உலகை அச்சுறுத்திய கொரோனா இந்தியாவில் முதன்முதலில் கேரளாவில் கண்டறியப்பட்டது. பிற மாநிலங்களில் கொரோனா தாக்கம் குறைந்தபோதும் வீரியம் குறையாமல் கேரளாவில் கொரோனா தொற்று இருந்துவந்தது.
இந்த நிலையில் உலகின் பல நாடுகளிலும் உருமாறிய கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் மாஸ்க் அணிவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை மாநிலங்களை வலியுறுத்தியது.
ஆனால் ஒவ்வொரு மாநிலத்திலும் அங்கு பரவலுக்கு ஏற்ற வகையில் நடவடிக்கை இருந்துவந்தது. இந்த நிலையில் கேரள மாநிலத்தில் மாஸ்க் அணிவதை கட்டாயம் ஆக்கி அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா அதிகரித்து வருவதால் மீண்டும் மாஸ்க் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது. பொது இடங்களுக்குச் செல்பவர்கள், விழாக்களில் கலந்து கொள்கிறவர்கள், அலுவலகங்களில் பணி செய்பவர்கள், பைக்கில் போகிறவர்கள் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என கேரள அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல நிகழ்ச்சிகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.பொது நிகழ்ச்சி நடக்கும் இடங்களிலும், அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களிலும் கை கழுவ சோப்பு அல்லது கைகளை சுத்தப்படுத்தும் சானிடைசர் வைத்திருக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு ஒருமாதம் வரை அமலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் மீண்டும் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும். முன்னெச்சரிக்கையுடனும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க கேரளா: சமூக இடைவெளி, மாஸ்க் கட்டாயம்; கொரோனா பரவலால் அரசு உத்தரவு!