கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க
``கதவைத் திறந்ததை தேஜஸ்வியே ஒப்புக்கொண்ட பிறகும் அண்டப்புளுகு அண்ணாமலை, வழக்கம்போல பொய் சொல்லியிருக்கிறார். எளிமையாகத் திறக்கக்கூடிய எமர்ஜென்சி டோரை, ‘ஸ்க்ரூவைக் கழற்றித் திறக்க வேண்டும்’ என்று சொல்லும் அளவுக்குத்தான் அண்ணாமலைக்கு அறிவு இருக்கிறது. இதுநாள் வரையில் இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று சாதித்துக்கொண்டிருந்தவர், இப்போது ‘கதவு ஏற்கெனவே திறந்திருந்தது’ என்று சொல்லியிருப்பது அடுத்த பொய். இந்த விவகாரத்தில், ‘தேஜஸ்விதான் கதவைத் திறந்தார்... அதற்காக மன்னிப்பும் கேட்டுவிட்டார்’ என்று விமானப் போக்குவரத்து அமைச்சரே வெளிப்படையாகச் சொல்லிவிட்டார். அதன் பிறகும், ‘தேஜஸ்வி கதவைத் திறக்கவில்லை’ என்று முட்டுக்கொடுத்து, தனது முட்டாள்தனத்தை நிரூபித்துக்கொண்டிருக்கிறார் அண்ணாமலை. இதையெல்லாம் பார்க்கும்போது கதவைத் திறந்ததில், இவருக்கும் ஏதாவது பங்கு இருக்குமோ என்று தோன்றுகிறது. இது ஒன்றும் சாதாரணமாகக் கடந்து செல்லும் விஷயம் கிடையாது. இதையே ஒரு சாமானியன் செய்திருந்தால், இந்நேரம் வழக்கு, விசாரணை என்று கைதுவரை சென்றிருக்கும். எனவே, இது குறித்து முறையான விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரையில் அரைவேக்காட்டுத்தனமாக எதையாவது உளறாமல் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் அண்ணாமலை.’’

நாராயணன் திருப்பதி, மாநில துணைத் தலைவர், பா.ஜ.க
``அங்கு நடந்ததைத்தான் அண்ணாமலை சொல்லியிருக்கிறார். விமானத்தில் பயணம் செய்யும் அனைவருமே பயணிகள்தான். அவர்களில், அரசியல்வாதி, சினிமாக்காரர்கள் என்ற பாகுபாடு கிடையாது. தேஜஸ்வி அங்கிருந்த பயணிகளின் உயிரோடு விளையாடினார் என்று சொல்வது அபத்தமானது. மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகமே, ‘இது தற்செயலாக நடந்திருக்கிறது’ என்று விளக்கம் அளித்திருக்கிறது. இருந்தபோதிலும், அவர் வேண்டுமென்றே செய்ததுபோல ஒரு பிம்பத்தைக் கட்டமைக்கப் பார்க்கிறார்கள். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை, பொருளாதாரத் தேக்கநிலை, சமூக அநீதிச் சம்பவங்கள் நடக்கின்றன. இதையெல்லாம் மறைப்பதற்கு, உண்மை இல்லாத ஒரு விஷத்தைப் பேசி மக்களைத் திசைதிருப்பப் பார்க்கிறார்கள். அந்த விமானத்தில், பயணித்த தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளரே, விமானத்தில் என்ன நடந்தது என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார். அதன் பிறகும் எங்கிருந்து இப்படியான மோசமான குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை. அண்ணாமலை, ஆளும் தி.மு.க அரசின் ஊழல் குற்றச்சாட்டுகளை மக்கள் மன்றத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார். தமிழகத்தில் பா.ஜ.க அசுர வளர்ச்சி அடைந்துகொண்டிருக்கிறது. இதையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாததால்தான், இல்லாத ஒன்றை மீண்டும் மீண்டும் பேசி கீழ்த்தரமான அரசியல் செய்கிறார்கள்.’’
மேலும் படிக்க ஒன் பை டூ