்கள் முதலாம் உலகப்போரின் யுத்தகளம் எத்தனை ரணமானது என்பதை அந்த நொடியில் அறிந்திருக்கவில்லை. ஒவ்வொருவரின் மனங்களிலும் தேசப்பற்றே பீறிட்டு மேலெழும்பி நிற்கிறது.

இப்படியாகத் தொடங்குகிறது நெட்ப்ளிக்ஸின் மெகா பட்ஜெட் வார்-டிராமா திரைப்படமான ‘All Quiet on the Western Front’. சமீபத்தில் வெளியான மிகச்சிறந்த Anti-War (யுத்தங்களுக்கு எதிரான) படங்களுள் ஒன்றாகக் கருதப்படும் இத்திரைப்படம் தற்போது சிறந்த திரைப்படம், சிறந்த வேற்று மொழித்திரைப்படம், ஒளி மற்றும் ஒலிப்பதிவு, கலைவடிவமைப்பு, விஷுவல் எஃபெக்ட்ஸ், ஒப்பனை, பின்னணி இசை, திரைக்கதைத் தழுவல் என 9 வெவ்வேறு பிரிவுகளில் ஆஸ்கருக்காகப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
முதலாம் உலகப்போரில் நடந்த உண்மை சம்பவங்கள் மற்றும் ராணுவ வீரராக தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை ‘Im Westen nichts Neues’ என்ற பெயரில் 1929-ம் ஆண்டில் ஜெர்மன் மொழியில் நாவலாக வெளியிட்டிருந்தார் எரிச் மரியா ரெமார்யூ. அந்நாவலைத் தழுவி 1930, 1979 என இருவேறு காலகட்டங்களில் திரைப்படங்கள் வெளியாயின. அதில் 1930-ம் ஆண்டு வெளியான படம் 'சிறந்த திரைப்படம்' உட்பட இரண்டு ஆஸ்கர்களை வென்றது குறிப்பிடத்தக்கது.
இருந்தும், எட்வர்ட் பெர்கரின் இயக்கத்தில் ஜெர்மனி மொழியில் முதன்முறையாக உருவாகி வெளியாகியிருக்கும் 'All Quiet on the Western Front' Anti-War திரைப்படங்களுள் முக்கியமானதொரு இடத்தைப் பிடிப்பது ஏன்?

போர்களுக்கு எதிரான கருத்தாக்கங்களைக் கொண்ட திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டுதான் இருக்கின்றன. இருப்பினும் அவற்றுள் பெரும்பான்மையானவை போரால் ஏற்படும் பாதிப்புகள் மூலமாகவே அவற்றுக்கு எதிரான கருத்துகளை உருவாக்க முற்படுபவை. வெகுசில படைப்புகள்தான், தனிமனித அளவில் ஏற்படும் புற பாதிப்புகளைத் தாண்டி அக மாற்றங்களையும் பேசி போர்களின் தீவிரத்தன்மையும் பேச முற்படும். அந்த வகையில் அந்த உணர்வை மிகச்சிறப்பாகக் கையாண்டிருக்கிறது 'All Quiet on the Western Front'.
முதல் நாள் யுத்தத்திலேயே தன் உற்ற நண்பனை இழக்கும் பாலுக்கு நெற்றிப்பொட்டில் அறைந்தாற்போல களத்தின் யதார்த்தத்தை உணர்த்துகிறது போர். இறந்த தன் நண்பனின் உடலைக் காணும் அந்த நொடி, போர் குறித்த கனவுகள் அனைத்தும் சுக்குநூறாகி போகின்றன. அவன் தேசப்பற்று ஒன்றும் இல்லாமல் போகிறது. நாள்கள் செல்ல செல்ல எந்த நொடியிலும் உயிர் பறிபோகலாம் என்ற நிச்சயமற்ற சூழல் பாலை வேறொரு மனிதனாக மாற்றுகிறது. மறுபுறம், பிரான்சுடன் அமைதி உடன்படிக்கையில் ஜெர்மன் அதிகாரிகள் ஈடுபடுகிறார்கள். முடிவில் போர் நின்றதா, பாலின் கதி என்ன என்பதை ரத்தமும் சதையுமாக அதனுடன் எஞ்சியிருக்கும் மனிதத்தன்மையுடன் காட்சிப்படுத்தியிருக்கிறது திரைப்படம்.

படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் பிரமாண்டம் காட்டிய அதே நேரத்தில் போர்க்களத்தில் இருக்கும் ராணுவ வீரன் ஒருவனின் மனநிலையை அட்டகாசமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜேம்ஸ் ஃப்ரெண்ட். அந்த அகநிலை எண்ணவோட்டங்கள் பார்வையாளர்களுக்கு முழுமையாகக் கடத்தப்பட்டிருக்கின்றன. அறிமுக நடிகர் ஃபெலிக்ஸ் காமரர் பதின்வயது பால் பௌமராகவே வாழ்ந்திருக்கிறார். எதிரி வீரர் ஒருவரைக் கத்தியால் குத்திவிட்டு அடுத்த சில நிமிடங்களில் அவன் குடும்ப புகைப்படத்தைப் பார்த்துவிட்டுப் பதற்றப்படும் காட்சி ஒன்றே மொத்த படத்தின் ஆழத்துக்குச் சாட்சி.

கலை வடிவமைப்பு, ஒளிப்பதிவு, ஒலி சேர்ப்பு என டெக்னிக்கல் டீம் ஒவ்வொன்றின் பணிகளும் நம்மை முதலாம் உலகப்போரின் இறுதி வருடங்களுக்கே அழைத்துச் சென்றுவிடுகின்றன.
படத்தின் வெற்றிக்கான காரணத்தை இயக்குநர் பெர்கர் இவ்வாறு குறிப்பிடுகிறார். “முதலாம் உலகப்போர் முடிந்து 100 வருடங்களுக்கு மேல் ஆனாலும், தேசியவாதம் என்ற பெயரில் மக்கள் நம்பும் ஓர் உணர்வு அவர்களை இப்படத்துடன் எளிதில் தொடர்புப்படுத்தி விடுகிறது. மேலும் ஐரோப்பாவில் வலதுசாரி அரசுகள் பெருகிவிட்டன. ஐரோப்பிய ஒன்றியத்தின் இருப்பே கேள்விக்குறியாகியுள்ளது” என்று ஆதங்கப்படுகிறார்.
நெட்ப்ளிக்ஸின் பிரமாண்ட படைப்பான இது, நிச்சயம் நான்கு ஆஸ்கர் விருதுகளையேனும் அள்ளும் என்பதே உலகெங்கும் உள்ள திரைப்பட விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது.
மேலும் படிக்க All Quiet on the Western Front: "பெருகும் தேசியவாதம், வலதுசாரி அரசுகள்!" - படம் சொல்லும் சேதி என்ன?