தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வளம் வருபவர் நடிகர் வடிவேலு. காமெடி நடிகராக அறிமுமான இவர் ஹீரோவாகவும் சில படங்களில் நடித்துள்ளார். சில ஆண்டுகள் நடிக்காமல், திரையுலகில் இருந்து விலகியிருந்த வடிவேலு சமீபத்தில் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' மூலம் கம்பேக் கொடுத்தார். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது மாமன்னன், சந்திரமுகி 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மதுரையில் வசித்து வந்த நடிகர் வடிவேலுவின் தாயார் வைத்தீஸ்வரி காலமானார். அவருக்கு வயது 87. வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் நேற்று இரவு உயிரிழந்துள்ளார். மதுரை வீரகனூரில் அவரது இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் விகடனிற்கு அளித்த பேட்டியில் நடிகர் வடிவேலு தனது அம்மா குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார். அவர் கூறும்போது, "என்னையும் ஒரு மனுசனா மதிச்சு, ரசிச்சுச் சிரிச்சு என்ன வாழவெக்கிற ரசிகருங்கதேன் எஞ்சாமீ. அப்பறம் என் ஆத்தா.

எங்களுக்காக அது தன் வாழ்க்க பூராம் பட்ட தும்பமும் தொயரமும் பெருசுண்ணே. ' இவுகதேன் வடிவேலு அம்மா'னு நாலு பேர் சொல்லும்போது எங்காத்தா சந்தோஷப்படுதே, அதேன் அதுக்கு நா குடுத்த சொத்து" என்று கூறியிருக்கிறார். தற்போது அவரின் மரணம் வடிவேலுவின் குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் வடிவேலுவின் தாயார் மறைவிற்கு திரையுலகினரும், ரசிகர்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க ` எங்க அம்மாவுக்கு நான் குடுத்த சொத்து இதுதான்'- வடிவேலு