எழுத்தாளர் கரீம் , அடிப்படையில் ஒரு வழக்கறிஞர். கோவையைச் சொந்த ஊராகக் கொண்ட இவர் கோவைக் கலவரத்தை மையப்படுத்தி எழுதிய சிறுகதைகளின் தொகுப்பே `தாழிடப்பட்ட கதவு'. சமீபத்தில் வெளியான `முகாம்' கரீமின் முதல் நாவல். குடியுரிமை திருத்தச் சட்டத்தால் ஏற்படும் மோசமான விளைவுகளை மையப்படுத்தி எழுதப்பட்ட நூல் அது.

கரீம் சமூக பொருளாதார அரசியல் கருத்தாக்கத்துடன் கிரியேட்டிவாகவும் எழுதக்கூடிய நபர். அவருடனான இந்நேர்காணலில் தன் இளமைக்காலம் ; வாசிப்பு எழுத்து; அரசியல் மீது தனக்கு ஏற்பட்ட ஆர்வம் எனப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.
வழக்கறிஞரான நீங்கள் எழுதத் தொடங்கியது எப்படி?
நான் கோயம்புத்தூரில் உள்ள அந்தோனியர் தொடக்கப்பள்ளியில் பயின்றேன். பிறகு அரசு பள்ளியில் படித்தேன். 11-ம் வகுப்பில் இந்திய மாணவர் சங்கத்தின் அறிமுகம் கிடைத்தது. அங்கு அரசியல் குறித்தான நல்ல எனக்கு ஏற்பட்டது. என் அப்பா ஒரு புத்தக விரும்பி. அவர் மூலம் ராஜேஷ் குமாரின் நாவல்கள் அறிமுகமானது. என் முகாம் நாவலில் அவர் எழுத்துக்களின் பிரதிபலிப்பை சிறிதளவு காணலாம். சிறுவயதில் கவிதைகள் கிறுக்கிக் கொண்டிருப்பேன். வளரும் பருவத்தில் படித்த புத்தகங்களின் தாக்கம் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது. 2016-ம் ஆண்டு கோயம்புத்தூரில் காவலர் செல்வராஜ் இறப்பைக் காரணம் காட்டி கலவரங்கள் வெடித்தன. அந்த சமயத்தில் பாட்டி இறந்ததற்காக வழிபாடு செய்ய தர்காவிற்கு சென்றிருந்தோம். கலவரத்தில் தர்கா தாக்கப்பட்ட சம்பவம் என்னை அதிகமாகப் பாதித்தது. இந்த கலவரச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதே ‘தாழிடப்பட்ட கதவுகள்’. சி.ஏ.ஏ சட்டமாக அமல்படுத்த பின்னர் அதன் பேராபத்தை உணர்ந்த பிறகு எளிதாகக' கடந்து செல்ல என்னால் முடியாது. இந்த சட்டத்துக்கு எதிராக நான் எடுத்த பிரசார வடிவமே முகாம் நாவல்.
உங்களை அதிகம் பாதித்த நூல்கள் எவை?
மூன்று முக்கியமான புத்தகங்களைச் சொல்லலாம். பெண் தொழிலாளர்கள் பற்றி எழுதப்பட்ட ராஜாமணியின் 'சங்கமம்'. நிரஞ்சனாவின் 'கையறு தியாகிகள்'. அலெக்ஸ் ஹேலியின் ' ஏழு தலைமுறைகள்' ஆகிய புத்தகங்கள் என்னுள் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

முகாம் நாவலுக்காக மேற்கொண்ட ஆய்வுகள் பற்றி ?
குடியுரிமை திருத்தச் சட்டத்தின் ஆபத்துக்களை நாவல் வடிவில் எழுத வேண்டுமென திட்டமிட்ட பிறகு நாவலை எந்தப் புள்ளியிலிருந்து ஆரம்பிப்பது என்பது யோசனையாகவே இருந்தது. அதற்கான ஆய்வில் இஸ்லாமியரின் வரலாற்று எச்சங்கள் கிடைத்தன. சுதந்திரப் போரில் மருது சகோதரருக்கும் திப்பு சுல்தானுக்கும் உதவிய முகமது ஹசம் போன்ற இஸ்லாமியர்களை முன்னிறுத்தி நாவல் தொடங்கினேன். குடியுரிமை மறுக்கப்படவுள்ள இஸ்லாமியர்கள் இந்த நாட்டின் விடுதலைப்போரில் வரலாற்றுப் பின்புலம் கொண்டவர்கள் என்பதை ஆணித்தரமாக பதிவு செய்ய விரும்பினேன் . சி.ஏ.ஏ போராட்டம், அசாம் முகாம் போன்ற உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல் முகாம்.
உங்களைப் பொறுத்தவரை சமூக மாற்றத்தில் எழுத்தின் பங்கு என்ன ?
நாட்டின் பண்பாடு சார்ந்த வரலாற்றுப் பின்னணியை ஆவணப்படுத்துவது எழுத்தின் முதல் கடமை. எழுத்து மனிதனை அறம் நோக்கி இழுத்து வருவதற்கான பாலம். புரட்சிக்கு எழுத்து ஆற்றிய பங்கை ரஷ்ய படைப்புகள் உணர்த்தும். பாரதி, லியோ டால்ஸ்டாய், மாக்சிம் கார்கி ஆகியோரின் படைப்புகள் உலகளவில் ஏற்படுத்திய தாக்கத்தை முற்போக்காளர்கள் உணர்வார்கள். அவர்கள் ஆற்றிய அதே கடமை ஒவ்வொரு எழுத்தாளருக்கும் இருக்கிறது.

சகோதரர்களாகப் பழகி வரும் இந்து இஸ்லாமிய சகோதரர்களின் நட்பும், உறவும் பிளவுபடுவதாக நீங்கள் நினைக்கிறீர்களா?
கடவுள் நம்பிக்கை தீவிரமாக இருக்கும் சமூகம் நம் இந்தியச் சமூகம். கடவுளுக்கு எதிரானவர்கள் சிறுபான்மையினர் என்னும் பொய்யான கருத்தை இந்துத்துவ சக்திகள் தீவிரமாக பிரச்சாரம் செய்கின்றன. கடந்த 10 ஆண்டுகளில் மதவாத சக்திகள் கூர்மையடைந்துள்ளன. இதனால் கடவுளை நம்மிடமிருந்து பிரித்து விடுவார்களா என்ற அச்சம் மத வெறியைத் தூண்டுகிறது. அந்த அச்சத்தின் பெயரால் ஒருவன் நட்பிலிருந்து விலகி பகைமையை தூக்கிப் பிடிப்பவனாக இருக்கிறான்.
குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த உங்கள் பார்வை என்ன?
சிஏஏ சட்டம் இஸ்லாமியர்களை இந்தியாவிலிருந்து களையெடுப்பதற்கான சூழ்ச்சி. சட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னர் அசாம் முகாமில் கிட்டத்தட்ட 19 லட்சம் பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தியா என்பது இந்து நாடு என்பதே மதவாதம் என கட்டமைக்கப்படுகிறது. ஆனால் இந்தியா என்னும் சொல்லே பிரிட்டிஷ் கொண்டு வந்தது. இந்திய சமூகம் சாதிய ரீதியாக கட்டமைக்கப்பட்ட சமூகம் . மதம் பின்னாளில் இணைந்த வழக்க முறை. இந்த சட்டத்தின் மூலம் சிறுபான்மையினர் மட்டுமல்லாமல் நிலமற்ற தொழிலாளர்கள், கம்யூனிஸ்ட்டுகள், மாணவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் போன்றவர்கள் நாட்டிலிருந்து களை எடுக்கப்படுவார்கள் . இவற்றையெல்லாம் தடுப்பதற்கு கருத்தியல் ரீதியான பிரசாரமே இந்த சட்டத்துக்கு எதிரான ஆயுதம்.

இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் குறித்த உங்கள் பார்வை ?
பாஜக ஆட்சிக்குப் பின் கருத்து சுதந்திரம் மழுங்கடிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு எதிராக கருத்துக்களை வெளிப்படுத்துபவர்கள் கொலை செய்யப்படுவது கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. சினிமா, பாடல், எழுத்து மீதான ஒடுக்கு முறைகள் வலுவாகியுள்ளன. கர்நாடகாவில் எழுத்தாளர்கள் குறித்து போடப்பட்ட நாடகம் ஒன்றில் இஸ்லாமிய எழுத்தாளரை காட்சிப்படுத்த உள்ளார்கள் என்பதாலேயே அந்த நாடகத்துக்கு அரசு அனுமதியை மறுத்துள்ளது. இன்றைய பாஜக அரசு தலைமையில் கருத்து சுதந்திரம் என்பதற்கே இடமில்லை.
மேலும் படிக்க "மனிதனை அறம் நோக்கி இழுத்து வருவதற்கான பாலம் எழுத்து" - எழுத்தாளர் கரீம் உடனான நேர்காணல்