சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் மண்டலகால பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 16-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. கடந்த மாதம் 27-ம் தேதி மதியம் தங்க அங்கி சார்த்தி ஐயப்ப சுவாமிக்கு மண்டல பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து அன்று இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடப்பட்டு கோயில் நடை சார்த்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மகரவிளக்கு பூஜைகளுக்காக கடந்த 30-ம் தேதி மாலை சபரிமலை நடை திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்டதில் இருந்து பக்தர்கள் அதிக அளவில் சென்று சாமிதரிசனம் நடத்தி வருகின்றனர்.
மகரவிளக்கு பூஜை வரும் 14-ம் தேதி நடக்கிறது. வரும் 20-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்காக சபரிமலை நடை திறந்திருக்கும். மண்டல மகரவிளக்கு காலத்தில் சபரிமலை கோயில் அருகே அமைந்துள்ள மாளிகப்புறம் சந்நிதியில் வெடி வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். மாளிகப்புறம் சந்நிதி அருகே வெடி வழிபாட்டுக்காக வெடிமருந்து நிரப்பி, வெடி வெடிக்கும் கூடம் தனியாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மாளிகப்புறம் சந்நிதியில் பக்தர்கள் பணம் செலுத்தினால் மைக்கில் வெடி வழிபாடு குறித்து அறிவிக்கப்படும். அதையடுத்து சற்று தொலைவில் உள்ள பகுதியில் தொழிலாளர்கள் உலோக உருளையில் நிரப்பப்பட்ட வெடியை வெடிக்கவைப்பார்கள். இந்த நிலையில் வெடிமருந்து நிரப்பும் பகுதியில் நேற்று (02-01-2023) திடீரென தீ ஏற்பட்டு, வெடி வழிபாட்டுக்கு பயன்படுத்தும் வெடிமருந்துகள் வெடித்து சிதறின. இதையடுத்து மூன்று தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். வெடி வழிபாடு நடத்தும் பகுதி பக்தர்கள் அதிக அளவில் செல்லாத பகுதி என்பதால் பக்தர்கள் யாருக்கும் காயம் இல்லை என கூறப்படுகிறது.

பயங்கர சப்தத்துடன் ஏற்பட்ட வெடி விபத்தால் சபரிமலையில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் காயம் அடைந்த செங்கன்னூரைச் சேர்ந்த ஜெயக்குமார்(47), அமல்(28), ரஜீஷ்(35) ஆகிய மூன்று தொழிலாளிகளை பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் மீட்டு சந்நிதானத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஜெயக்குமாருக்கு 60 சதவீதம் காயமும், மற்ற இரண்டுபேருக்கு 40 சதவீதம் காயமும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயக்குமார், ரஜீஸ் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக கோட்டயம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க சபரிமலை: வெடிவழிபாட்டுக்காக மருந்து நிரப்பும்போது விபத்து - மூன்று பேர் படுகாயம்