பொங்கல் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. அன்பு, பாசம், வீரம், விளையாட்டு, நன்றிக்கடன் என தங்கள் வாழ்வியலுக்கான எல்லா விஷயங்களுக்கும் நன்றி பாராட்டி, தமிழர்கள் உணர்வாலும் உற்சாகத்தாலும் கொண்டாடி மகிழும் இந்தப் பண்டிகை உணர்த்தும் சேதிகள் ஏராளம்.
உணவு, மனிதன் உயிர்வாழ இன்றியமையாதது. உலகின் முதன்மையான தொழிலாகத் திகழும் வேளாண்மைக்கு, உலகில் வேறெந்தச் சமூகமும் செய்திடாத சிறப்பாகத் தமிழர்கள் பறைசாற்றும் பொங்கல் மரபுகள், போற்றுதலுக்கு உரிய நற்பண்புகள். அவற்றின் பின்னணியிலிருக்கும் காரண காரியங்களையும், பொங்கல் பண்டிகையின் சிறப்புகளையும் எடுத்துரைக்கின்றனர், தமிழ் மரபுகளைக் கிராமியப் பாடல்கள் வழியே உலகெங்கும் கொண்டு சென்ற மக்கள் இசைப் பாடகர்களான புஷ்பவனம் குப்புசாமி – அனிதா குப்புசாமி தம்பதி.
``பொங்கல் பண்டிகையின் தாத்பர்யமே உழவுக்கும் உழவர்களுக்கும் நன்றி சொல்றதுதான். `உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே'ங்கிற கூற்று ரொம்பவே பிரசித்தம். பிற உயிர்களுக்கும் உணவு தருவதுல மாடுகளுடன் மனிதர்களும் முக்கியப் பங்கு வகிக்கிறாங்க. மாடுகளும் உழவர்களும் வணக்கத்துக்குரிய ஜீவன்களாகப் பார்க்கப்படுறது இதனாலதான். படைக்கும் தொழிலைச் செய்றதால உழவர்களைக் கடவுளுக்கு இணையானவர்களா கிராமத்தினர் கருதுவாங்க.

இப்படி எத்தனையோ தனிச் சிறப்புகளைக் கொண்டிருக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரமும் வளமும் குறைஞ்சுகிட்டே வர்றது நம் பண்பாட்டுக்கும் பாரம்பர்யத்துக்கும் பெரிய பின்னடைவு. அரசாங்கம் முதல், பொதுமக்கள் வரை எல்லோருமே விவசாயிகள் நலனிலும் ஆரோக்கிய உணவுகள் மீதும் அக்கறை காட்டினால் மட்டுமே, வேளாண்மையும் மக்களின் நல்வாழ்வும் செழிக்கும்” அக்கறையுடன் சொல்லும் குப்புசாமியைத் தொடர்ந்து, `போகிப் பண்டிகை’யின் சிறப்புகளைச் சொன்னார் அனிதா...
``ஒவ்வொரு பகுதியிலும் போகியை வெவ்வேறு விதமா கொண்டாடுறாங்க. என் பூர்வீகமான உத்தரப்பிரதேசத்துல குலதெய்வத்துக்குப் படையல் வெச்சு நன்றி தெரிவிக்கும் விதமா போகியைக் கொண்டாடுவோம். `பழையன கழிதலும் புதியன புகுத’லுமா நாம போகியைக் கொண்டாடுறோம். இதுக்கான அர்த்தம் புரியாம, பலரும் தவறான நடைமுறையுடன் இந்தப் பண்டிகையின் மரபை மாத்திட்டாங்க.
இதுவரை இருந்த கஷ்டங்கள், கவலைகள், சிக்கல்கள், பழைமையான மற்றும் பிறரை பாதிக்கிற எண்ணங்கள் கழியட்டும். மேலும், இயலாமை, கல்லாமை, அறியாமை, பொறாமை, இல்லாமை போன்ற விஷயங்கள் எல்லாம் கழிந்து, புது வாழ்வும் வளமும் கிடைக்கக் கொண்டாடப்படுவதுதான் போகி. அந்த நாள்ல பயிர் அறுவடைக்குத் தயாரான வயல்ல சங்கு முழக்கத்துடன், தட்டுல ஓசை எழுப்பி ஆரவாரம் செய்வாங்க. இதனால, வயல்ல விஷ ஜந்துக்கள் ஏதாச்சும் இருந்தா, அவை மனிதர்களுக்குத் தொந்தரவு செய்யாம வேறு இடத்துக்குப் போயிடும். மறுநாள் பயமில்லாம அறுவடை பணிகளைச் செய்வாங்க” என்கிறார் உற்சாகத்துடன்.
ஆண்டுதோறும் போகிப் பண்டிகையில் காற்று மாசுபாடு அதிகரித்து, சுற்றுச்சூழல் பாதிப்பு கணிசமாக உயர்ந்து வருகிறது. இதன் பின்னணியில் இருக்கும் மக்களின் அறியாமையை ஆதங்கத்துடன் பகிர்ந்தார் குப்புசாமி. ``போகியில பலரும் பழைய துணிகளை எரிப்பாங்க. உடுத்த ஆடைகளில்லாத எத்தனையோ பேருக்கு அந்தத் துணிகள் உதவும். பழைய டயர்களை உருக்கி, புது டயர்களா மாத்தலாம். தேவையற்ற மரப்பொருள்களை எரிபொருள் தேவைக்குப் பயன்படுத்தலாம். போகிப் பண்டிகையின்போது பலரும் வீணா எரிக்கிற இதுபோன்ற பெரும்பாலான பொருள்களும், பயனுள்ள தேவைகளுக்கும், பிறரின் கஷ்டங்களைப் போக்கவும் உதவும்.

இதையெல்லாம் யோசிக்காம, வம்படியா பழைய பொருள்களை போகி தினத்துல எரிச்சு, காற்று மாசுபாட்டை ஏற்படுத்தி, வளிமண்டலத்தை பாதிக்கிற வேலையை எவ்வித சஞ்சலமும் இல்லாம பண்ணிட்டு இருக்கோம். பிறருக்குக் கொடுத்து உதவ முடியாத பழைய காட்டன் துணிகளை, நிலத்துல புதைக்கலாம். அவை மண்ணுடன் மட்கிடும். எந்தப் பண்டிகையா இருந்தாலும், அதன் நோக்கம் மகிழ்ச்சியை மேலும் அதிகப்படுத்துறதா மட்டுமே இருக்க முடியும். அதை மறந்துபோன எந்தக் கொண்டாட்டமும் அர்த்தமற்றதே!” என்று உரக்கச் சொன்னவர், பொங்கல் பண்டிகையின் தனிச்சிறப்புகளைக் கூறினார்.
``உழவுக்கு ஒளிச்சேர்க்கை ரொம்பவே அவசியம். இதுக்கான ஒளியைத் தரக்கூடிய கதிரவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமா கொண்டாடப்படுவதுதான் சூரியப் பொங்கல். போகிக்கு அடுத்த நாள் தை 1-ம் தேதி கடைப்பிடிக்கப்படும் `பெரும் பொங்கல்'னு சொல்லப்படுற முதன்மையான பண்டிகைதான் சூரியப் பொங்கல். பழையன கழிதலுக்கு மற்றோர் உதாரணமா, புதுசா அறுவடை செஞ்ச அரிசியிலதான் அன்றைக்குப் பொங்கல் வைப்பாங்க. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்னு உயிரின வளர்ச்சிக்கு காரணமான பஞ்சபூதங்களுக்கும் மரியாதை செய்ற விதத்துல பொங்கல் வழிபாடு நடக்கும். பொங்கல் வைக்க பயன்படுத்தப்படுற பானை மண்ணால் செய்யப்பட்டது. மண் நிலத்திலேருந்து எடுக்கப்படுறதால பானை நிலத்தைக் குறிக்கும். தண்ணீர் மற்றும் பால் ரெண்டுமே நீருக்கு உதாரணம். காத்து இல்லாட்டி எரியும் செயல்பாடு நடக்காது. பொங்கல் தயாராக நெருப்பின் பங்கு முக்கியமானது. வெப்பம் ஆவியாகி ஆகாயத்துல கலக்கும்.

அடுத்து தை 2-ம் தேதி மாட்டுப் பொங்கல். இன்னைக்கு டிராக்டர் பயன்பாடு அதிகரிச்சதால, மாடுகளின் பங்களிப்பும், ஏர் உழவின் மகத்துவமும் பலருக்கும் தெரியாமப் போச்சு. பால் உட்பட உணவு உற்பத்திக்கும், உழவுக்கும் இன்றியமையாத கொடையா நமக்குக் கிடைச்ச ஜீவன்தான் மாடுகள். மாடுகள் பூட்டிய ஏர் உழவாலதான் முன்பெல்லாம் உழவுப் பணி நடந்துச்சு. வேளாண்மைக்குப் பேருதவி செய்யும் மாடுகளுக்கு மரியாதை செய்றதுதான் மாட்டுப் பொங்கலின் சிறப்பு. காலாற நடந்து தனக்கான உணவைச் சேகரிச்சுக்கும் ஆற்றல் படைச்ச மாடுகளைப் பலரும் அடைச்சு வெச்சே வளர்க்கிறாங்க. சுதந்திரமான வாழ்வும் சந்ததி விருத்தியும் இல்லாத வகையில நம் சுயநலத்துக்காக மாடுகளின் நலனைக் கெடுக்கிறதுனு அறத்தை மறந்து செயல்பட ஆரம்பிச்சுட்டோம். இந்தத் தவறுகளையெல்லாம் சரிசெய்யாட்டி, வருங்காலத்துல பொங்கல் பண்டிகையைக் கொண்டாட நியாயமே இல்லாமல் போகலாம்” என்று எச்சரிக்கிறார் குப்புசாமி.
பொங்கலின் கடைசி நாள், காணும் பொங்கல். சொந்தங்கள் கூடி மகிழும் அந்தத் தினத்தின் தனித்துவம் சொல்லும் அனிதா, ``மாட்டுப் பொங்கலுக்கு மறுநாளை கன்னிப் பொங்கல் அல்லது காணும் பொங்கல்னு சொல்லுவாங்க. வேளாண்மையில உழவு ஓட்டுறது, இடுபொருள்கள் கொடுக்கிறதுனு சில வேலைகளைத்தான் ஆண்கள் செய்வாங்க. ஆனா, நாத்து நடுறது, களை எடுக்கிறது, அறுவடை செய்றதுனு பெரும்பாலான விவசாய வேலைகளையும் பெண்கள்தான் செய்வாங்க. அவங்களுக்கு நன்றி சொல்லும் விதமா கொண்டாடப்படுவதுதான் கன்னிப் பொங்கல். அதேநாள்ல சொந்தபந்தங்கள், பலவிதமான உறவுகளோடு ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தி காணும் பொங்கலும் கொண்டாடப்படும்” என்கிறார் கணவரைப் பார்த்துச் சிரித்தப்படியே...
``ஆக மொத்தம், நன்றி சொல்றதுதான் பொங்கலின் தனிச்சிறப்பு. நம் முன்னோர்கள், இயற்கையைத்தான் முதன்மை கடவுளா வழிபட்டாங்க. அதைப் பொங்கல் பண்டிகை தெள்ளத் தெளிவாக உணர்த்துது. அதன் பிறகே உருவ வழிபாடு தோன்றியது. உலகில் எந்தச் சமூகத்திலும் இல்லாத வகையில எண்ணற்ற சிறப்புகளைக் கொண்டிருக்கும் பொங்கல் பண்டிகையை, அதன் மரபு மாறாம கொண்டாடி மகிழ்வோம்; இயற்கையைக் காப்போம்!" என்று கூட்டாகக் கூறும் குப்புசாமியும் அனிதாவும், பொங்கல் வாழ்த்துகளுடன் முடித்தனர்.
மேலும் படிக்க ``பழைய துணி, டயரை எரிக்கறதுதான் பண்டிகையா?" - பாடகர் புஷ்பவனம் குப்புசாமி ஆதங்கம்!