ஒரு சில முக்கியமான கம்பெனிகள் பங்கேற்கவில்லை என்றபோதும், இந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் பரவசத்துக்கும் பரபரப்புக்கும் குறைவில்லை. கார் ஆர்வலர்களால் வெகுகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மாருதி சுஸூகி ஜிம்னி, ஐந்து கதவுகள் கொண்ட காராக அறிமுகப்படுத்தப்பட்டது மட்டுமல்ல; அதற்கான முன்பதிவும் துவங்கிவிட்டது. அதோடு சேர்ந்து ஃப்ரான்க்ஸ் எஸ்யூவியையும் விற்பனைக்கு அது களமிறக்கியது. இந்த ஆட்டோ எக்ஸ்போ ஒருவிதத்தில் மின்சார வாகனங்களுக்கான சிறப்புக் கண்காட்சிபோலவே நடந்தேறியது. இது நாள் வரை மின்சாரக் கார்கள் பற்றி அதிகம் பேசாத மாருதி சுஸூகிகூட, தன் எலெக்ட்ரிக் எஸ்யூவியான eVXயைக் காட்சிப்படுத்தி இருந்தது.
ஆனால், ஹூண்டாய் அரங்கம்தான் மற்ற எல்லா வாகனங்களையும்விட நிற்கக்கூட இடமில்லாமல், கூட்டத்தில் திக்குமுக்காடியது. இதற்குக் காரணம், அது அறிமுகப்படுத்திய ஐயனிக் 5 மட்டுமல்ல, இதை அறிமுகப்படுத்தியது ஷாருக்கான் என்பதும்தான். டாடா ஹேரியர் EV, டாடா சியரா EV, BYD சீல், MG4, கியா EV6 என்று எல்லா அரங்கங்களுமே எலெக்ட்ரிக் மயமாகவே காட்சியளித்தன. இருசக்கர வாகனங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். முக்கியமான இருசக்கர வாகனத் தயாரிப்பாளர்கள் பலரும் ஆட்டோ எக்ஸ்போவில் இல்லை என்றாலும்... அவர்கள் முதலீடு செய்திருக்கும் EV வாகன உற்பத்தியாளர்கள் பலரும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். அல்ட்ராவயலட், டார்க், மேட்டர் துவங்கி டிவிஎஸ்-ன் ஐக்யூப் ST வரை மின்சார வாகனங்கள் பலவும் ஆட்டோ எக்ஸ்போவில் வெளிச்சம் பாய்ச்சின.
`மின்சார வாகனம் என்பது கார் மற்றும் இருசக்கர வாகனங்களோடு முடிந்துபோவது இல்லை' என்று சொல்வதுபோல கமர்ஷியல் வாகனங்கள், கனரக வாகனங்கள் ஆகியவையும் ஆட்டோ எக்ஸ்போவில் தனித்தடம் பதித்திருந்தன. மின்சாரத்தைத் தாண்டி ஹைட்ரஜனில் இயங்கும் வாகனங்கள் வரை இங்கே அணிவகுத்து நின்றிருந்தன. இன்னொருபுறம், புது டெல்லி பிரகதி மைதானத்தில் உதிரிபாகங்கள் கண்காட்சி பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. ஆட்டோ எக்ஸ்போவில் சில முக்கியமான பெயர்கள் விடுபட்டுப் போயிருந்தன. ஆனால், உதிரிபாகங்கள் கண்காட்சியில் சொல்லிவைத்தாற்போல அனைத்து நிறுவனங்களும் கலந்து கொண்டது மகிழ்ச்சியான ஆச்சரியம்.
இத்தனைக்கும் இடையே ஆட்டோ எக்ஸ்போ மோட்டார் ஷோவில் மோட்டார் விகடன் அமைத்திருந்த அரங்கமும் - ஏராளமான வாசகர்கள், ஆட்டோமொபைல் ஆர்வலர்கள், ஆட்டோமொபைல் துறையைச் சேர்ந்தவர்கள் ஆகியோரை ஈர்த்தது.
- ஆசிரியர்
மேலும் படிக்க அன்பு வணக்கம்!